"இதற்கான காரணம் உங்களுக்குப் புரிகிறதா அமைச்சரே?" என்றான் மன்னன் கீர்த்திவளவன்.
"நாம் அவர்கள் மீது படையெடுக்கப் போகிறோம் என்று அஞ்சுகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான். கோட்டைக்குள் குறைவான எண்ணிக்கையில் நபர்கள் இருந்தால், கோட்டைக்குள் அதிக காலம் இருந்து கொண்டு நம் முற்றுகையைச் சமாளிக்க முடியும் என்று நினைத்துத் திட்டமிடுகிறார் என்று எண்ணுகிறேன்" என்றார் அமைச்சர்.
"சரியாகச் சொன்னீர்கள், அமைச்சரே! பெயர்தான் வீரகேசரி. ஆனால், உண்மையில் பெரிய கோழை. நமக்கு அவர்கள் மீது படையெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள்அப்படி நினைத்துக் கொண்டு, பயந்து நடுங்கிக் கொண்டிருக்கட்டும். அவர்கள் பயத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கலாம்!" என்றான் கீர்த்திவளவன், உரக்கச் சிரித்தபடி.
"என்ன அமைச்சரே இது? திடீரென்று வீரகேசரி நம் மீது படையெடுத்து வந்திருக்கிறான்! நாம் இதை எதிர்பார்க்கவில்லையே! நம் ஒற்றர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்றான் கீர்த்திவளவன், அதிர்ச்சியுடனும், கோபத்துடனும்..
"நாம் நினைத்தது போல் வீரகேசரி நம் படையெடுப்பை எதிர்பார்த்து பயந்து கோட்டையிலிருந்து பலரை வெளியேற்றவில்லை, நம் மீது படையெடுப்பதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் சாதாரண மக்களைக் கோட்டைக்குள்ளிருந்து வெளியேற்றி விட்டு, ஆயுதங்கள் தயாரித்தல், படைகளுக்குப் பயிற்சியளித்தல் போன்றவற்றை மட்டும் கோட்டைக்குள் செய்து கொண்டிருந்திருக்கிறார். போருக்கான எல்லா ஏற்பாடுகளும் கோட்டைக்குள் நடந்ததாலும், சாதாரண மக்கள் ஒரு சிலரே கோட்டைக்குள் இருந்ததாலும், கோட்டைக்குள் நடப்பவற்றை நம் ஒற்றர்களால் கண்டறிய முடியவில்லை!" என்று கூறிய அமைச்சர், 'கோட்டைஎன்பது எதிரியின் படையெடுப்பின்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடம் மட்டுமல்ல, எதிரியின் மீது போர் தொடுப்பதற்கான ஏற்பாடுகளை சத்தமில்லாமல் செய்யும் இடம் கூட என்பதை வீரகேசரி புரிந்து வைத்திருக்கிறார்!" என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
No comments:
Post a Comment