இந்தச் சந்திப்புகள் பெரும்பாலும் அவர்களில் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் கிளப்பில் நடக்கும்.
சனிக்கிழமை மாலையில் நடக்கும் இந்தச் சந்திப்புகள், சில மணி நேர அரட்டைக்குப் பிறகு, இரவு உணவுடன் முடியும்.
அத்தகைய ஒரு சந்திப்பு முடிந்து, நரேஷும், குமரனும் விடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர் வீடுகளும் அந்த கிளப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளேயே அமைந்திருந்ததால், சந்திப்பு முடிந்ததும், இருவரும் தங்கள் வீடுகளுக்கு நடந்தே சென்று கொண்டிருந்தனர்.
"ஆமாம், இன்னிக்கு ஒண்ணு கவனிச்சேன். நீ வேணுகிட்ட சரியாவே பேசலையே! அவனே வலுவில வந்து உங்கிட்ட பேசினப்ப கூட, நீ சரியா பதில் பேசலையே! என்ன விஷயம்? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது சண்டையா? அவன் அப்படிக் காட்டிக்கலையே!" என்றான் குமரன், நரேஷிடம்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை!" என்றான் நரேஷ்.
"மழுப்பாதேடா! எங்கிட்ட சொல்றதில உனக்கு என்ன தயக்கம்?"
"அவன் என்னை அப்படிப் பேசினப்பறம், அவன்கிட்ட என்னால எப்படி சுமுகமா இருக்க முடியும்?"என்றான் நரேஷ், சட்டென்று வெடித்து.
"என்ன பேசினான்? எப்ப பேசினான்? எனக்குத் தெரியாம எப்ப இப்படி நடந்தது?" என்றான் குமரன், வியப்புடன்.
"உனக்குத் தெரியாம என்ன? நீயும்தானே வாட்ஸ்ஆப் க்ருப்ல இருக்க!"
"வாட்ஸ்ஆப்பா?...ஓ...அதுவா?" என்று பெரிதாகச் சிரித்தான் குமரன்.
"என்னடா சிரிக்கற? அவன் என்னை எப்படியெல்லாம் எகத்தாளமாப் பேசினான்னு நீயும்தானே படிச்சிருப்ப?" என்றான் நரேஷ், கோபத்துடன்.
"படிச்சேன். அரசியல்ல உனக்கு ஒரு கருத்து இருக்கு, அவனுக்கு வேற ஒரு கருத்து இருக்கு. அதனால, ரெண்டு பேருக்கும் அடிக்கடி கருத்து மோதல் ஏற்படறதை கவனிச்சிருக்கேன். அதுக்காக, நீ அவன்கிட்ட விரோதம் பாராட்டற அளவுக்கு என்ன நடந்தது?"
"விரோதம் பாராட்டலைடா. கருத்துப் பரிமாற்றம் செஞ்சுக்கறப்ப, அவன் ரொம்ப கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினான். அதையெல்லாம் படிச்சப்பறம், என்னால எப்படி அவன் மேல கோபப்படாம இருக்க முடியும்?"
"நரேஷ்! மனிதர்களுக்கு இடையில கருத்து வேறுபாடுகள் இருக்கறது இயல்பான விஷயம்தான். எந்த ரெண்டு பேரை எடுத்துக்கிட்டாலும், அவங்களுக்குள்ள ஏதாவது ஒரு விஷயத்தில கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஒருத்தரோட நமக்கு இருக்கற கருத்து வேறுபாடு மனக்கசப்பாகவோ, விரோதமாகவோ ஆகாம பாத்துக்கணும். அப்படி இருந்தாதான், நம்மால எல்லோரோடயும் நல்லாப் பழக முடியும். மனக்கசப்பை வளர்த்துக்கிட்டா, நமக்கு மத்தவங்களோட நல்ல உறவு இருக்காது. அப்புறம், வாழ்க்கையில நம்மால எப்படி மகிழ்ச்சியா இருக்க முடியும்?" என்றான் குமரன்.
"அது சரிதான். ஆனா, கருத்துக்களை விவாதிக்கறப்ப, ஒத்தர் நம்மைக் கடுமையாப் பேசினா, நமக்குக் கோபம் வராதா?"
"வரும்தான். இதைச் சமாளிக்க ரெண்டு வழிதான் இருக்கு. ஒத்தர் எவ்வளவு கடுமையாப் பேசினாலும், அவர் நம்ம கருத்தைத்தான் விமரிசிக்கிறாரு, தம்மை இல்லன்னு புரிஞ்சுக்கிட்டு, அவர் மேல கோப்பபடாம இருக்கற முதிர்ச்சி இருக்கணும். இது ஒரு வழி. இன்னொரு வழி..." என்று சொல்லி நிறுத்தினான் குமரன்.
"இன்னொரு வழி என்ன?" என்றான் நரேஷ், ஆவலுடன்.
"கருத்து வேறுபாடு இருக்கற விஷயங்களைப் பேசாமலே இருக்கறது!"
"அது எப்படி முடியும்? பேசும்போதோ, வாட்ஸ்ஆப் உரையாடலின்போதோ, எல்லா விஷயங்களும் வரத்தான் செய்யும். நம்ம கருத்தைச் சொல்லாமயே எப்படி இருக்கறது?"
"நான் இருக்கேனே!"
"என்னடா சொல்ற?"
"என்னோட அரசியல் கருத்துக்கள் உன்னோட கருத்துக்களுக்கு எதிர்மறையானவைதான். ஆனா, அதையெல்லாம் பேசி, அதனால நமக்குள் கசப்பு வரக் கூடாதுங்கறதுக்காகத்தான், நான் இதுவரை ஒரு தடவை கூட என்னோட அரசியல் கருத்துக்களை உங்கிட்ட பேசினதில்ல. நீ ஏதாவது பேசறப்ப, அதை மறுக்கணும்னு எனக்குத் தோணும். ஆனா, அப்படிச் செய்யக் கூடாதுன்னு என்னையே கட்டுப்படுத்திக்கிட்டு இருப்பேன்!" என்றான் குமரன்.
நரேஷ் தன் நண்பனை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தேன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல் (வெறுப்பு, விரோத மனப்பான்மை)
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment