"நம்ம கம்பெனியைப் பத்தின சில முக்கியமான தகவல்கள் நம்ம போட்டி கம்பெனியான கணேஷ் என்டர்பிரைசஸுக்குப் போகுதுன்னு நான் சந்தேகப்படறேன்!" என்றார் நிர்வாக அதிகாரி அழகிரி.
"எப்படி சார் சொல்றீங்க?" என்றார் கண்காணிப்பு அதிகாரி கிருபாகரன்.
"நாம செய்யப் போற சில விஷயங்கள் அவங்களுக்கு முன்னாலேயே தெரிஞ்சு, அவங்க நமக்கு முன்னாலேயே அதைச் செஞ்சுடறாங்க. இது மாதிரி ரெண்டு மூணு தடவை நடந்திருக்கு. அதனால, இது தற்செயலானதா இருக்க முடியாது."
"சரி, சார். நான் பாக்கறேன்"
"சார்! நீங்க சந்தேகப்பட்டது சரிதான். நம்ம ஊழியர்கள்ள ஒத்தன்தான் சில முக்கியமான விவரங்களை ஈமெயில் மூலமா நம்ம போட்டி நிறுவனத்துக்கு அனுப்பறான். அது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்" என்றார் கிருபாகரன்.
"யாரு?" என்றார் அழகிரி.
"நடேசன்தான்!"
"நடேசனா? அவன் ரொம்ப நல்ல பையனாச்சே! அவன் குடும்பத்தைப் பத்தி எனக்குத் தெரியுமே!" என்றார் அழகிரி, வியப்புடன்.
"யாரையுமே நம்ப முடியாது, சார். ஒத்தர் தப்பு செய்வார், செய்ய மாட்டார்னெல்லாம் சொல்லவே முடியாது. ஒரு விஜிலன்ஸ் ஆஃபீசரா என்னோட அனுபவம் இது."
"அவன்தான் செஞ்சான்கறதுக்கு ஆதாரம் இருக்கா?"
"இருக்கு, சார். அவனோட பர்சனல் ஈமெயில் ஐடியிலேந்துதான் தகவல்கள் போயிருக்கு."
அழகிரி கண்களை மூடிக் கொண்டு யோசனை செய்தார்.
"என்ன சார் யோசிக்கிறீங்க? போலீஸ்ல புகார் கொடுக்கலாமா, நாமே டீல் பண்ணிடலாமான்னா?" என்றார் கிருபாரன்.
"அதுக்கு முன்னால ஒரு வேலை இருக்கு. ரெண்டு மூணு நாள் வெயிட் பண்ணுங்க. இது விஷயமா எதுவும் செய்யாதீங்க. யார்கிட்டேயும் பேசாதீங்க!" என்றார் அழகிரி.
நான்கைந்து நாட்கள் கழித்து, கிருபாகரனைத் தன் அறைக்கு அழைத்த அழகிரி, "கிருபாகரன்! கணேஷ் என்டர்பிரைசஸுக்குத் தகவல் அனுப்பினது நடேசன் இல்ல, தனராஜ்" என்றார்.
"எப்படி சார்? நடேசனோட ஈமெயில் ஐடியிலேந்துதானே தகவல் போயிருக்கு? நான் செக் பண்ணினேனே!" என்றார் கிருபாகரன்.
"நீங்க செக் பண்ணினது சரிதான். ஆனா, நடேசனோட ஈமெயிலை தனராஜ் ஹேக் பண்ணி, அதுலேந்து தகவல்களை அனுப்பி இருக்கான்."
"எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"
"நான் கண்டுபிடிக்கல. சைபர் கிரைம்ஸை இன்வெஸ்டிகேட் பண்ற என்னோட நண்பன் ஒத்தன்கிட்ட சொல்லி இதை செக் பண்ணச் சொன்னேன். அவன் கண்டுபிடிச்சுச் சொன்னதுதான் இது. உங்க மேல தப்பு இல்ல. சைபர் கிரைம்ஸைக் கண்டுபிடிக்கத் தனி நிபுணத்துவம் வேணும் இல்லையா?"
"நடேசன் செஞ்சிருக்க மாட்டான்னு அன்னிக்கே சொன்னீங்களே? அது எப்படி சார்? வெறும் நம்பிக்கையா, இல்லை, இன்டியூஷனா?"
அழகிரி பெரிதாகச் சிரித்து விட்டு, "எனக்கு இன்டியூஷன் எல்லாம் கிடையாது, கிருபாகன். மனித இயல்புகளைப் பத்தின சில நம்பிக்கைகள் மட்டும் உண்டு. நடேசனோட குடும்பத்தைப் பத்தி எனக்குத் தெரியும். அவன் அப்பா, தாத்தா எல்லாருமே ரொம்ப நேர்மையானவங்க. பணத்துக்காகத் தப்பான காரியங்களைச் செய்ய மாட்டாங்க. நடேசனும் அதே கொள்கையோடதான் வாழ்ந்துக்கிட்டிருக்கற மாதிரி எனக்குத் தோணிச்சு. பணம் கொடுத்தா அரசாங்க வேலை கிடைக்கும்கற வாய்ப்பு அவனுக்கு வந்தப்ப, அதை வேண்டாம்னு ஒதுக்கிட்டான் அவன். தன் குடும்பப் பண்புப்படி நேர்மையா வாழணும்னு நினைக்கிறவன் இப்படிப்பட்ட காரியங்கள்ள ஈடுபட மாட்டான்னு நினைச்சுதான், நீங்க சொன்னதை உறுதிப்படுத்திக்கறதுக்காக, என் நண்பன்கிட்ட சொல்லி இதை செக் பண்ணச் சொன்னேன். என்னோட நம்பிக்கை தப்பாகல!" என்றார், பெருமையுடன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை
குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
பொருள்:
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு, தகுதியில்லாதவற்றைச் செய்ய மாட்டார்.
No comments:
Post a Comment