Thursday, August 10, 2023

916. அதிர்ஷ்டக்காரன்!

அழகான தோற்றம், அதை எடுத்துக் காட்டும் உடை, பிற ஒப்பனைகள் ஆகியவற்றால் அந்த பார்ட்டியில் அந்தப் பெண் சற்றுத் தனியாகத் தெரிந்தாள். 

அவள் கவனத்தைக் கவரவும், அவளுடன் பேசவும், வயது வித்தியாசமின்றிப் பல ஆண்கள் ஆர்வம் காட்டினர். 

ஆனால், அவள் ஒரு சிலரை மட்டுமே மதித்துப் பேசினாள். அவளைப் பார்த்துச் சிரித்த, அவளிடம் பேச முயன்ற பலரை அவள் லட்சியம் செய்யவில்லை.

"யாருடா அந்தப் பொண்ணு? ஏன் எல்லாரும் அவளை மொய்க்கறாங்க?" என்றான் விஜய், தன் நண்பன் காமேஷிடம்.

"அவளை நிறைய பார்ட்டியில பார்க்கலாம். பார்ட்டி முடிஞ்சதும், அவளைத் தனியா சந்திக்கப் பல பேர் விரும்புவாங்க. ஆனா, யாருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கறதுன்னு அவதான் முடிவு செய்வா!" என்றான் காமேஷ், மெல்லிய குரலில்.

"கால் கேர்ளா?" என்றான் விஜய், அதிர்ச்சியுடன்.

"அவ தன்னை ஒரு ஈவன்ட் ஃபெசிலிடேடர்னு சொல்லிப்பா!"

"ஓ, நிகழ்ச்சிகளை அமைக்கிறவர்! புது மாதிரி பெயர்தான்!" என்றான் விஜய்.

றுநாள், விஜயைத் தொலைபேசியில் அழைத்தான் காமேஷ்.

"நேத்து ஒரு பொண்ணைப் பார்த்தோம் இல்ல?"

"ஆமாம். ஈவன்ட் ஃபெசிலிடேடர்!"

"தப்பா நினைக்காதே. அவகிட்ட எனக்கு ஒரு டேட் கிடைச்சது."

"கங்கிராசுலேஷன்ஸ்" என்றான் விஜய்.

"நல்ல வேளை! திட்டுவியோன்னு நினைச்சேன்...நேத்து அவ உன்னை கவனிச்சிருப்பா போலருக்கு. 'உங்களோட ஒத்தர் இருந்தாரே, அவர் யாரு?'ன்னு கேட்டா. அவளுக்கு உன் மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு போலருக்கு!" என்றான் காமேஷ், தயக்கத்துடன்.

"எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன் நான்!" என்றான் விஜய்.

"இங்க பாரு, விஜய். உன்னோட பிரின்சிபிள்ஸ் பத்தி எனக்குத் தெரியும். நாம பேச்சிலர்ஸ். இதெல்லாம் ஒரு இனிமையான அனுபவம்தானே? அவகிட்ட அப்ளிகேஷன் போட்டுட்டு எத்தனையோ பேர் காத்துக்கிட்டிருக்காங்க. ஆனா, அவளுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கறதில என்ன தப்பு?"

"காமேஷ்! தேடி வந்த அதிர்ஷ்டத்தைப் புறம் தள்ற முட்டாள்னு வேணும்னா என்னை நினைச்சுக்க. பட் ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்!" என்று கூறி, ஃபோனை வைத்தான் விஜய்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)

குறள் 916:
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

பொருள்: 
தன் அழகு மற்றும் முதலியவற்றால் செருக்குக் கொண்டு, தம் புன்மையான இன்பத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...