மொழி தெரியாத ஊருக்குப் போய், இரண்டு மாதங்களுக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்வது எப்படி என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
"இது ஆந்திராவில நாம ஆரம்பிக்கிற முதல் கிளை. நம் சேர்மன் ஆந்திராக்காரர்ங்கறதால, அவர் இதில ரொம்ப ஆர்வமா இருக்காரு. தானே வந்து கிளையைத் திறந்து வைக்கறதாச் சொல்லி இருக்காரு!" என்றார் பொது மேலாளர்.
நாகராஜனுக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
"சார்! எனக்குத் தெலுங்கு தெரியாது. நம்ம ரங்கநாதம் சாரை என்னோட அழைச்சுக்கிட்டுப் போகலாமா சார்? பிராஞ்ச் ஆஃபீஸ் திறந்தப்பறம், அவர் இங்கே திரும்பி வந்துடலாம்!" என்றான் நாகராஜன்.
பொது மேலாளர் சற்று யோசித்து விட்டு, "உங்களுக்கு உதவியா உள்ளூர்லேந்தே ஒத்தரை நியமிச்சுக்கச் சொல்லலாம், பிராஞ்ச் திறந்தப்பறம், அவர் அங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம்னு நினைச்சேன். பரவாயில்லை. ரங்கநாதம் சரின்னு சொன்னா, அழைச்சுக்கிட்டுப் போங்க. நான் ஆஃபீஸ் ஆர்டர் போட்டுடறேன்!" என்றார்.
ரங்கநாதம் முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு ஒப்புக் கொண்டார். அவர் நாகராஜனை விட சீனியர். ஆனால், பதவி உயர்வில் அவருக்கு ஆர்வம் இல்லை. எனவே, நாகராஜன் கிளை மேலாளராகப் பதவி உயர்வு பெற்றதில் அவருக்கு வருத்தம் இல்லை.
அந்த ஊருக்குச் சென்றதும், ஒரு ஓட்டல் அறையில் தங்கிக் கொண்டு, தன் பணிகளைத் துவக்கினான் நாகராஜன். தெலுங்கு தெரிந்த ரங்கநாதத்தின் உதவியுடன், ஒரு வாரத்தில் அலுவலகத்துக்கான ஒரு கட்டிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.
பொது மேலாளரிடம் தகவலைத் தொலைபேசியில் தெரிவித்ததும், அவர் "சரி, கட்டட உரிமையாளர்கிட்ட லீஸ் அக்ரிமென்ட் போடணும். அதுக்கு முன்னால, உரிமையாளர் அவர்தானான்னு சரிபாக்கணும். நீங்க கட்டட உரிமையாளரோட டாகுமென்ட்ஸ் காப்பி எல்லாம் வாங்கி அனுப்புங்க. நம்ம லீகல் அட்வைசர்கிட்ட கொடுத்து அப்ரூவல் வாங்கிடலாம்!" என்றார்.
"சார்! இஃப் யூ டோன்ட் மைண்ட், இதுக்கு ரொம்ப டைம் ஆகும், சார். லீகல் அட்வைசரை இங்கே வரச் சொன்னா, ரெண்டு நாள்ள வேலை முடிஞ்சுடும்!" என்றான் நாகராஜன்.
பொது மேலாளர் அவன் யோசனையை ஒப்புக் கொண்டார்.
"நீ பெரிய ஆள்தாம்ப்பா! முதல்ல, ஜி எம்கிட்ட சொல்லி, உதவிக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்ட. இப்ப, லீகல் அட்வைசரையே இங்கே அனுப்பச் சொல்லி, அதுக்கும் ஒப்புதல் வாங்கிக்கிட்டியே!" என்றார் ரங்கநாதம், சிரித்துக் கொண்டே.
"செய்யற வேலையை சரியாச் செய்ய வேண்டாமா சார்? டாகுமென்ட்டையெல்லாம் வக்கீல் நேரில பாத்துட்டார்னா, அப்புறம் பிரச்னை வராது இல்ல? வேலையைக் குறிப்பிட்ட நேரத்திலயும் முடிக்கணும், தவறுகள் நேராம, சரியாவும் செஞ்சு முடிக்கணும் இல்ல? சரி. கிளம்புங்க. ஆஃபீசுக்குள்ள பார்ட்டிஷன்ஸ், ஃபர்னிஷிங் எல்லாம் பண்ண ஆளைப் பிடிக்கணும்!" என்றான் நாகராஜன்.
அலுவலகம் திறக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பே அலுவலக வாசலில் போர்டை மாட்டி, தெலுங்கில் ஒரு பெரிய பேனரையும் வைக்கச் செய்தான் நாகராஜன்.
"இப்பவே எதுக்குப்பா போர்டு, பேனர் எல்லாம்? ஒரு நாள் முன்னால வச்சா போதாதா?" என்றார் ரங்கநாதம்.
"தெருவில போறவங்க நிறைய பேரு பாப்பாங்க இல்ல. 'அனைவரும் வருக'ன்னு தெலுங்கில எழுதி இருக்கோம். அதனால, சில பேர் ஆர்வத்தில வரலாம். இன்னிக்கே ரெண்டு மூணு பேர் உள்ள வந்து, இது என்ன ஆஃபீஸ்னு கேட்டுட்டுப் போனாங்க!"
"அது சரி. 11.30 க்கு டீன்னு போட்டிருக்கியே. வரவங்களுக்கெல்லாம் காப்பி, டீ கொடுக்கப் போறமா என்ன? கட்டுப்படி ஆகுமா"
"ஆமாம். காப்பி, டீக்காகவே சில பேர் நிகழ்ச்சிகளுக்கு வரதை நான் பாத்திருக்கேன்! எவ்வளவு பேர் வரப் போறாங்க? நூறு பேர் வந்தா அதிகம். பக்கத்து ஓட்டல்லேந்து, நூறு காப்பி, நூறு டீ கொண்டு வரச் சொல்லி இருக்கேன். அதோட, மூணு ரூபா பிஸ்கட் பாக்கெட் முன்னூறு வாங்கி வைக்கப் போறோம். வரவங்களுக்கு காப்பி, டீ, பிஸ்கட் பாக்கெட் கொடுத்தா, அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும், நம்ம பட்ஜெட்டுக்குள்ளதான் வரும். நாம எல்லாத்தையும் பாத்துப் பாத்துத்தானே செலவழிக்கிறோம்?" என்றான் நாகராஜன்.
எல்லாவற்றையும் செய்வது நாகராஜன்தான், தான் ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே இருக்கிறோம் என்பதை ரங்கநாதம் உணர்ந்திருந்தாலும், நாகராஜன் ஒவ்வொரு விஷயத்திலும் 'நாம் செய்கிறோம்' என்று தன்னையும் சேர்த்துக் கூறியது, ரங்கநாதத்துக்குப் பெருமிதத்தையும், மகிழ்ச்சியும் அளித்தது.
கிளை திறப்பு பற்றி ஐயாயிரம் நோட்டீஸ் அடித்து, அவற்றை நகரின் பல இடங்களிலும் முதல்நாள் மாலை விநியோகிக்க ஏற்பாடு செய்தனர்.
அந்த ஊரின் உள்ளூர் தினப்பத்திரிகையில் இன்றைய நிகழ்ச்சிகள் என்ற பகுதியைப் பலரும் பார்ப்பார்கள் என்று அறிந்து, திறப்பு விழா நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அதில் விளம்பரமாக வெளியிடவும், ஒரு விளம்பர ஏஜன்சி மூலம் ஏற்பாடு செய்தனர்.
திறப்பு விழா அன்று காலை உள்ளூர்ப் பத்திரிகையைப் பார்த்த நாகராஜனுக்கு அதிர்ச்சி! பத்திரிகையின் 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியில், அவர்கள் நிறுவனக் கிளை திறப்பு விழா நிகழ்ச்சி இடம் பெறவில்லை
ரங்கநாதம் மூலம் பத்திரிகைக்கு ஃபோன் செய்து கேட்டபோது, சில சமயம் இடப் பற்றாக்குறையால் சில நிகழ்ச்சிகள் விட்டுப் போகும் என்றும், அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பி அளித்து விடுவதாகவும் பத்திரிகையிலிருந்து பேசியவர் குறிப்பிட்டார்.
"பணத்தைத் திருப்பிக் கொடுத்து என்ன பிரயோசனம்? பத்திரிகையில வர அறிவிப்பைப் பார்த்து நிறைய பேர் வருவாங்கன்னு நம்பிக்கையா இருந்தோமே! சேர்மன் வரப்ப கூட்டம் இல்லாம இருந்தா நல்லா இருக்காதே!" என்றான் நாகராஜன்.
"விடுப்பா. நீ எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துத்தான் செஞ்சே. உன்னையும் மீறி நடந்த விஷயம் இது. இந்தத் தப்புக்கு நீயோ நானோ பொறுப்பு இல்ல. நாம ஏற்கெனவே நிறைய பேருக்கு இந்தத் தகவல் போகும்படி செஞ்சிருக்கோம். எத்தனை பேர் வராங்களோ வரட்டும்! நாம என்ன செய்ய முடியும்?" என்றார் ரங்கநாதம்.
"இப்ப மணி ஒன்பது. சேர்மன் பதினோரு மணிக்கு மேலதான் வருவாரு. நல்ல வேளை, அவர் தன் சொந்த ஊருக்குப் போயிட்டு, அங்கேந்து கார்ல வரதா சொல்லிட்டாரு. அதனால அவரை வரவேற்க நாம எங்கேயும் போக வேண்டாம். கூட்டத்தை எப்படிக் கூட்டறதுன்னு யோசிக்கலாம்!" என்றான் நாகராஜன்.
"தெருவில போய் நின்னு, ஒவ்வொத்தரையா வாங்க வாங்கன்னு கூப்பிடப் போறமா என்ன?"
"கரெக்ட். அப்படியே செய்யலாம்! நாம அடிச்ச நோட்டீஸ் கொஞ்சம் மீதி இருக்கு இல்ல?"
"ஆமாம், ஒரு ஐநூறு, அறுநூறு நோட்டீஸ் மீதி இருக்கும்."
"அதை எங்கிட்ட கொடுங்க. பத்து மணிக்கு மேல மெயின் ரோடில நின்னுக்கிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வரக் கூடியவங்க யாருன்னு பாத்துக் கொடுக்கறேன். அதில கொஞ்சம் பேராவது வராமலா போவாங்க?"
"என்னப்பா இது? நீ பிராஞ்ச் மானேஜர். நீ போய்த் தெருவில நின்னு, நோட்டீஸ் கொடுக்கறேங்கற?" என்றார் ரங்கநாதம், தயக்கத்துடன்.
"முதல்ல பிராஞ்ச் திறக்கணும். அப்புறம்தானே பிராஞ்ச் மானேஜர்? நீங்க இங்கேயே இருந்து பாத்துக்கங்க. நான் போய் நோட்டீஸ் கொடுத்துட்டு வரேன்!" என்றான் நாகராஜன், சிரித்துக் கொண்டே.
"திறப்பு விழா ரொம்ப பிரம்மாண்டமா நடந்துடுச்சு. பிரமாதமா செஞ்சுட்டப்பா! நீ கஷ்டப்பட்டது வீண் போகல. நூறு பேருக்கு மேலயே வந்துட்டாங்க. சேர்மனுக்கு ரொம்ப சந்தோஷம். இனிமே, நீ இந்த பிராஞ்ச்சை பிரமாதமா நடத்தப் போற பார்!" என்றார் ரங்கநாதம் உணர்ச்சிப் பெருக்குடன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
குறள் 662:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
பொருள்:
செய்யும் செயல்களில் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, தவறு ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.
No comments:
Post a Comment