Thursday, July 27, 2023

904. திசை மாறிய லட்சியம்!

ஜெயராமன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது. ஒரு சிறந்த நிறுவனத்தில் ஒரு உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்பதுதான் அது.

அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடும்போதே, ஒரு நிறுவனத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா என்று பார்த்துத்தான் வேலைக்கு விண்ணப்பம் போட்டு வந்தான் அவன்.

ஜெயராமனின் விருப்பத்துக்கு ஏற்ப, ஒரு நல்ல நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது.

வேலையில் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, அவனுடைய சிறப்பான செயல்பாடு காரணமாக, ஜெயராமனுக்குப் பதவி உயர்வு கிடைத்தது.

"வாழ்த்துக்கள், ஜெயராமன்! இவ்வளவு வேகமா முன்னுக்கு வரக் கூடியவங்க ரொம்ப சில பேர்தான் இருப்பாங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!" என்றார் அவன் மேலதிகாரி.

அதற்குப் பிறகு, அவனுக்குத் திருமணம் ஆயிற்று.

ஜெயராமன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.

தன் பணிக்காலத்தை நினைத்துப் பார்த்தான் ஜெயராமன். 

உயர் பதவி வகிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சுறுசுறுப்பாகத் துவங்கிய தன் ஆரம்ப நாட்களை நினைத்தபோது, எதையோ இழந்து விட்ட ஏக்கம் அவனைப் பற்றிக் கொண்டது.

யாமினியைத் திருமணம் செய்து கொண்ட பின், அவன் வாழ்க்கையின் போக்கே மாறி விட்டது.

ஜெயராமன், தான் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் இருந்ததால், மாலை வேளைகளில் அவன் சற்று அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தது.

"என்னங்க இது? என் அக்கா புருஷன் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடறாரு. உங்களுக்கு எட்டு ஒம்பதுன்னு ஆகுது!" என்றாள் யாமினி.

"உன் அக்கா புருஷன் ஒரு அரசாங்க ஊழியர். அவர் அஞ்சு மணிக்கெல்லாம் ஆஃபீசை விட்டுக் கிளம்பிடலாம். என்னால அப்படி முடியாது. நானும்தான் எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடறேனே! சில நாளைக்குத்தான் ஒன்பது மணி ஆகுது" என்றான் ஜெயராமன்.

"அவ்வளவு கஷ்டப்பட்டெல்லாம் நீங்க உழைக்க வேண்டாம். ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துடணும். அப்பதான், உங்களால வீட்டில எனக்குத் துணையா இருக்க முடியும். அந்த மாதிரி வேலையாப் பாருங்க!"

முதலில் ஜெயராமன் மனைவி கூறியதைப் பொருட்படுத்தாவிட்டாலும், அவள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தன் வேலையை விட்டு விட்டு, அதிகச் சுமை இல்லாத ஒரு வேலையைத் தேடிக் கொண்டான்.

வீட்டுக்குச் சீக்கிரம் வர முடிந்தது. ஆனால், வேலையில் சவால்களோ, முன்னேற வாய்ப்புகளோ இல்லை.

"உன்னோட திறமையை நீ வீண்டிச்சுக்கிட்டிருக்க!" என்று அவனுடைய நண்பர்கள் சிலர் கூறினர்.

அவன் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளர் கூட அவனைத் திரும்ப வேலைக்கு வரும்படி அழைத்தார்.

ஆனால், மனைவியின் விருப்பத்தை மீறிச் செயல்பட ஜெயராமானால் முடியவில்லை.

முட்டாள்தனமாக நடந்து கொள்கிறோமோ என்ற சிந்தனை அடிக்கடி வந்தாலும், வேறு முடிவு எடுக்க முடியாமல், ஒரு சராசரி வேலையிலேயே வாழ்க்கையைக் கழித்து, இப்போது ஓய்வும் பெற்று விட்டான் ஜெயராமன்.

'ஏன் இப்படி நடந்து கொண்டேன்? 'வேலையில் முன்னேறி உயர் பதவிக்குப் போக வேண்டும். நிறையச் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு லட்சியம் இருக்கிறது. நீ சொல்கிறபடி நடக்க முடியாது' என்று மனைவியிடம் சொல்லி இருக்கலாமே! என்ன ஆகி இருக்கும்?'

"இங்கே கொஞ்சம் வரீங்களா?"

அடுத்த அறையிலிருந்து மனைவியின் குரல் கேட்டது.

உடல் அசதியால் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுத்துக் கொண்டிருந்த ஜெயராமன், விருட்டென்று எழுந்து, "இதோ வரேன்" என்றபடியே, மனைவி இருந்த அறைக்கு விரைந்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)

குறள் 904:
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

பொருள்: 
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற, மறுமைப் பயன் இல்லாத ஒருவன் செயல் ஆற்றும் தன்மை, பெருமை பெற்று விளங்குவதில்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...