Friday, July 28, 2023

954. நாங்கள் அப்படித்தான்!

"இந்த வேலை ரொம்ப சுலபம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகணும், அவ்வளவுதான்" என்றான் சக ஊழியன் குமார்.

"அட்ஜஸ்ட் பண்றதுன்னா?" என்றான் முருகேசன். சில நாட்கள் முன்புதான், அவன் அந்த அரசுத் துறையில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

"இங்கே பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிப்பாங்க. விதிமுறைப்படிப் பார்த்தா, ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்குத்தான் வேலை கொடுக்கும்படியா இருக்கும். ஆனா, மேலதிகாரிகள் வேற ஒரு ஒப்பந்ததாரருக்கு வேலை கொடுக்கணும்னு விரும்புவாங்க."

"அவங்க ஏன் அப்படி விரும்பணும்?"

"அப்பாவியா இருக்கியே!" என்று சிரித்த குமார், பணத்தை எண்ணுவது போல் விரல்களைக் கசக்கிக் காட்டி விட்டு, "விதிமுறைகளைப் பத்திக் கவலைப்படாம, மேலதிகாரிகளோட விருப்பப்படி நாம பேப்பர் தயார் பண்ணணும்!" என்றான்.

பிறகு முருகேசனிடம் குனிந்து, "எப்படியும் சராசரியா, ஒரு மாசத்தில நம்ம சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு கூடுதல் வருமானம் நமக்குக் கிடைக்கும்!" என்றான்.

முருகேசன் மௌனமாக இருந்தான். அவன் தந்தை அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் அவனுக்கு நினைவு வந்தது.

"திருமாலடியார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் திருமால் மேல நிறைய பாடல்களை எழுதி இருக்காரு. அவரோட பாடல்களைக் கேட்டுட்டு, அந்த நாட்டு அரசர் அவரைத் தன்னோட அவைப் புலவரா நியமிக்கறதா சொன்னார். அவைப் புலவர்னா, அரசரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதணும். நிறைய பொற்காசுகள் கிடைக்கும். ஆனா, அவர் மாட்டேன்னுட்டாரு. 'திருமாலை மட்டும்தான் பாடறதுன்னு விரதம் எடுத்துக்கிட்டிருக்கேன், அதனால மனுஷங்களைப் பாட முடியாது'ன்னு சொல்லிட்டாரு. உண்மையில, அவர் பணத்துக்காக மன்னரைப் புகழ்ந்து பாட விரும்பல. அவரோட பரம்பரையில வந்தவங்க நாம். எந்த ஒரு செயலா இருந்தாலும், அது சரியானதுன்னா மட்டும்தான் அதைச் செய்யணும். ஒரு விஷயம் தப்புன்னு நமக்குத் தோணினா, நமக்கு அதனால எவ்வளவு பணம் கிடைச்சாலும் சரி, வேற நன்மைகள் கிடைசாலும் சரி, அதைச் செய்யக் கூடாது."

தன் பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் விதத்தில், குமாரின் தந்தையும் ஒரு நேர்மையான மனிதராகத்தான் வாழ்ந்து வந்தார்.

"என்னப்பா, நான் அவ்வளவு தூரம் சொன்னேன்! அப்படியும் விதிப்படிதான் நடப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறியாமே! நம்ம அதிகாரி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாரு. உனக்கு புத்தி சொல்லச் சொன்னாரு. உனக்கு இதில எந்த பிரச்னையும் இல்லை. அதிகமா சம்பாதிக்க சுலபமான வழி இருந்தும், ஏன் அதைப் பயன்படுத்திக்க மாட்டேங்கற?" என்றான் குமார்.

'நாங்க அப்படித்தான்!' என்று சொல்ல நினைத்த குமார், "நான் அப்படித்தான்!" என்றான் சுருக்கமாக.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

பொருள்: 
கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற முடியும் என்றாலும், நல்ல குடும்பத்தில் பிறந்தவர், தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்ய மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...