அமைச்சருடன் வந்திருந்த பிற அரசு அதிகாரிகள், அமைச்சர் கூறியதை ஆமோதித்துத் தலையாட்டினர்.
"மக்கள் விருப்பபடி மீண்டும் அரசனாவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு நிபந்தனை!" என்றான் மகரபூபதி.
"என்ன நிபந்தனை, அரசரே!" என்றார் அமைச்சர்.
"நான் இந்த இடத்திலிருந்தே ஆட்சி புரிய விரும்புகிறேன்!"
"இந்தக் காட்டிலிருந்தா? அரசே! ஒரு அரசர் எப்போதுமே பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டுதான் ஆட்சி புரிய வேண்டும். கோட்டைக்குள் இருக்கும் அரண்மனையில் இருந்தபடி நீங்கள் ஆட்சி புரிவதுதான் பொருத்தமாக இருக்கும்" என்றார் அமைச்சர்.
"அமைச்சரே! இத்தனை ஆண்டுகளாக நான் இங்கேதான் வழ்ந்து கொண்டிருக்கிறேன்? இங்கே தன் படைகளை அனுப்பி என்னைக் கொல்லவும், சிறைபிடிக்கவும் ருத்ரபதி எத்தனையோ முறை முயற்சி செய்தான். ஆனால் அவனால் முடியவில்லை. காரணம், இந்த இடமே ஒரு இயல்பான அரணாக அமைந்திருப்பதுதான். அந்தப் பக்கம் மலைத் தொடர். படையெடுத்து வரும் எவரும் அந்த மலையைக் கடந்துதான் வர வேண்டும். அந்த முயற்சியில் யாராவது ஈடுபட்டால், நம்மால் அதை இங்கிருந்தே முறியடித்து விட முடியும். இது மலை கொடுக்கும் பாதுகாப்பு.
"இங்கே ஓடும் ஆற்றில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால், இங்குள்ள மக்களுக்கு விவசாயத்துக்கும், உணவுக்கும் இன்றியமையாததான நீர்வளம் இங்கே இருக்கிறது. அதனால், ஒருவேளை எதிரிகள் மலைக்கருகே முற்றுகையிட்டால் கூட, இங்குள்ள மக்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்கும் மக்களைப் போல் பாதுகாப்பாக இருக்கலாம். இது நீர் கொடுக்கும் பாதுகாப்பு.
"இன்னொரு புறம் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள்தான் இத்தனை ஆண்டுகளாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காட்டுக்கு மறுபுறத்தில் உள்ள நாடுகளிலிருந்து எவரும் இந்தக் காட்டைக் கடந்து வந்து நம்மைத் தாக்க முடியாது. இது காடு கொடுக்கும் பாதுகாப்பு.
"நான்காவதாக, அருகே இருக்கும் பரந்த வெளி. அதைத் தாண்டிப் பகைவர்கள் வருவதற்குள், நம் படைகள் அந்தப் படைகளைப் பார்த்து விட்டு அவற்றை விரட்டி அடித்து விடுவார்கள். அத்துடன், நம் வீரர்கள் வெளியே வந்து போர் செய்யவும் இந்த வெட்ட வெளி மிகவும் ஏற்புடையது. இது நிலம் கொடுக்கும் பாதுகாப்பு.
"இவ்வாறு, மலை அரண், நீர் அரண், வன அரண், நில அரண் என்று நான்கு வகை அரண்களைக் கொண்ட இந்த இயற்கை அரணை விட அதிகப் பாதுகாப்பான இடம் வேறு எதுவாக இருக்க முடியும்?"
மகரபூபதி கூறியதை ஏற்றுக் கொள்வது போல் அமைச்சர் தலையசைத்தார்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 75
அரண்
குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
No comments:
Post a Comment