Monday, January 2, 2023

854. ரகுவுக்கு ஏன் கோபம் வரவில்லை?

"புரிஞ்சுதா? இதையெல்லாம் சரியா ஃபாலோ பண்ணணும். இல்லேன்னா உங்களுக்கும் பிரச்னை, மற்றவங்களுக்கும் பிரச்னை!" என்று அதிகார தொனியில் கூறி விட்டு அகன்றார் குடியிருப்பு சங்கத்தின் செயலாளர் ராமநாதன்.

வாசற்படியிலிருந்து உள்ளே திரும்பிய மணிகண்டன் "எப்படிப் பேசிட்டுப் போறாரு பாரு! ஏதோ நாம இவர்கிட்ட சம்பளத்துக்கு வேலை செய்யற ஆட்கள் மாதிரி. அவங்களைக் கூட அவங்க முதலாளியால இப்படியெல்லாம் பேச முடியாது! இவரு அசோசியேஷன் செகரட்டரி, நான் இங்கே வாடகை கொடுத்துக் குடியிருக்கறவன். எங்கிட்ட இப்படியெல்லாம் பேச இவருக்கு என்ன அதிகாரம் இருக்குழ. ஹவுஸ் ஓனர்கிட்ட சொல்லி அசோசியேஷன்ல புகார் கொடுத்து இவரை மாத்தச் சொல்றேன் பாரு!" என்றான் மனைவியிடம் கோபத்துடன்.

சில நாட்கள் கழித்து வாசலில் செயலாளர் யாரிடமோ கோபமாகப் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. மணிகண்டன் வாசலில் எட்டிப் பார்த்தபோது அடுத்த ஃபிளாட்டில் வசிக்கும் ரகுவிடம்தான் அவர் ஏதோ கத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. ரகு மெதுவான குரலில் அவருக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

செயலாளர் சென்றதும் மணிகண்டன் தன் வீட்டுக்கு வெளியே வந்தான். தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ரகு அவனைப் பார்த்துச் சிரித்தார்.

"என்ன சார் இவரு இப்படிக் கூச்சல் போடறாரு? செகரட்டரின்னா என்ன வேணும்னாலும் பேசலாமா? நானாவது வாடகைக்குக் குடி இருக்கறவன். நீங்க வீட்டுச் சொந்தக்காரர் ஆச்சே!அதுக்காகவாவது ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டாம?" என்றான் மணிகண்டன் ரகுவிடம்.

"வீட்டுச் சொந்தக்காரரா இருந்தா என்ன, வாடகைக்குக் குடி இருப்பவரா இருந்தா என்ன? அவரைப் பொருத்தவரையில இந்தக் கட்டிடப் பராமரிப்பு அவர் பொறுப்பு. எங்கே தப்பு நடந்தாலும் கேக்கத்தான் செய்வாரு. என் வீட்டில ஒரு சின்ன லீக் இருக்கு. நானே அதை கவனிக்கல. என் வீட்டிலேந்து வெளியே போற தண்ணிக் குழாயில ரொம்ப நேரமா தண்ணி போய்க்கிட்டிருக்கறதைப் பாத்துட்டு வந்து கேட்டாரு. அப்பதான் நான் லீக் இருக்கறதை கவனிச்சேன். உடனே சரி பண்ணிடறேன்னு சொன்னேன். சரின்னுட்டுப் போயிட்டாரு!" என்றார் ரகு.

"ஓ, அதுக்குத்தான் 'உங்களை மாதிரி'யானவங்களே பொறுப்பு இல்லாம இருந்தா எப்படி சார், எவ்வளவு தண்ணி வீணாகுது? ன்னு கத்தினாரா?"

ரகு மௌனமாகத் தலையசைத்தார். 

"அன்னிக்கு அவர் எங்கிட்ட வந்து இப்படித்தான் எதுக்கோ கத்தினப்ப எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா! அதுக்கப்பறம் அவர் முகத்தைப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல. நீங்க என்னடான்னா கொஞ்சம் கூடக் கோபப்படாம அமைதியா இருக்கீங்க!" என்றான் மணிகண்டன் வியப்புடன்.

"அவர் தன்னோட கடமையைச் செய்யறாரு. ஆனா கொஞ்சம் கடுமையாப் பேசறாரு. அதுக்காக அவர் மேல கோபப்பட்டா அவரைப் பிடிக்காம போய் விரோத மனப்பான்மை ஏற்படும். யார்கிட்டயும் விரோத மனப்பான்மை வளர்த்துக்கறது நமக்கு நல்லதில்ல. அப்படி வளர்த்துக்கிட்டா அது நம்ம மனசுக்குள்ள ஒரு உறுத்தலாவே இருந்துக்கிட்டிருக்கும். நம்மால சந்தோஷமாவே இருக்க முடியாது.அதனாலதான் அவர் கோபமாப் பேசறதை நான் பொருட்படுத்தறதில்ல" என்றார் ரகு.

பொருட்பால்
நட்பியல் 
அதிகாரம் 86
இகல்

குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்: 
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...