தன்னை அவருடைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டான் சந்திரன்
அவர் மறுத்தும் கேளாமல், அவருக்கான பயணச் சீட்டையும் அவனே பணம் கொடுத்து வாங்கினான்.
பயணத்தின்போது பேசிக் கொண்டு வந்தபோது, இருவரும் தங்கள் குடும்பம் பற்றியும், வாழ்க்கை நிலை பற்றியும் தகவல் பரிமாறிக் கொண்டனர்.
தான் ஒரு நல்ல வேலையில் இருப்பதையும், தனக்கு இரண்டு வருடங்கள் முன்பு திருமணமானதையும், தன் மனைவியுடன் சென்னையில் வசிப்பதையும் சந்திரன் குறிப்பிட்டான்.
தான் திருச்சியில் வசிப்பது பற்றிக் குறிப்பிட்ட குழந்தைவேலு, தன் வாழ்க்கை பற்றி அதிகம் பேசாவிட்டாலும், அவர் வறுமை நிலையில் இருப்பதை சந்திரன் புரிந்து கொண்டான்.
ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து, தனக்குக் கல்வி அளித்த ஒரு நல்ல மனிதர் வறுமை நிலையில் இருப்பது சந்திரனுக்கு வருத்தமாக இருந்தது. அவரிடம் கல்வி பெற்ற தானும், தன்னைப் போன்ற பலரும் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையில் இருக்கும்போது, அவர் வறுமையில் இருப்பது நியாயமற்றது என்ற சிந்தனையும் ஏற்பட்டது.
திருச்சியில் வசிக்கும் அவர் ஏதோ வேலையாகச் சென்னைக்குச் செல்வதாகச் சொன்னார்.
சந்திரன் தன் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்து, அவருடைய வேலை முடிந்ததும், தன் வீட்டுக்கு வரும்படி அவரிடம் கூறினான்.
"நீங்க ஒருவேளையாவது என் வீட்டில சாப்பிடணும் சார்! எப்ப வரீங்கன்னு ஃபோன் பண்ணுங்க. நீங்க தங்கி இருக்கிற இடத்தைச் சொன்னா, நானே வந்து உங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்!" என்றான் சந்திரன்
"நீ எங்கிட்ட படிச்சு எவ்வளவோ வருஷம் ஆச்சு. எங்கிட்ட இவ்வளவு அன்பு காட்டறியே அப்பா?" என்றார் குழந்தைவேலு, நெகிழ்ச்சியுடன்.
தன் மனைவி வாணியிடம், தான் தன் ஆசிரியரைச் சந்தித்ததையும், அவரைத் தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அழைத்திருப்பதையும் கூறினான் சந்திரன்.
"நம்ம வீட்டில என்ன சமையக்காரியா இருக்கா? நீங்க பாட்டுக்கு யாரையாவது சாப்பிடக் கூப்பிட்டா, அவருக்கு சமைச்சுப் போடறது யாரு?" என்றாள் வாணி, எரிச்சலுடன்.
"ஒரு மரியாதைக்காகத்தான் கூப்பிட்டேன். வந்தாதான் வருவாரு!" என்று சமாளித்த சந்திரன், 'நல்லவேளை. அவருக்கு பஸ் டிக்கட் வாங்கியதை இவளிடம் சொல்லவில்லை!' என்று நினைத்துக் கொண்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, சந்திரன் வாணியிடம் தயங்கிக் கொண்டே, "வாணி! என் பள்ளி ஆசிரியர் குழந்தைவேலுவைப் பத்திச் சொன்னேன் இல்ல?அவர் ஃபோன் பண்ணினாரு" என்றான்.
"என்ன, சாப்பிட வராராமா?" என்றாள் வாணி, சலிப்பும், எரிச்சலும் மிகுந்த குரலில்.
"இல்லை. அவருக்கு வேற பிரச்னை. அவர் மனைவியோட நகைகளை அடகு வச்சுக் கடன் வாங்கி இருக்காரு. அதெல்லாம் ஏலம் போகிற நிலைமையில இருக்காம். ஒரு லட்ச ரூபாய் கட்டணுமாம். அதுக்குத்தான் அவரோட சொந்தக்காரங்ககிட்ட கடன் கேட்டுப் பாக்கலாம்னு சென்னைக்கு வந்திருக்காரு. ஆனா, அவருக்குப் பணம் கிடைக்கல" என்றான் சந்திரன்.
"அதுக்கு?"
"திருச்சிக்குப் பக்கத்தில அவருக்கு ஒரு வீட்டு மனை இருக்காம். அது அஞ்சாறு லட்சத்துக்குப் போகுமாம். அதை விக்கறதுக்குப் பாத்துக்கிட்டிருக்காரு. ஆனா, அதுக்குக் கொஞ்சம் டயம் ஆகுமாம். அதனால ஒரு லட்ச ரூபா கடனாக் கொடுத்தா, அஞ்சாறு மாசத்தில வட்டியோட திருப்பிக் கொடுத்துடறேன்னு சொல்றாரு. அவர் ரொம்ப நல்ல மனுஷன். சொன்னபடி நடந்துப்பாரு."
"எங்கிட்ட பணம் இல்லேன்னு சொல்லிட்டீங்க இல்ல?"
"இல்லை, வாணி. நம்மகிட்டதான் பணம் இருக்கே! ரெண்டு நாள் முன்னாலதான் ரெண்டு லட்ச ரூபாய்க்கு ஒரு ஃபிக்ஸட் டெபாஸிட் மெச்சூர் ஆச்சு! அந்தப் பணம் அக்கவுன்ட்லதான் இருக்கு. நீ சரின்னு சொன்னா, அவருக்கு ஒரு லட்ச ரூபா கொடுத்து உதவலாம்னு பாக்கறேன்" என்றபடியே, தயக்கத்துடன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் சந்திரன்.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். 'எங்கிட்ட பணம் இல்லே'ன்னு சொல்லிடுங்க!" என்று சொல்லி விட்டு, உள்ளே போய் விட்டாள் வாணி.
'வாணியை மீறி என் ஆசிரியருக்குப் பணம் கொடுத்து உதவ என்னால் முடியும்தான். ஆனாலும், நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்பதுதானே நிலை!'
தன்னால் உதவ முடியாது என்பதைத் தன் ஆசிரியருக்குத் தெரிவிக்க, அவருக்கு ஃபோன் செய்யப் போனான் சந்திரன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)
குறள் 905:
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
No comments:
Post a Comment