சண்முகநாதனைப் பார்க்க அவருடைய அலுவலகத்துக்கு வந்த அவருடைய நண்பர் வேலாயுதம், "என்ன சண்முகநாதா, உன் மாப்பிள்ளை மன்மதன் மாதிரி அழகா இருக்கணும்னு பாக்கறியா?" என்றார், கேலியாக.
"நான் பாக்கறது குணத்தைத்தான்!" என்றார் சண்முகநாதன்.
"ஒத்தரோட குணம் எப்படி இருக்கும்னு எப்படி மதிப்பீடு செய்யறது?" என்றார் வேலாயுதம்.
"அதுதான் கஷ்டமா இருக்கு. நல்ல குடும்பத்தில பொறந்தவனா இருக்கானான்னுதான் பாக்கறேன்" என்றார் சண்முகநாதன்.
அப்போது ஒரு இளைஞன் தயங்கிக் கொண்டே, சண்முகநாதனின் அறைக்குள் வந்தான்.
"வா, முரளி!" என்றார் சண்முகநாதன்.
அலுவலக விஷயமாக ஒரு சந்தேகத்தை சண்முகநாதனிடம் கேட்டுத் தெளிந்து கொண்டு விட்டு, அறையை விட்டு வெளியேறினான் முரளி.
"இந்தப் பையன் உன் கம்பெனியில வேலை செய்யறானா?" என்றார் வேலாயுதம்.
"ஆமாம். ஏன் இவனை உனக்குத் தெரியுமா?"
"ஒரு அனாதை இல்லத்தில நடந்த ஒரு நிகழ்ச்சியில இவனைப் பார்த்தேன். இவன் வாலன்ட்டியரா இருந்தான் போல இருக்கு. அந்த நிகழ்ச்சிக்கு வந்த முக்கியமானவங்களை வரவேற்கறது, பார்வையாளர்களுக்கு வழிகாட்டி சரியா உட்கார வைக்கறதுன்னு ரொம்ப சுறுசுறுப்பா இருந்தான். அங்கே நாலைஞ்சு வாலன்ட்டியர்கள் இருந்தாங்க. இவனை நான் கவனிச்சதுக்குக் காரணம் இவன் சிரிச்ச முகத்தோட, கோபப்படமா பொறுமையா இருந்தான். குழந்தைகள்கிட்டேயும் அப்பப்ப சிரிச்சுப் பேசி, அவங்களை உற்சாகப்படுத்திக்கிட்டிருந்தான். மற்ற வாலன்ட்டியர்கள் சில சமயம் கோபமா, சிடுமூஞ்சியா, எரிஞ்சு விழுந்தாங்க. இவன் வித்தியாசமா இருந்ததாலதான் இவனை கவனிச்சேன்!"
"ஓ, அப்படியா? ஏதோ ஒரு அனாதை இல்லத்துக்குத் தொடர்ந்து நன்கொடை கொடுத்துக்கிட்டிருக்கானு தெரியும். ஆனா, வாலன்ட்டியரா இருந்ததெல்லாம் தெரியாது" என்ற சண்முகநாதன், யோசனை செய்வது போல் தோற்றமளித்தார்.
"என்ன யோசனை?" என்றார் வேலாயுதம்.
"என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டிருக்கேன் இல்ல? கையில வெண்ணெயை வச்சுக்கிட்டு நெய்க்கு அலையற மாதிரின்னு சொல்லுவாங்க. எங்கிட்ட வேலை செய்யறாங்கறதால, இவனைப் பத்தி நான் யோசிக்கல. நான் எதிர்பாக்கற நல்ல குணங்கள் எல்லாம் இவன்கிட்ட இருக்கே!"
"பையனோட குடும்பப் பின்னணியையெல்லாம் பாப்பியே?"
"சிரிச்ச முகம், இனிமையாப் பேசறது, கொடை குணம், மத்தவங்களை இகழ்ந்து பேசாத குணம் இதெல்லாம் இருக்குன்னா, அவன் நல்ல குடும்பத்திலதான் பிறந்திருக்கணும். அவன்கிட்ட பேசிப் பாக்கறேன். அவனுக்கும், என் பெண்ணுக்கும் ஒத்தரை ஒத்தர் புடிச்சிருந்தா, கல்யாணத்தை முடிச்சுட வேண்டியதுதான்!" என்றார் சண்முகநாதன், உற்சாகத்துடன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை
குறள் 953:
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
No comments:
Post a Comment