சேதுவைப் பார்த்து அவள் சிரித்ததும், சேது பதிலுக்குச் சிரித்தான்.
"என் பேர் கிரிஜா. நான் ஆஃபீஸ் வேலையா திருச்சி போறேன். நீங்க?" என்றாள் அவள்.
"நானும் ஆஃபீஸ் வேலையாத்தான் திருச்சி போறேன்" என்றான் சேது.
"எத்தனை நாள் தங்குவீங்க? எங்கே தங்குவீங்க?"
"ரெண்டு நாள். ஹோட்டல்லதான் தங்குவேன். ஏன் கேக்கறீங்க?"
திடீரென்று, கிரிஜாவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்து, அவள் கன்னங்களில் வழிந்தன.
கைக்குட்டையால் கண்ணீரை நாசூக்காகத் துடைத்துக் கொண்ட கிரிஜா, "ஐ ஆம் சாரி" என்றாள்.
"ஏதாவது பிரச்னையா?" என்றான் சேது, சற்றுப் பதட்டத்துடன்.
"தப்பா நினைக்காதீங்க. நான் ஒரு கால் கேர்ள். தன்னோட ரெண்டு நாள் திருச்சியில வந்து தங்கச் சொல்லி ஒத்தர் கூப்பிட்டாரு. அவரோடதான் பஸ்ஸில வந்தேன். இதுக்கு முந்தின ஸ்டாப்பில இறங்கினவர், பஸ்ஸில ஏறல. நான் கண்டக்டர்கிட்ட சொல்லிட்டுக் கீழே இறங்கிப் போய்ப் பார்த்தேன். அவரை எங்கேயும் காணோம். என்னை ஏமாத்திட்டுப் போயிட்டான், அயோக்கியன்!"
சொல்லி முடிக்கும்போது, கிரிஜாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.
"அழாதீங்க. நீங்க சென்னைக்குத் திரும்பிப் போக பஸ் கட்டணத்துக்கு வேண்டிய பணத்தை நான் கொடுக்கறேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கித் திரும்பிப் போயிடுங்க" என்றான் சேது.
"எவ்வளவு நல்ல மனசு சார் உங்களுக்கு! என்னை ஏமாத்திட்டுப் போனவன் மாதிரி அயோக்கியங்க இருக்கற உலகத்தில உங்களை மாதிரி கருணை உள்ளவங்களும் இருக்காங்களே!" என்று கூறி, தன் நன்றியை வெளிப்படுத்துவது போல், அவன் கை மீது தன் கையை வைத்தாள் கிரிஜா.
சேது சங்கடத்துடன் தன் கையை விடுவித்துக் கொண்டான்.
சில நிமிடங்கள் கழித்து, "நான் ஒண்ணு கேட்டா, தப்பா நினைக்க மாட்டீங்களே!" என்றாள் கிரிஜா,.
"கேளுங்க!"
"எப்படியும் பாதி தூரத்துக்கு மேல வந்துட்டேன். அதனால, திரும்பிப் போக வேண்டாம்னு பாக்கறேன்."
சேது மௌனமாக இருந்தான்.
மீண்டும் சேதுவின் மீது தன் கையை வைத்து அழுத்திய கிரிஜா, "இவ்வளவு நல்ல மனசு உள்ள உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உங்களோடயே நானும் ரெண்டு நாள் ஹோட்டல்ல தங்கிக்கறேனே! உங்க மனைவின்னு சொல்லி ஹோட்டல்ல ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். நீங்க திரும்பி வரப்ப, உங்களோடயே வந்துடறேன். எனக்குன்னு ஒரு ரேட் இருக்கு. ஆனா, நீங்க விருப்பமானதைக் கொடுத்தா போதும்" என்றாள், மயக்கும் சிரிப்புடன்.
சேதுவுக்கு உடல் முழுவதும் சில்லென்று ஒரு உணர்வு பரவியது.
"இல்லை, வேண்டாம்" என்றான் சேது, அரை மனதுடன்.
"பிளீஸ்! எனக்கு இது தொழில்தான். ஆனா, உங்க விஷயத்தில எனக்கு இது ஒரு பிளெஷரா இருக்கும்!" என்றபடியே, அவன் கையை மீண்டும் அழுத்தினாள் கிரிஜா.
"எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லை" என்றான் சேது. சொல்லும்போதே, ஏன் இப்படிச் சொன்னோம் என்று நினைத்துக் கொண்டான்.
"பணம்தான் ஒரு பிரச்னை இல்லைன்னு சொன்னேனே!" என்று சொல்லிச் சிரித்தாள் கிரிஜா.
பஸ் அடுத்த நிறுத்தத்தில் நின்றதும், கிரிஜா கீழே இறங்கிச் சென்றாள்.
சில நிமிடங்கள் பஸ் அங்கே நின்றது.
பஸ்ஸின் கதவருகே கிரிஜா ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டு நிற்பதை சேது கவனித்தான். பிறகு அவன் பஸ்ஸில் ஏறியபோது, அவளும் அவன் பின்னே ஏறினாள்.
சேதுவின் இருக்கைக்கு அருகில் அமராமல் அதைத் தாண்டிச் சென்ற கிரிஜா, அந்த இளைஞன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சேதுவைக் கடந்து சென்றபோதோ, அந்த இளைஞன் அருகில் அமர்ந்து கொண்ட பிறகோ, அவள் சேதுவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
'என்னை விட வசதியான ஒருவனைப் பிடித்து விட்டாள் போலிருக்கிறது!' என்று நினைத்த சேதுவுக்கு, அவள் தன்னை நடத்திய விதம் பற்றிக் கோபமும், அவமானமும் ஏற்பட்டாலும், இப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் ஏற்படவிருந்த தொடர்பிலிருந்து தப்பித்து விட்டதை நினைத்து நிம்மதியாகவும் இருந்தது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)
குறள் 912:
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
No comments:
Post a Comment