Monday, February 13, 2023

673. "நிறைவேற்றப்படாத" வாக்குறுதி

"நம்ம தேர்தல் வாக்குறுதிகள் எல்லாத்தையுமே நிறைவேற்றிட்டோம்!" என்றார் 'மக்கள் நலன் கட்சி'யின் தலைவர் முத்தையன் பெருமையுடன்.

"ஒண்ணைத் தவிர!" என்றார் முதலமைச்சர் அறிவொளி.

"என்னங்க நீங்க? எதிர்க்கட்சித் தலைவர் மாதிரி பேசறீங்க! நாம கொடுத்த 237  வாக்குறுதிகள்ள 236-ஐ நிறைவேற்றிட்டோம். இதுவரையில யாருமே செய்யாத சாதனை இது. எதிர்க்கட்சிக்காரங்க பேசறதுக்கு எதுவும் இல்லாம வாயடைச்சுப் போய் நிக்கறாங்க. ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கங்கறதை நாங்க எல்லாரும் பக்கத்தில இருந்து பார்த்திருக்கோம். நிறைவேற்றக் கடினமான வாக்குறுதிகளைக் கூட எப்படியோ கஷ்டப்பட்டு நிறைவேற்றிட்டீங்க. இதுக்காக உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த அரசியல் சார்பு இல்லாத சில அமைப்புகள்  முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க. நீங்க என்னன்னா ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கீங்க!"

"இல்லை தலைவரே! பதவிக்கு வந்தா இந்த 237 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்னு தேர்தல் பிரசாரத்தில சொன்னோம் இல்ல? அதன்படி நடந்துக்க வேண்டாமா?"

"எல்லா வாக்குறுதிகளையுமே நிறைவேற்ற முடியுங்கற நம்பிக்கையிலதான் கொடுக்கறோம். சிலதை நிறைவேற்ற முடியாம போறது  நடக்கறதுதான். ஆனா ஒரு வாக்குறுதியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றின முதலமைச்சர் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு நாம சட்டசபையில தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிட்டோம். அவங்க அரசியல் காரணங்களுக்காக அந்தத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கொடுக்காம அதைக் கிடப்பில போட்டிருக்காங்க. மக்களுக்கு இது நல்லாவே தெரியும். அதனால உங்க மேல தப்பு இல்லைன்னு அவங்க புரிஞ்சுப்பாங்க."

"ஆனா எனக்கு மனசு சமாதானம் ஆகல. அதை நிறைவேற்ற ஏதாவது வழி கண்டுபிடிக்கணும். அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் முதல்வர்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் 'நான் சொல்லும் ரகசியம்' என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

"மத்தியில் ஆளும் கட்சியான 'ஒரே தேசம் கட்சி'க்கு மாநில சட்டப் பேரவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லை. அப்படி இருக்க சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் அந்தக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி? நம் நிருபர்கள் சேகரித்த ரகசியத் தகவல்கள் இவை.

"சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஐந்து  மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆளும் கட்சியான 'மக்கள் நலன் கட்சி'க்கு மூன்று இடங்களும், எதிர்க்கட்சிகளுக்கு இரண்டு உறுப்பினர்களும் கிடைத்திருக்க வேண்டும். 

"ஆனால் இரண்டு எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. 'மக்கள் நலன் கட்சி'யின் கூட்டணிக் கட்சியான 'மக்கள் உரிமைக் கட்சி' தங்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வேண்டும் என்று கேட்டு, 'மக்கள் நலன் கட்சி' அதற்கு ஒப்புக் கொள்ளாததால் தங்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்று அறிவித்தது.

"இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் சார்பாக மூன்றாவது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு அந்த இடம் 'ஒரே தேசம் கட்சி'க்கு ஒதுக்கப்பட்டது. 'மக்கள் உரிமைக் கட்சி' உறுப்பினர்கள் நான்கு பேர் வாக்களிக்காததால் 'ஒரே தேசம் கட்சி' வேட்பாளர் ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்று விட்டார், எதிர்பாராத இந்தத் தோல்வியால் 'மக்கள் நலன் கட்சி' பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. 

"'மக்கள் உரிமைக் கட்சி' ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மாறுமா, இதனால் மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழுமா போன்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன."

"என்னங்க இப்படி ஆயிடுச்சு? ஏன் 'மக்கள் உரிமைக் கட்சி'க்காரங்க திடீர்னு இப்படி நடந்துக்கறாங்க?" என்றார் முத்தையன் கவலையுடன்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க. கிளைமாக்ஸ் இனிமேதான் இருக்கு!" என்றார் அறிவொளி சிரித்தபடி.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 சதவீத இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

'முதல்வர் 237-ஆவது தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றிச் சாதனை படைத்து விட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் நாங்கள் கேட்டுக் கொண்டபடி எங்களுக்கு ஒரு இடம் வழங்கவில்லை என்பதால் நாங்கள் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தது எங்கள் எதிர்ப்பைக் காட்டத்தான். அது முடிந்து போன விஷயம். முதல்வரை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். 'மக்கள் நலன் கட்சி'யுடனான எங்கள் கூட்டணி என்றும் தொடரும் கூட்டணி!" என்று 'மக்கள் உரிமைக் கட்சி' அறிக்கை வெளியிட்டது.

"இதெல்லாம் உங்க ஏற்பாடுதானா?" என்றார் முத்தையன் வியப்புடன்.

"என்ன செய்யறது?  ஒரு செயலை நிறைவேற்ற இயல்பான வழிகள் பயன் தரலேன்னா புதுசா ஒரு வழியைக் கண்டறியத்தான் வேணும். நமக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைக்காம போனாலும் 'ஒரே தேசம் கட்சி'க்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் கிடைக்க வகை செஞ்சு நமக்கு வேண்டியதை அவங்ககிட்ட கேட்டுப் பெற்று நாம் செய்ய வேண்டியதைச் செஞ்சு முடிச்சுட்டோம் இல்ல?" என்றார் அறிவொளி திருப்தியுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 673:
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

பொருள்:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...