Thursday, August 10, 2023

915. பட்டியலைத் திருத்துக!

"அமைச்சரே! சில அறிஞர்களை கௌரவிக்க முடிவு செய்து, ஒரு பட்டியல் தயாரித்திருக்கிறோம் அல்லவா?" என்றார் அரசர்.

'தயாரித்தோமா? நீங்கள் தயாரித்த பட்டியல் அல்லவா அது?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அமைச்சர், "ஆம் அரசே!" என்றார்.

"அவர்களை கௌரவித்துச் சிறப்பிக்க ஒரு நாள் குறித்து, அவர்களை அவைக்கு வரச் சொல்லி அழைப்பு அனுப்பி விடுங்கள்!"

ஏதோ சொல்ல வாயெடுத்த அமைச்சர், தன் மனதை மாற்றிக் கொண்டு, "அப்படியே ஆகட்டும் அரசே!" என்றார்.

"வாருங்கள், ராஜகுருவே!" என்று ராஜகுருவை வரவேற்றார் அரசர்.

"சில அறிஞர்களை கௌரவித்துப் பரிசளிக்கத் தீர்மானித்திருக்கிறாயாமே! பாராட்டுக்கள்!" என்றார் ராஜகுரு.

"ஆமாம், ராஜகுருவே! இது என் நீண்ட நாள் விருப்பம்."

"நல்ல நோக்கம்தான். இந்தச் செய்தி அறிந்ததும், கௌரவிக்கப்படப் போகும் அறிஞர்களின் பட்டியலை அமைச்சரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன்."

"மன்னிக்க வேண்டும், ராஜகுருவே! நிகழ்ச்சிக்குத் தங்களை நேரில் வந்து அழைக்கும்போது, பட்டியலைத் தங்களிடம் காட்டலாம் என்றிருந்தேன்" என்றார் அரசர், சங்கடத்துடன்.

"அதில் தவறில்லை. ஆனால், பட்டியலில்தான் ஒரு தவறு இருக்கிறது!"

"என்ன தவறு, ராஜகுருவே?" 

"கௌரவிக்கப்படுபவர்கள் பட்டியலில், இரும்புருக்கிக் கவிஞரும் இருக்கிறார்.

"ஆம் ராஜகுருவே! அவர் பெரும் புலவர் அல்லவா? அவர் பாடலைக் கேட்டால் இரும்பு கூட உருகும் என்பதால்தானேஅவர் இரும்புருக்கிக் கவிஞர் என்று அழைக்கப்பட்டு, அவருடைய இயற்பெயரே மறந்து விடும் அளவுக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டது! அவர் ஒரு பெரிய அறிஞர் என்றும் அறியப்படுபவர் அல்லவா?"

"ஆனால், அவர் விலைமாதரை நாடும் பழக்கம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றல்லவா?"

"ராஜகுருவே! அது அவருடைய ஒழுக்கக் குறைவாக இருக்கலாம். ஆனால், நாம் அவரை கௌரவிப்பது அவருடைய புலமைக்காகத்தானே தவிர, அவருடைய ஒழுக்கத்துக்காக இல்லையே!" என்றார் அரசர்.

"அரசே! நல்லறிவு உடையவர், விலைமகள் மூலம் கிடைக்கும் தவறான இன்பத்தை நாட மாட்டார். அப்படி நாடுபவரை நல்லறிவு உள்ளவர் என்று கூற முடியாது. அவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதுதான் உனக்கு கௌரவம்!" என்றார் ராஜகுரு.

அரசர் மௌனமாக இருந்தார்.

"அரசே! ஒழுக்கமற்ற ஒருவருக்கு உயர்ந்த பரிசு கொடுத்தால், அந்தப் பரிசே மதிப்பிழந்து போவதுடன், உன்னையும் நாட்டு மக்கள் தூற்றுவார்கள். அமைச்சரே இதை உன்னிடம் சொல்லிப் பட்டியலிலிருந்து இரும்புருக்கிக் கவிஞரின் பெயரை நீக்க வேண்டும் என்று கோர விரும்பினார். ஆனால், நீ தயாரித்த பட்டியலிலிருந்து ஒரு பெயரை நீக்க வேண்டும் என்று உன்னிடம் சொல்லத் தயங்கி, அவர் என்னை அணுகினார். அமைச்சர் சொல்வது எப்போதும் சரியாக இருக்கும் என்பது நீ அறிந்ததுதானே?" என்றார் ராஜகுரு, சிரித்தபடி.

"ராஜகுருவே! அமைச்சர் சொல்வது மட்டுமல்ல, தாங்கள் சொல்வதும் சரியாகத்தான் இருக்கும் என்பது நான் அறியாததா? இப்படி ஒரு தவறை எப்படிச் செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தாங்கள் கூறியபடி, அவர் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கி விடுகிறேன்" என்றார் அரசர்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 915:
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

பொருள்: 
இயற்கையறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொதுமகளிர் மூலம் கிடைக்கும் புன்மையான நலத்தை (இன்பத்தை) நாட மாட்டார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...