சாரதி தன் போர்ஷனிலிருந்து வெளியே வந்தபோது, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கையை நீட்டினான் ராகவன். ஆனால், அவர் அவனுடன் கைகுலுக்காமல், தலையை ஆட்டி விட்டுப் போய் விட்டார்.
சில நாட்கள் அனுபவத்தில், சாரதி தன்னிடம் நட்பாக இருக்க விரும்பவில்லை என்பதை ராகவன் புரிந்து கொண்டான். அத்துடன், தன் மனைவி, குழந்தைகளையும் ராகவன் குடும்பத்தினரிடம் பழக வேண்டாம் என்று அவர் சொல்லி வைத்திருப்பது போல் தோன்றியது. ஏனெனில், ராகவனின் மனைவியும், மகளும் சாரதியின் குடும்பத்தினருடன் பழக முயன்றபோது, அவர்கள் ஒதுங்கியே இருந்தனர்.
இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, ராகவன் குடும்பத்தினர் தனக்குத் தொல்லை கொடுப்பதற்காகவே தன் போர்ஷனுக்கு பக்கத்து போர்ஷனுக்குக் குடி வந்து விட்டது போல் நடந்து கொண்டார் சாரதி. பல பிரச்னைகளைக் கிளப்பி, சண்டை போடத் தொடங்கினார்.
ஒருமுறை, ராகவனின் மனைவி தன் விட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலம் போடும்போது, சாரதியின் வீட்டு வாசலில் பேப்பர் போடுபவர் போட்டு விட்டுப் போயிருந்த செய்தித்தாளின் ஓரத்தில் ஈரம் பட்டு விட்டதாகப் புகார் செய்தார் ராகவன்.
இரவு நேரத்தில், ராகவன் வீட்டில் அடிக்கடி நாற்காலிகள் இழுக்கப்படுவதாகவும், அதனால் தங்களால் தூங்க முடியவில்லை என்றும் வீட்டுச் சொந்தக்காரரிடம் சாரதி புகார் செய்தார்.
வீட்டுச் சொந்தக்காரர் சிரித்துக் கொண்டே இதை ராகவனிடம் தெரிவித்தபோது, "என்ன சார், இப்படியெல்லாம் சொல்றாரு? பத்து மணிக்கெல்லாம் நாங்க மூணு பேரும் தூங்கிடுவோம். அடுத்த நாள் காலை ஆறு மணிக்குத்தான் எழுந்திருப்போம்! எங்க வீட்டில நாற்காலி எதுவும் இல்லை. சோஃபா மட்டும்தான் இருக்கு. ராத்திரியில அதை யாராவது இழுத்துக்கிட்டே இருப்பாங்களா என்ன? அவர் சொல்ற மாதிரியெல்லாம் எதுவும் நடக்கல!" என்றான் ராகவன், கோபத்துடன்.
"அது எனக்குத் தெரியும், சார். அவர் சொன்னதை உங்ககிட்ட சொன்னேன். அவ்வளவுதான்!" என்றார் வீட்டுக்காரர்.
"அவர் ஏன் சார் இப்படி இருக்காரு? என்னை அவருக்குப் பிடிக்கலையா, இல்லை எல்லார்கிட்டேயும் இப்படித்தான் இருப்பாரா?" என்றான் ராகவன்.
"பொதுவா, அவர் சண்டை போடற ஆளுதான். எங்கிட்டயே அடிக்கடி வீட்டைப் பத்தி ஏதாவது குறை சொல்லி, சண்டை போடுவாரு. நான் அதைப் பொருட்படுத்தறதில்ல. உங்களுக்கு முன்னால இருந்தவர் தனியா இருந்தாரு. அவருக்குக் குடும்பம் இல்ல. அவர் காலையில போனா, ராத்திரிதான் வீட்டுக்கு வருவாரு. ஞாயிற்றுக்கிழமைகள்ள கூட வீட்டில இருக்க மாட்டாரு. அதனால, அவரோட சண்டை போட சாரதிக்கு சந்தர்ப்பம் கிடைக்கலையோ என்னவோ!" என்றார் வீட்டுச் சொந்தக்காரர்.
"இன்னிக்கு ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்துக்கிட்டிருக்கறப்ப, வழியில ஒரு ஸ்கூட்டரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விசாரிச்சுக்கிட்டிருந்தாரு. யாருன்னு பாத்தா நம்ம சாரதி!" என்றான் ராகவன், தன் மனைவியிடம்.
"ஏன், போலீஸ்காரர்கிட்ட ஏதாவது சண்டை போட்டுக்கிட்டிருந்தாரா?" என்றாள் அவன் மனைவி.
"ஒன்வேயில போயிட்டாராம். இருநூறு ரூபா ஃபைன் போட்டிருக்காங்க. அவர்கிட்ட பணம் இல்லை. 'ஆட்டோல வீட்டுக்குப் போய்ப் பணம் எடுத்துக்கிட்டு வந்து ஃபைன் கட்டிட்டு, ஸ்கூட்டரை எடுத்துட்டுப் போங்க'ன்னு போலீஸ்காரர் சொல்லி இருக்காரு. அவர் வீட்டிலேயும் பணம் இல்லையாம். நாளைக்கு பாங்க்லேந்து பணம் எடுத்துத்தான் கட்ட முடியும்னு சாரதி சொல்லி இருக்காரு. 'அப்படின்னா, ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போய், போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுடுவோம், நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்து பணம் கட்டிட்டு, ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போங்க'ன்னு போலீஸ்காரர் சொல்லிக்கிட்டிருந்தாரு!"
"அடப்பாவமே! உங்ககிட்ட பணம் இருந்திருக்குமே! நீங்க ஃபைன் கட்டி உதவினீங்க இல்ல?" என்றாள் மனைவி.
"அப்படித்தான் செஞ்சேன். என்னதான் அவர் காரணம் இல்லாம நம்ம மேல விரோதமா இருந்து, நமக்கு எரிச்சல் வர மாதிரி நடந்துக்கிட்டிருந்தாலும், அவருக்கு ஒரு கஷ்டம் வரும்போது, உதவி செய்யறதுதானே மனிதாபிமானம்! நான் அப்படித்தான் செஞ்சிருக்கணும்னு நீயும் சொல்றதைக் கேக்கறப்ப ரொம்ப திருப்தியா இருக்கு!" என்றான் ராகவன்.
"பின்ன? நம்மகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்காருங்கறதுக்காக, அவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, நல்லா கஷ்டப்படட்டும்னு விட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதானேன்னு சொல்லுவேன்னா எதிர்பார்த்தீங்க?" என்றாள் ராகவனின் மனைவி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 86
இகல் (வெறுப்பு, விரோத மனப்பான்மை)
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
நம்மோடு இணங்கிப் போக முடியாமல், ஒருவர் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவரைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.
No comments:
Post a Comment