Friday, August 4, 2023

955. பற்றாக்குறை பட்ஜெட்!

"இந்த மாச பட்ஜெட்ல ஆயிரம் ரூபா துண்டு விழுதே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் மீனா.

"ஒவ்வொரு மாசமும் நடக்கறதுதானே இது? சமாளிச்சுக்கலாம்!" என்றான் ஶ்ரீகாந்த், சிரித்துக் கொண்டே.

"நீ சிரிக்கற! எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு. எப்படிப்பட்ட பரம்பரை நம்மோடது! உங்க தாத்தா காலத்தில, வெளியூர்க்காரங்க, உள்ளூர்காரங்கன்னு தினமும் பத்து பேர் நம்ம வீட்டில வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க. கல்யாணமாகி வந்த புதுசில நானே பாத்திருக்கேன். உங்க தாத்தா காலத்திலேயே சொத்தெல்லாம் கரைய ஆரம்பிச்சு, உங்க அப்பா காலத்திலே ஒண்ணுமில்லாம ஆயிடுச்சு. அப்படியும், உங்கப்பாகிட்ட யாராவது உதவி கேட்டா, சட்டைப் பையில இருக்கற காசை எடுத்துக் கொடுத்துடுவாரு. அப்ப, நாலணா எட்டணாவுக்கெல்லாம் கூட நிறைய மதிப்பு இருந்ததே! இப்ப, நீ சம்பாதிக்கற பணம் போதாம, மாசாமாசம் பற்றாக்குறை பட்ஜெட் போடற நிலைமைக்கு வந்துடுச்சு!" என்றாள் ஶ்ரீகாந்த்தின் தாய் கல்யாணி.

"பழசைப் பேசி என்னம்மா பிரயோசனம்?" என்றான் ஶ்ரீகாந்த்.

அப்போது அழைப்பு மணி அடிக்கவே, கதவைத் திறந்து பார்த்தான் ஶ்ரீகாந்த். அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். 

கல்யாணியும், மீனாவும் உள்ளே சென்று விட்டனர்.

சற்று நேரம் கழித்து முன்னறைக்கு வந்த மீனா, "வந்தது யாருங்க?" என்றாள் ஶ்ரீகாந்த்திடம்.

"காலேஜில படிக்கற பையன். வசதி இல்லாதவன் போல இருக்கு. காலேஜ் ஃபீஸ் கட்டப் பணம் இல்லை, உதவி செய்யுங்கன்னு கேட்டான். அவனோட ஐ.டி, காலேஜிலேந்து வந்திருந்த ஃபீஸ் டிமாண்ட் நோட்டீஸ் எல்லாம் வச்சிருந்தான். ஜெனுவைன் கேஸ்தான்!" என்றான் ஶ்ரீகாந்த்.

"என்ன செஞ்சீங்க?" என்றாள் மீனா.

"ஐநூறு ரூபா கொடுத்தேன். நம்மால முடிஞ்சது அவ்வளவுதானே?"

"நாமே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம். பட்ஜெட்ல ஆயிரம் ரூபாய் துண்டு விழுதுன்னு இப்பதான் பேசிக்கிட்டிருந்தோம். இது அவசியம்தானா?" என்றாள் மீனா, சற்றுக் கோபத்துடன்.

"ஆயிரத்தைந்நூறு ரூபாய் துண்டு விழுதுன்னு வச்சுக்க வேண்டியதுதான்!" என்றான் ஶ்ரீகாந்த், சிரித்துக் கொண்டே.

"உதவி செய்யணும்னு நினைச்சா, ஒரு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பி இருக்கலாமே?" என்றாள் மீனா, கோபம் குறையாமல்.

"அவன் கட்ட வேண்டிய ஃபீஸ்ல, நாம கொடுத்த ஐநூறு ரூபாயே ஒரு சின்னப் பகுதிதான். மீதிப் பணம் அவனுக்குக் கிடைக்கணுமேன்னு நான் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்!"

"என்னவோ போங்க!" என்றபடியே, உள்ளே போகத் திரும்பினாள் மீனா.

அப்போது, உள்ளிருந்து முன்னறைக்கு வந்த கல்யாணி, "அவனால கொடுக்காம இருக்க முடியாது. அவன் உடம்பில ஓடற ரத்தம் அப்படி!" என்றாள் பெருமையும், வருத்தமும் கலந்த குரலில்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

பொருள்: 
பழம்பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள், வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...