Friday, August 4, 2023

910. பெரியப்பாவுடன் ஒரு பயணம்!

"நீங்க அடிக்கடி உங்க பெரியப்பாவைப் போய்ப் பார்த்துட்டு வரது எனக்குப் பிடிக்கலை" என்றாள் பரிமளா, தன் கணவன் விஸ்வாவிடம்.

"உனக்கு எதுக்குப் பிடிக்கணும்? நான்தானே அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்! உன்னையும் வரச் சொல்லிக் கேக்கலியே!" என்றான் விஸ்வா.

"கல்யாணத்துக்கு முன்னால நீங்க எப்படிவேணும்னா இருந்திருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கப்புறம், நீங்க மனைவியோட விருப்பத்தை மதிச்சு நடந்துக்கணும்!"

"என்னவோ கல்யாணத்துக்கு முன்னால நான் குடிச்சுக் கும்மாளம் போட்டுக்கிட்டிருந்த மாதிரி பேசற! என் பெரியப்பா தனியா இருக்காரு. அவரோட ரெண்டு பையன்களும் வெளிநாட்டில இருக்காங்க. அதனால, நான் அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன். இதில, உனக்கு என்ன பிரச்னை?" என்றான் விஸ்வா, கோபத்துடன்.

"மனைவியோட விருப்பத்தை நீங்க மதிக்கலைங்கறதுதான் பிரச்னை!" என்றாள் பரிமளா.

"எதுக்கு ஒரு வாரம் வெளியூர் போகணும்னு சொல்றீங்க? ஆஃபீஸ் வேலையா?" என்றாள் பரிமளா.

"ஆஃபீஸ் வேலை இல்லை. ஆஃபீசுக்கு லீவு போட்டிருக்கேன். என் பெரியப்பா தன்னோட குலதெய்வம் கோவிலுக்குப் போகணும்னாரு. அவருக்குத் துணையா நானும் அவரோட போறேன்!" என்றான் விஸ்வா.

"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்னு சொல்லுவாங்க. அது மதிரி இருக்கு! நான் உள்ளூர்லேயே அவரைப் போய்ப் பார்க்காதீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க அவரோட வெளியூருக்குப் போறேங்கறீங்க! நான் சொல்றதை ஒரு பொருட்டா மதிக்க மாட்டீங்களா?" என்றாள் பரிமளா, அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்.

"பரிமளா! நான் உங்கிட்ட அன்பா இருக்கேன். உன்னை எத்தனையோ இடங்களுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிருக்கேன். உன்னோட விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா, நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டணும்னு எதிர்பார்க்காதே! நீ சொல்ற தப்பான விஷயங்களையோ, நியாயமில்லாத விஷயங்களையோ என்னால செய்ய முடியாது. என் வேலையில லஞ்சம் வாங்கச் சொல்லி நீ சொன்னா, நான் வாங்குவேனா? அது மாதிரிதான். என் பெரியப்பாவுக்கு நான் ஆதரவா இருக்கறதைத் தடுக்கணும்னு நீ நினைச்சா, அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்!" என்றான் விஸ்வா, உறுதியான குரலில்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 910:
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

பொருள்: 
சிந்திக்கும் ஆற்றலும், நெஞ்சுறுதியும் உடையார்க்கு, எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...