Friday, August 4, 2023

911. புதிய ஊரில் ஒரு புதிய அறிமுகம்!

வாசு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து, தங்குவதற்கு நல்ல ஹோட்டல் ஏதும் அருகில்  இருக்கிறதா என்று பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவன் பின்புறமிருந்து "சார்! ஒரு நிமிஷம்!" என்று ஒரு குரல் கேட்டது.

வாசு திரும்பிப் பார்த்தான். இளமைத் தோற்றத்துடன் இருந்த ஒரு பெண் அவன் அருகில் வந்து, "என் பெயர் வந்தனா!" என்றபடியே, தன் கையை நீட்டினாள்.

தயக்கத்துடன் அவளுடன் கைகுலுக்கிய வாசு, "நீங்க யாருன்னு எனக்குத் தெரியலையே!" என்றான்.

"ஊருக்குப் புதுசா வந்து இறங்கறவங்களுக்கு உதவி செய்யறது என்னோட பழக்கம். நல்ல ஹோட்டல் எதுன்னுதானே தேடிக்கிட்டிருக்கீங்க? நல்ல ஹோட்டலை நான் காட்டறேன், வாங்க!" என்று அவன் கையைப் பற்றி இழுத்தாள்.

விருக்கென்று கையை உதறிக் கொண்ட வாசு, "அதெல்லாம் வேண்டாம். நான் பாத்துக்கறேன்!" என்று கூறி நடக்க ஆரம்பித்தான்.

அவனுடனே நடந்து வந்த வந்தனா என்ற அந்தப் பெண், "சார்! நான் நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு வசதியானவளாத் தெரிஞ்சாலும், நான் ஒரு ஏழை. எனக்கு யாரும் இல்லை. தங்கறதுக்கு இடமும் இல்லை. பகல்ல எல்லாம் எங்கேயாவது பார்க்லேயோ, ஹோட்டல் லாபியிலேயோ உக்காந்திருப்பேன். ஆனா, ராத்திரி என்ன செய்யறது? இன்னிக்கு ராத்திரி மட்டும் உங்க அறையில தங்கிக்கறேனே! காலையில போயிடுவேன்!" என்று கூறி விட்டு, அவன் காதருகில் வந்து, "நூறு ரூபா கொடுத்தா போதும். ராத்திரி முழுக்க நான் உங்களுக்கு சொந்தம்!" என்று கூறிச் சிரித்து விட்டு, அவன் கையைப் பற்றி அழுத்தினாள்.

வாசுவுக்கு உடல் முழுவதும் சில்லிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

"நான் அப்படிப்பட்டவன் இல்லைம்மா" என்று கூறி விட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தான் அவன்.

"யாருமே அப்படிப்பட்டவங்க இல்லை, சார்! இதெல்லாம் ஒரு ஜாலிதானே! ஹோட்டல்ல எதுவும் கேக்க மாட்டாங்க. எல்லாமே சேஃபா இருக்கும்" என்ற வந்தனா, "ஹோட்டல் விஜயாவுக்குப் போங்க. அங்கே எல்லாமே நல்லா இருக்கும். நான் ஹோட்டல் வாசல்ல நின்னுக்கிட்டிருப்பேன். உங்களுக்கு விருப்பம்னா, என்னைக் கூப்பிடுங்க! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நீங்க ஒத்துக்கிட்டா, என் அதிர்ஷ்டம்தான்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே, அவன் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி விட்டு, வேகமாக நடந்து சென்று விட்டாள்.

வேறு ஏதாவது ஹோட்டலுக்குத்தான் செல்ல வேண்டும் என்று முதலில் நினைத்த வாசு, 'சரி. அந்த விஜயா ஹோட்டலுக்குத்தான் போய்ப் பார்ப்போமே! அது நல்லா இருந்தா, அங்கே தங்கிக்கலாம். ஆனா, அவள் வேண்டாம்!' என்று முடிவு செய்து, விஜயா ஹோட்டல் எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு போனான்.

ஹோட்டல் வாசலில் வந்தனா நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், தன்னை அறியாமலேயே "வா!" என்றான் வாசு.

றுநாள் காலை, வாசு உறக்கத்திலிருந்து விழித்தபோது, பக்கத்தில் படுத்திருந்த வந்தனா இல்லை.

உள்ளணர்வின் உந்துதலில் மேஜை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தான் வாசு. ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது.

அருகில் சென்று பார்த்தபோது, பெட்டியின் பூட்டு திறக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தான். துணிகளுக்கடியில் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாய் கொண்ட கவரைக் காணவில்லை.

அலுவலக வேலையாக அந்த ஊருக்கு வந்ததால், செலவுக்காக அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பணம்.

அந்தப் பெண் அவனை நன்கு ஏமாற்றி இருக்கிறாள். ஹோட்டல்காரர்களும் இதற்கு உடந்தையாக இருக்கலாம். 

என்ன செய்வது? போலீசில் புகார் கொடுக்க முடியாது. பத்து மணிக்கு மேல் அலுவலகத்துக்கு டிரங்க் கால் செய்து, பணம் தொலைந்து விட்டதாகக் கூறி செலவுக்குப் பணம் ஏற்பாடு செய்யுமாறு கேட்க வேண்டும். எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்று தெரியவில்லை. பாங்க்கில் டிராஃப்ட் எடுத்து அனுப்பினாலும், வந்து சேர ஒரு நாளாவது ஆகும். பணம் எப்படித் தொலைந்தது, போலீசில் ஏன் புகார் செய்யவில்லை என்றெல்லாம் கேட்பார்கள். பதில் சொல்லிச் சமாளிப்பது கடினம்தான்.

ஹோட்டலுக்குச் செலுத்திய முன்பணத்தில், ஹோட்டல் அறை வாடகையைக் கழித்துக் கொள்ளச் சொல்லி விட்டு, பர்சில் இருக்கும் பணத்தில் டிக்கட் வாங்கிக் கொண்டு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.

இதனால், நிறுவனத்தில் தான் நகைப்புக்குரிய ஒரு பொருளாக ஆவதுடன், தன் நற்பெயரும் நம்பகத்தன்மையும் கெடப் போவது நிச்சயம்.

ஒரு விலைமகள் தன்னை அழைத்தபோது, அதை நிராகரிக்காமல், சபலத்தில் செய்த செயல் எத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்தப் போகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, வாசுவுக்குத் தன்னை தண்டித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

பொருள்: 
அன்பினால் விரும்பாமல், பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தையே கொடுக்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...