"என்ன செய்யலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்றார் அரசர்.
"சங்க நாட்டில், இன வெறியர்கள் சிறுபான்மை இன மக்களைப் படுகொலை செய்து வருகிறார்கள். சங்க நாட்டு அரசர் ராஜபத்மரும் இனவெறியர்களைக் கட்டுப்படுத்தாமல், அவர்கள் நிகழ்த்தும் வன்முறைச் செயல்களுக்குத் துணை போகிறார். எனவே, அச்சுறுத்தலுக்குள்ளான சிறுபான்மை இனத்தினர் நம் நாட்டில் அடைக்கலம் புகுவதில் வியப்பில்லை. தாங்கள் அனுமதி அளித்தால், எல்லைப்பகுதியில் உள்ள முகாம்களில் இருப்பவர்களை நம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கே தங்க வைக்க ஏற்பாடு செய்யலாம். அங்கே உள்ள சத்திரங்களில் அவர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான செலவுக்கு அரண்மனைப் பொக்கிஷத்திலிருந்து நிதி அளிக்கத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.
"அப்படியே செய்யுங்கள். ஆனால் அதற்கு அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்!" என்றார் அரசர், சிரித்துக் கொண்டே.
"ஏன் அரசே? சங்க நாட்டில் இனப்படுகொலை தடுக்கப்பட்டு, விரைவிலேயே அமைதி திரும்பி விடும் என்று எதிர்பார்க்கிறீர்களா?" என்றார் அமைச்சர், குழப்பத்துடன்.
"ராஜபத்மன் அரசனாக இருக்கும் வரையில், அந்த நாட்டில் அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை. நான் நம் நாட்டு மக்களின் இயல்பை வைத்துச் சொல்கிறேன்!"
அரசர் சொன்னதன் பொருள் அமைச்சருக்குப் புரியவில்லை.
"அரசே! சங்க நாட்டு அகதிகளை நாம் குடியமர்த்தி, அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நம் நாட்டு மக்களே எல்லைப்புறத்தில் உள்ள பல்வேறு ஊர்களில், அகதிகள் குடி இருக்கத் கொட்டகைகள் அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு உணவும் அளித்து வருகிறார்கள். இதைத்தான் தாங்கள் எதிர்பார்த்தீர்களா?" என்றார் அமைச்சர்.
"ஆமாம். வந்தாரை வாழ வைக்கும் நாடு என்பது நம் நாட்டைப் பற்றி நாமே பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்றொடர் இல்லை. போர், நோய், இயற்கை நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களால், பிற நாடுகளிலிருந்து பல்வேறு காலங்களில் இங்கே வந்து அடைக்கலம் புகுந்து நம் நாட்டில் ஐக்கியமாகி விட்ட மக்கள் நன்றியுடன் நமக்கு அளித்திருக்கும் பட்டம் இது!" என்றார் அரசர், பெருமிதத்துடன்.
"ஆனால், மக்களால் எவ்வளவு நாள் இவ்வாறு செய்ய முடியும்?"
"நம் மக்கள் பாலைப் போன்றவர்கள். எவ்வளவு நீரை உற்றினாலும், உள்வாங்கிக் கொள்வார்கள். ஆயினும், மக்கள் மீதான சுமையைக் குறைக்க நாம் உதவ வேண்டும். கொட்டகைகளில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவளிக்க, அரசு தானியக் கிடங்கிலிருந்து தானியங்கள் கொடுத்து உதவுவோம்."
"செய்யலாம், அரசே! ஆனால் எனக்கு இன்னொரு கவலை இருக்கிறது!" என்றார் அமைச்சர்.
"உங்கள் கவலை என்னவென்று எனக்குப் புரிகிறது, அமைச்சரே! ஒன்று நிகழுமோ என்று கவலைப்படுவதை விட, அது நிகழும்போது எதிர்கொள்வதுதான் சிறப்பாக இருக்கும்!" என்றார் அரசர்.
"அரசே! நம் நாட்டு மக்கள் சங்க நாட்டு அகதிகளுக்கு உதவி வருவதால், அவர்களுக்கு ஏற்படும் அதிகப் பொருட்செலவால், அவர்களால் வரிகளைச் சரியாகச் செலுத்த முடியாமல் போய், நம் வரி வருமானம் குறைந்து விடும் என்ற கவலை எனக்கு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு வரி வசூலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை வழக்கம் போல் செலுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு வியப்பாக இருக்கிறது!" என்றார் அமைச்சர்.
"எனக்கு வியப்பாக இல்லை, அமைச்சரே! நம் நாட்டு மக்களின் உதவும் குணம், அவர்கள் தியாக மனப்பான்மை, அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்தினால்தான் அரசாங்கத்தால் சிறப்பாக இயங்க முடியும் என்ற உணர்வினால் உருவான கடமை உணர்வு ஆகிய இயல்புகள் பற்றிய என் கணிப்பு தவறாகவில்லை. நம் நாட்டு மக்களைப் பற்றி எனக்குப் பெருமையாக இருக்கிறது!" என்றார் அரசர்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு
குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால், அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.
No comments:
Post a Comment