Wednesday, August 9, 2023

914. ஆக்டிவிஸ்ட் கோபால்

"அந்த ஆக்டிவிஸ்ட் கோபாலைப் பத்தித் தகவல் சேகரிக்கச் சொன்னேனே, சேகரிச்சீங்களா?" என்றார் தொழிலதிபர் முருகவேல்.

"சேகரிச்சேன், சார். ரொம்ப எளிமையான மனுஷன். வக்கீல் தொழில் செய்யறாரு. மனைவியோட சின்னதா ஒரு வாடகை வீட்டில குடி இருக்காரு. பணவசதி இல்லாதவங்களுக்கு இலவசச் சட்ட உதவி செய்யறாரு. அதைத் தவிர, சுற்றுச் சூழல் மாசுபாட்டை எதிர்த்து வழக்குப் போடறது, போராட்டம் நடத்தறது, இன்னும் பல சமூக சேவைகள்ள ஈடுபட்டிருக்காரு. சுமாரான வருமானம்தான். ஆனா, ரொம்ப நேர்மையானவர். பணத்தால விலைக்கு வாங்க முடியாது" என்றார் டிடெக்டிவ் ஏஜன்சி உரிமையாளர் சரண்ராஜ்.

"எங்க தொழிற்சாலைக்கு எதிரா நிறையப் போராட்டம் பண்றான். அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வணும். பணத்தால முடியாதுன்னு சொல்றீங்களே!" என்றார் முருகவேல், ஏமாற்றத்துடன்.

"வேற ஏதாவது வழி இருக்கான்னு பாக்கறேன்" என்றார் சரண்ராஜ், யோசித்தபடியே.

ன்னுடன் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த சரளாவை ஆரம்பத்தில் கோபால் பொருட்படுத்தாவிட்டாலும், அவளுடைய உற்சாகம், ஈடுபாடு இவற்றால் ஈர்க்கப்பட்டு, அவளுடன் சற்றுத் தோழமையுடன் பழகத் தொடங்கினான்.

ஒருநாள் இரவு, அடுத்த நாள் நடக்க வேண்டிய போராட்டம் பற்றி இருவரும் கோபாலின் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சரளா திடீரென்று எழுந்து கதவைச் சாத்தி விட்டு, கோபாலை அணைத்துக் கொண்டாள்.

"என்ன இது? விடுங்க!" என்று சரளாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் கோபால்.

"ஒரு பக்கம் வேலை, மறுபக்கம் போராட்டம்னு கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க. உங்களுக்கு ஒரு ரிலாக்சேஷன் வேணாமா?" என்றாள் சரளா, அவன் கைகளைப் பற்றியபடி.

அவள் கையை விலக்கிய கோபால், "உங்க மேல எனக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. இப்ப நீங்க நடந்துக்கறது அதை உறுதிப்படுத்தற மாதிரி இருக்கு. நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல. நீங்க போகலாம்!" என்று கூறி அறைக் கதவைத் திறந்தான்.

"சாரி சார். நான் எத்தனையோ பேரை மயக்கி இருக்கேன். ஆனா, கோபால் விஷயத்தில நான் தோத்துட்டேன்!" என்றாள் சரளா, சரண்ராஜிடம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

பொருள்: 
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள், பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...