ஜனவரி:
"இந்த ப்ராஜக்ட் நம்ம கம்பெனிக்கு ரொம்ப முக்கியமானது. இதைத் திட்டமிட்டு, சரியான நேரத்தில, எந்த ஒரு தவறும் நடக்காம, பர்ஃபெக்டா செஞ்சு முடிக்கணும். நம்ம கம்பெனியில உங்களை விட சீனியரான எஞ்சினியர்கள் இருக்காங்க. ஆனா, எல்லாரையும் விட நீங்க ரொம்பப் பொறுப்பா, டெடிகேஷனோட வேலை செய்யறதை நான் கவனிச்சிருக்கேன். அதனாலதான், உங்களை ப்ராஜக்ட் மானேஜராப் போட்டிருக்கேன். நீங்க சிறப்பா செயல்படுவீங்கன்னு நம்பறேன்" என்றார் நிர்வாக இயக்குனர் ராமநாதன்.
"ரொம்ப நன்றி சார்! நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கையைக் காப்பாத்துவேன்!" என்றார் ப்ராஜக்ட் மானேஜராக நியமிக்கப்பட்ட சுந்தரம்.
நாற்பத்தைந்து வயதான சுந்தரம் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பப் பொறுப்பு இல்லாததால், அவரால் தன் நிறுவனப் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அவர் ப்ராஜக்ட் மானேஜராக நியமிக்கப்பட்டதற்கு அதுதான் முக்கிய காரணம்.
மார்ச்:
"சுந்தரம்! உங்க மேல நம்பிக்கை வச்சு, இந்த ப்ராஜக்ட் மானேஜர் பொறுப்பை உங்களுக்குக் கொடுத்தேன். ஆரம்பத்தில நல்லாத்தான் செயல்பட்டுக்கிட்டிருந்தீங்க. ஆனா கொஞ்ச நாளா, நீங்க உங்க வேலையில அதிகம் கவனம் செலுத்தாத மாதிரி தோணுது. சில நாள், நீங்க தாமதாமா வரீங்க. முக்கியமான நேரங்கள்ள நீங்க இருக்கறதில்லை. நீங்க எங்கே போயிருக்கீங்கன்னும் தெரியல. அதனால, சில வேலைகள் தாமதமாகி இருக்குன்னு ப்ராஜக்ட்ல பொறுப்பில இருக்கற சில பேர் எங்கிட்ட சொல்றாங்க. என்ன ஆச்சு உங்களுக்கு?" என்றார் ராமநாதன்.
"அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார். உடம்பு சரியில்லேன்னு ரெண்டு நாள் கொஞ்சம் தாமதமா வந்தேன். அதை யாரோ உங்ககிட்ட மிகைப்படுத்திச் சொல்லி இருக்காங்க. ப்ராஜக்ட் வேலைகளை நான் கண்காணிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். கால அட்டவணைப்படி எல்லாமே நடக்கும். ஐ வில் டேக் கேர்!" என்றார் சுந்தரம்.
"பாத்துக்கங்க, சுந்தரம்! மறுபடி இது மாதிரி புகார் வராம நடந்துக்கங்க!" என்றார் ராமநாதன், சற்றுக் கடுமையுடன்.
ஏப்ரல்:
"சுந்தரம்! உங்களை நான் எச்சரிக்கை செஞ்சு உங்களை நீங்க திருத்திக்க ஒரு வாய்ப்புக் கொடுத்தேன். ஆனா, உங்களோட பிரச்னை அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு. நானே ரெண்டு மூணு தடவை ப்ராஜக்ட் சைட்டுக்கு வந்து பார்த்தேன். நீங்க அப்ப அங்கே இல்லை. நீங்க ரொம்ப இர்ரெகுலர்னு எல்லாருமே சொல்றாங்க. நீங்க ப்ராஜக்ட்ல கவனம் செலுத்தாததால, ப்ராஜக்ட் கால அட்டவணையைத் தாண்டி தாமதாமாப் போய்க்கிட்டிருக்கு. இனிமேயும் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. அதனால, மூர்த்தியை ப்ராஜக்ட் மானேஜராப் போட்டிருக்கேன். நீங்க ஃபாக்டரியில உங்க பழைய வேலையைச் செய்யலாம். உங்களைத் திருத்திக்காம, தொடர்ந்து நீங்க இர்ரெகுலரா இருந்தா, உங்களை வேலையை விட்டே நீக்க வேண்டி இருக்கும். நீங்க போகலாம்!" என்றார் ராமநாதன், கடுமையான குரலில்.
ஃபிப்ரவரி:
ப்ராஜக்ட் விஷயமாக ஒரு விமானப் பயணம் மேற்கொண்டபோது, தன் அருகில் அமர்ந்திருந்த காஞ்சனா என்ற நடுத்தர வயதுப் பெண்ணுடன் சுந்தரத்துக்குப் பழக்கம் ஏற்பட்டது. காஞ்சனா திருமணம் ஆகாதவள் என்பதும், தனியாக வசித்து வந்தாள் என்பதும் தெரிந்தது.
பயணத்தின்போதே, இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டதை இருவருமே உணர்ந்தனர்
தன் வீட்டுக்கு வரும்படி காஞ்சனா அழைத்ததை ஏற்று, ஊர் திரும்பியதும் அவள் வீட்டுக்குச் சென்றார் சுந்தரம்.
அதன் பிறகு, தினமும் அவள் வீட்டுக்குச் செல்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் சுந்தரம். ஒருநாள் போகாவிட்டால் கூடக் காஞ்சனா கோபித்துக் கொள்வாள் என்பதால், அவள் அன்பை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தன் அலுவலக வேலைகளைக் கூடப் புறக்கணித்து விட்டுக் காஞ்சனாவுடன் நேரம் செலவழிப்பதை அவரால் தவிர்க்க முடியவில்லை.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவி அல்லது காதலி)யின்
விருப்பப்படி நடத்தல்)
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
No comments:
Post a Comment