Monday, January 2, 2023

740. பாருக்குள்ளே நல்ல நாடு!

"வாருங்கள் புலவரே! எங்கே நீண்ட காலமாகத் தங்களைக் காணவில்லை?" என்று புலவர்  அரிமேயரை வரவேற்றான் அரசன் இடும்பவர்மன்.

"ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து நாடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதனால்தான் தங்களைக் காண வர முடியவில்லை. இப்போது கூட இன்னொரு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். தாங்கள் என்னை அழைத்து வர ஆள் அனுப்பியதால் பயணத்தைத் தள்ளி வைத்து விட்டு வந்தேன்" என்றார் அரிமேயர்.

"என்ன திடீரென்று தகங்களுக்குப் பயண வேட்கை ஏற்பட்டு விட்டது?" என்றான் அரசன் சிரித்தபடியே.

"இரண்டு காரணங்கள் அரசே! ஒன்று எல்லா வளங்களும் நிறைந்த இந்த நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பார்த்து, சிறந்த மனிதர்களாக விளங்கும் நம் மக்களைச் சந்தித்து உரையாடுவதில் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி. இரண்டாவது காரணம் நான் வியாபாரத்தில் இறங்கி இருக்கிறேன். அதன் காரணமாகவும் பல இடங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது!" என்றார் அரிமேயர்.

"ஓ, பாடல் எழுதும் புலவர் இப்போது பண்டம் விற்கும் வணிகராகவும் மாறி விட்டாரா? நல்லது! நான் தங்களை அழைத்ததற்குக் காரணம் தங்கள் பாடலைக் கேட்கத்தான். தாங்கள் எழுதும் பாடல்களைக் கேட்பதில் எனக்குப் பெரிதும் விருப்பம் என்பது தாங்கள் அறிந்ததுதானே! பாடல் ஏதாவது எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் சற்று நேரம் எடுத்துக் கொண்டு எழுதுங்கள். நான் காத்திருக்கிறேன்" என்றான் இடும்பவர்மன்.

பலவர் சற்றுத் தயங்கி விட்டு, "அரசே! இந்த நாடு எல்லா வளங்ளையும், சிறப்புகளையும் பெற்று எவ்வாறு பாருக்குள்ளேயே சிறந்த நாடாக விளங்குகிறது என்பது பற்றியும், அதற்கு அரசராக விளங்கும் உங்களைப் பற்றியும் நான் எத்தனையோ பாடல்கள் எழுதி இருக்கிறேனே!" என்றார்.

"ஆமாம். அவற்றையெல்லாம் ரசித்ததால்தானே மேலும் பாடல்களை உங்களிடம் கேட்க விரும்புகிறான். நீங்கள் ஓரிரண்டு ஆண்டுகளாக அரண்மனைப் பக்கம் வராதது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்ததால்தான் உங்களை அழைத்து வர ஆள் அனுப்பினேன். நீங்கள் விரும்பினால் அரண்மனையில் சில நாட்கள் தங்கி இருந்து கூடப் பாடல்கள் எழுதலாம்."

"மன்னிக்க வேண்டும் அரசே! என்னால் இப்போதெல்லாம் பாடல் எழுத முடியவில்லை. பாடல் எழுதும் திறமை என்னை விட்டுப் போய் விட்டது என்று நினைக்கிறேன்!" என்றார் புலவர் தடுமாற்றம் நிரம்பிய குரலில்.

"என்ன சொல்கிறீர்கள் புலவரே? திறமை எப்படி மறையும்? கற்பனை வறண்டு போகுமா என்ன?" என்றான் இடும்பவர்மன் வியப்புடன்.

"வறண்டுதான் போய் விட்டது மன்னரே! நான் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டு வியாபாரத்தில் இறங்கியதற்குக் காரணமே இதுதான்!"

அரசன் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, "சரி புலவரே! நீங்கள் இப்படிச் சொல்வது எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. பரவாயில்லை. சென்று வாருங்கள். உங்கள் கற்பனை வளம் மீண்டும் பெருக்கெடுத்து வரும்போது பாடலுடன் வாருங்கள். உங்களுக்காக இந்த அரண்மனைக் கதவுகள் திறந்தே இருக்கும். உங்களை வெறும் கையுடன் அனுப்ப விரும்பவில்லை. நான் கொடுக்கும் பொற்காசுகளைப் பெற்றுச் செல்லுங்கள்!" என்றபடியே தனாதிகாரியைப் பார்த்தான் அரசன்.

தனாதிகாரி பொற்காசுகளை எடுத்து வர எழுந்தபோதே, "மன்னிக்க வேண்டும் மன்னரே! பாடல் புனையாமல் பரிசு பெற விரும்பவில்லை. தாங்கள் கூறியபடி என் கற்பனை மீண்டும் வளமடைந்தால் அப்போது பாடலுடன் வந்து பரிசு வாங்கிக் கொள்கிறேன்!" என்று சொல்லி அரசனிடம் விடைபெற்றர் அரிமேயர்.

"ஏன் உங்கள் கற்பனை வற்றி விட்டதாக மன்னரிடம் பொய் கூறினீர்கள்?" என்றாள் புலவரின் மனைவி, அரண்மனையில் நடந்ததை அவர் அவளிடம் கூறியதைக் கேட்டபின்

"கொடுங்கோல் ஆட்சி நடத்தும் இந்த மன்னனைப் புகழ்ந்து பாட நான் விரும்பவில்லை!" என்றார் அரிமேயர்.

"முன்பு பாடி இருக்கிறீர்களே! அதனால்தானே மன்னர் உங்களைக் கூப்பிட்டு அனுப்பினார்?"

"உண்மைதான். அப்போது அவன் பட்டத்ததுக்கு வந்த புதிது. தந்தையைப் போல் மகனும் நன்றாக ஆட்சி செய்வான் என்று நினைத்துப் பாடினேன். இப்போது அவன் செய்யும் மோசமான ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது என்னால் எப்படி அவனைப் புகழ்ந்து பாட முடியும்?" என்றார் அரிமேயர் கோபத்துடன்.

"பாருக்குள்ளே நல்ல நாடு என்று இந்த நாட்டைப் புகழ்வீர்களே, இந்த நாட்டைப் புகழ்ந்தாவது ஒரு பாடல் எழுதிப் பரிசு வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம்!" என்றாள் மனைவி வருத்தத்துடன்.

"இந்த நாடு எல்லா வளங்களும் கொண்டதுதான். ஆனால் ஒரு மோசமான அரசனைக் கொண்டிருப்பதால் அந்த வளங்கள் இருப்பது கூடப் பயன்ற்றதாகி விட்டதே!" என்றார் அரிமேயர் வருத்தத்துடன்.

பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு

குறள் 740:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

பொருள்: 
ஒரு நாடு நல்ல அரசனைக் கொண்டிராவிட்டால்,முன்பு குறிப்பிட்ட எல்லா நன்மைகளும் அமைதிருந்தாலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...