கைது செய்யப்பட்டவன் செய்த குற்றங்களைக் காவலர் தலைவர் படித்துக் காட்டினார்.
"இந்த அவையின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பரதன் என்ற இந்த இளைஞன், தன் ஊரில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வந்திருக்கிறான். அந்த கிராம மக்களும் இவன் பேச்சைக் கேட்டு, நம் நாட்டு விதிகளுக்குப் புறம்பான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர். அதனால், அவன் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்."
"பரதா! நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் அரசர்.
"அரசே! என்னை தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் காவலர் தலைவர் கூறி இருக்கிறார். நான் தேசத்துரோகி என்றால், தாங்களும் தேசத்துரோகிதான்!" என்றான் பரதன்.
அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பரதனைப் பிடித்துக் கொண்டிருந்த காவலர் அவனை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, மன்னர் என்ன கூறப் போகிறார் என்று மன்னரைப் பார்த்தார்.
மன்னர் சிரித்தபடி, "சொல், பரதா! நான் செய்த தேசத்துரோகக் குற்றம் என்ன?" என்றார்.
"அரசே! தாங்கள் முடிசூட்டிக் கொண்ட பிறகு, அரண்மனையின் உப்பரிகையில் நின்று ஆற்றிய உரையைக் கேட்ட மக்களில் நானும் ஒருவன். அப்போது தாங்கள் கூறியவை தங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்!"
'என்ன இவன் மன்னர் என்ற மரியாதை இல்லாமல், தனக்குச் சமமான ஒருவருடன் பேசுவது போல் பேசுகிறானே!' என்று அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க, மன்னர் சிரித்துக் கொண்டே, "நினைவிருக்கிறது, பரதரே! ஆயினும் அதைத் தங்கள் வாயால் கேட்க விரும்புகிறேன்!" என்றார்.
மன்னர் அவனை 'பரதரே!' என்று மரியாதையாக விளித்துப் பேசியது மன்னர் பரதன் மீது கடும் கோபத்தில் இருப்பதையும், அவர் அவனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் போவதையும் காட்டுவதாகப் பலரும் நினைத்தனர்.
"அரசே! நம் நாடு செல்வச் செழிப்புடன் விளங்க வேண்டும். மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் கூட நம் நாட்டின் வளத்தைப் பற்றிக் கேள்வியுற்று, இங்கே வந்து வசிக்க விரும்ப வேண்டும், குற்றங்கள், நோய்கள் போன்ற தீமைகள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும், இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக, நம் நாட்டில் உள்ள நிலவளத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி, நம் தேவைக்கு அதிகமாக விளைபொருட்களை விளைவித்து, மிகுதியைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட வேண்டும், இவற்றை நிறைவேற்றுவதுதான் தங்கள் லட்சியம் என்று தாங்கள் கூறினீர்கள்!" என்றான் பரதன்.
"ஆமாம், கூறினேன். இதைத்தான் தேசவிரோதச் செயல் என்று கூறுகிறாயா?"
"தாங்கள் கூறிய இதே விஷயங்களை என் கிராமத்தில் நிறைவேற்ற நான் செய்த முயற்சிகளைத்தானே தேசத்துரோகம் என்று கூறிக் காவலர்கள் என்னைக் கைது செய்திருக்கிறார்கள்!"
அரசர் காவலர் தலைவரைப் பார்த்தார்.
"அரசே! இவன் ஊர் மக்களை விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்யும்படி தூண்டி இருக்கிறான். ஊருக்குப் பொதுவாக இருக்கும் நிலங்களை அரசு அதிகாரியின் அனுமதியின்றி ஆக்கிரமிக்கும்படி ஊர் மக்களைத் தூண்டி இருக்கிறான். அனுமதியின்றிக் கால்வாய்களை அமைத்து, ஆற்று நீரைத் திசை மாற்றி இருக்கிறான். ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர் மக்களே விசாரிக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறான். இது போன்ற தகாத செயல்களைத் தன் ஊரில் செய்தது மட்டுமின்றி, பக்கத்து ஊர்களில் உள்ள மக்களையும் இதுபோல் செய்யத் தூண்டி இருக்கிறான்!" என்றார் காவலர் தலைவர்.
"என் சக தேசத்துரோகி பரதர் என்ன செய்திருப்பார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் ,அதை அவர் வாயாலேயே சொல்லக் கேட்க விரும்புகிறேன்!" என்றார் அரசர், புன்முறுவல் மாறாமல்.
பரதன் சற்று வியப்புடன் அரசரைப் பார்த்து விட்டுப் பிறகு துணிவு பெற்றவனாகப் பேசத் தொடங்கினான்,
"அரசே! எங்கள் ஊரில் விளைநிலங்கள் சில தரிசாகக் கிடக்கின்றன. அவை பொதுநிலம் என்பதால், அவை பண்படுத்தப்படாமல் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்டு அரசு அதிகாரிகளை அணுகினேன். ஆனால், அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. அதனால், அவற்றை ஊர் மக்கள் தாங்களே பண்படுத்திப் பயிர் செய்து, அரசாங்கத்துக்கு உரிய வரியைச் செலுத்தி விட்டு, மிகுதியுள்ள விளைச்சல் வருமானத்தை ஊருக்குப் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் மக்களிடம் கூறினேன்.
"இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கான கூலியைத் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கச் சில செல்வந்தர்கள் முன் வந்தனர். அவர்கள் செலவழித்த பணத்துக்கு ஈடாக விளைச்சலில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்பாடு. இதனால் ஊரும் வளம் பெறும், அரசாங்கத்துக்கும் வரி வருமானம் கிடைக்கும்.
"ஊரில் உள்ள ஆற்றுநீரைச் சரியாகப் பயன்படுத்த முடியாததால், அதில் வரும் நீர் வீணாகிக் கொண்டிருந்தது. ஒருசில பெருநிலக்காரர்கள் தங்கள் நிலத்துக்கு மட்டும் நீர் வரும்படி கால்வாய்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவற்றை ஊரில் பலருக்கும் பயன்படும்படி மாற்றி அமைத்தோம்.
"ஊரில் உள்ள அனைவரும் விவசாயத்திலேயே ஈடுபடுவதை மாற்றித் திறமையும், முனைப்பும் உள்ள சிலரை வேறு தொழில்கள், வியாபாரங்களில் ஈடுபடும்படி ஊக்குவித்தேன்.
"ஊரில் நடக்கும் குற்றங்களை ஊர்ப் பெரியவர்களே விசாரித்து, குற்றம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்பாமல், அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கான ஒரு அமைப்பை ஊரில் உருவாக்கினோம்.
"எங்கள் ஊரில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிப்பதைப் பார்த்துப் பக்கத்து ஊர்களிலிருந்து சிலர் தாங்களும் இதே போல் செயல்பட உதவும்படி எங்களை அணுகினர். அவர்களை எங்கள் ஊருக்கு வரவழைத்து, நாங்கள் செய்தவற்றை அவர்களுக்குக் காட்டினோம். அந்தத் திட்டங்களை அவர்கள் தங்கள் கிராமங்களிலும் செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்!"
"இப்படியே போய்க் கொண்டிருந்தால், இது போல் எல்லா ஊரிலும் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்புறம், நாடே வளம் பெற்றதாக ஆகி விடாதா? எவ்வளவு பெரிய தேசத்துரோகச் செயல் இது!" என்றார் அரசர்.
அனைவரும் குழப்பத்துடன் அரசரைப் பார்க்க, அரசர் அமைச்சரைப் பார்த்து, "அமைச்சரே! உங்களுக்கு உதவியாளராக அறிவும், திறமையும் கொண்ட ஒரு நபர் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தீர்களே, இந்த பரதனை விடச் சிறந்த மனிதர் உங்களுக்குக் கிடைக்க மாட்டார்!" என்றார்.
மன்னரின் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு, பரதனைப் பிணைத்திருந்த சங்கிலிகளைக் காவலர்கள் விடுவித்தனர்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு
குறள் 732:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
No comments:
Post a Comment