ஒருநாள் துரையிடமே கேட்டு விட்டாள்.
"ராத்திரி சாப்பாட்டுக்கப்புறம் வெளியே எங்கேயோ போயிட்டு லேட்டா வரீங்க. இது மாதிரி அடிக்கடி நடக்குது. எங்கே போறீங்கன்னு கேட்டா, சொல்ல மாட்டேங்கறீங்க! ஊல கண்டபடி பேசிக்கறாங்க."
"என்ன பேசிக்கறாங்க?" என்றான் துரை.
"அதை என் வாயால சொல்லணுமா?"
"மரகதம்! நான் சொல்றதைப் பொறுமையாக் கேளு. உன் மேல எனக்கு அன்பு இருக்கு. ஒருநாள், ஏதோ ஒரு ஆசையில அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போனேன். அவ தப்பான தொழில் பண்றவதான். ஆனா, எங்கிட்ட ரொம்ப அன்பா இருக்கா. அதனாலதான், அவளைப் பார்க்க சில சமயம் போறேன்" என்றான் துரை, சங்கடத்துடன்.
"இதைச் சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல?" என்றாள் மரகதம், கோபத்துடனும், அழுகையுடனும்.
"அதான் சொன்னேனே! முதல் தடவை போனது ஒரு சபலத்தினாலதான். ஆனா, இப்ப போறதுக்குக் காரணம் அவ என் மேல அன்பு வச்சிருக்கறதுதான்."
"நான் உங்க மேல அன்பு வைக்கலையா, இல்லை, என்னோட அன்பு உங்களுக்குப் பத்தலையா?"
"உன்னோடதானே குடித்தனம் நடத்தறேன்? இதெல்லாம் வீட்டுச் சாப்பாடு சாப்பிடறவங்க சில சமயம் ஓட்டல்ல சாப்பிடற மாதிரிதான்" என்று சொல்லி, விவாதத்தை முடித்தான் துரை.
"இப்ப எதுக்குடா உனக்கு ஒரு லட்ச ரூபாய்?" என்றான் துரையின் நண்பன் விமல்.
"அந்தப் பொண்ணு தொழிலை விட்டுட்டு என்னோட மட்டும் வாழறதாச் சொல்றா. ஆனா அவ தொழிலை விடணும்னா, அவளோட ஏஜன்ட்டுக்கு ஒரு லட்ச ரூபா பணம் கொடுக்கணுமாம். நான் அவளுக்கு உதவறது என் மனைவிக்குத் தெரியக் கூடாது. அதனால, ஆஃபீஸ்ல பி எஃப் லோன் போட்டிருக்கேன். அந்தப் பணம் வந்ததும், உன் பணத்தைக் கொடுத்துடறேன்" என்றான் துரை.
"பி எஃப் லோனை எப்படி அடைப்ப?"
"அதை அடைக்க வேண்டாம். நான் ரிடயர் ஆகும்போது எனக்கு வர வேண்டிய பணத்தில அதைக் கழிச்சுப்பாங்க. அதனால, இது என் மனைவிக்கு எப்பவுமே தெரிய வராது."
"நல்லாத்தான் திட்டம் போடற. சரி, அவளை நீ எப்படிப் பராமரிப்ப? வீட்டு வாடகை, குடும்பச் செலவு எல்லாம் இருக்கே!"
"அவ இருக்கற குடிசை வீடு அவ சொந்த வீடுதான். அவ சாப்பாட்டுச் செலவுக்குத்தான் பணம் வேணும். 'அதைக் கூட ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிச்சுக்கறேன், உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பல, உங்க அன்பு மட்டும்தான் வேணும்'னு சொல்றாடா அவ!" என்றான் துரை, பெருமையுடன்.
"எனக்கென்னவோ இது சரியாப் படல. நீ கேக்கறதால பணம் கொடுக்கறேன். ஆனா, நீ சொன்னபடி, லோன் கிடைச்சதும் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடணும்!" என்றான் விமல்.
"இந்தாடா, நீ கொடுத்த பணம்" என்று பணத்தை விமலிடம் கொடுத்தான் துரை.
"என்ன, புதுப் பொண்டாட்டியோட தனிக்குடித்தனம் ஆரமிச்சாச்சா? அவளை புதுப் பொண்டாட்டின்னு சொல்லலாம் இல்ல?" என்றான் விமல், சிரித்துக் கொண்டே.
சில விநாடிகள் மௌனமாக இருந்த துரை, "நான் ஏமாந்துட்டேண்டா. எங்கிட்ட ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டு, அவ வேற ஒத்தனோட இந்த ஊரை விட்டே ஓடிட்டா" என்றான், ஏமாற்றத்துடன்.
"அடிப்பாவி! சொந்த வீட்டில இருக்கான்னு சொன்னியே!"
"அது பொய். அது வாடகை வீடுதானாம். வேற ஒத்தனோட ஊரை விட்டு ஓடறதுக்காக, எங்கிட்ட பொய் சொல்லி ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டா. ஏஜன்ட்டுக்குக் கொடுக்கணும்னு சொன்னதெல்லாம் பொய். ஏஜன்ட்னெல்லாம் யாருமே இல்லையாம். அவ எங்கிட்ட அன்பாப் பேசினதைக் கேட்டு ஏமாந்துட்டேன்."
"சரி போ. இந்த அளவோட விட்டாளே! இனிமேயாவது உன் மனைவிக்கு உண்மையா நடந்துக்க!" என்றான் விமல்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)
குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
No comments:
Post a Comment