Friday, December 16, 2022

849. கிரடிட் கார்ட்

ஓட்டலில் உணவருந்திய பின் பில்லுக்குப் பணம் கொடுக்க தாமோதரன் பர்சைத் திறந்தபோது, அதில் பல கிரடிட் கார்டுகள் இருந்ததை மணி பார்த்தான்.

"என்னடா, இவ்வளவு கிரடிட் கார்டு வச்சிருக்க?" என்றான் மணி.

"ஆமாம். தினம் பத்து பாங்க்லேந்து ஃபோன் பண்ணி கிரடிட் கார்டு வாங்கச் சொல்றாங்க. சரின்னு சிலதை வாங்கிக்கிட்டேன். பார்த்தா, பத்து கார்டு சேர்ந்து போச்சு. இதோட போதும்னு நிறுத்திட்டேன்!"

ஓட்டலிலிருந்து கிளம்பி, இருவரும் மணியின் வீட்டுக்கு வந்தனர்.

"இவன் மணி. கல்கத்தால ஒரு பெரிய கம்பெனியில ஃபைனான்ஸ் மானேஜரா இருக்கான்!" என்று தன் மனைவிக்கு நண்பனை அறிமுகப்படுத்திய தாமோதரன், நண்பனைத் தன் அறைக்கு அழைத்துக் கொண்டு போனேன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், மணி, "டேய்!  இவ்வளவு கிரடிட் கார்டெல்லாம் வச்சுக்காதே. உன்னை அறியாமலே அதிகமா செலவு பண்ணி, பிரச்னை ஆயிடும்" என்றான்.

"டேய் மணி! நான் ஒரு பிசினஸ்மேன். சில சமயம் வாடிக்கையாளர்களோட எங்கேயாவது போகறப்ப, நிறைய செலவழிக்க வேண்டி இருக்கு. கார்டு இருந்தா சௌகரியமா இருக்கு."

"அதுக்கு ஒரு கிரடிட் கார்டு போதுமே. வேணும்னா ரெண்டு வச்சுக்க. அதுக்கு மேல வச்சுக்கறது டேஞ்ஜர்!"

"டேஞ்ஜரா?" என்று பெரிதாகச் சிரித்த தாமோதரன், "ஆமாம். நீ எத்தனை கார்டு வச்சிருக்கே?" என்றான்.

"ரெண்டு. ஆனா, ஒண்ணைத்தான் அதிகம் பயன்படுத்தறேன்" என்றான் மணி.

"அதனாலதான் உனக்குத் தெரியல! நான் என்ன செய்வேன் தெரியுமா? ஒரு கார்டில பணம் கட்ட வேண்டிய சமயத்தில, அதில உள்ள கடன் பாக்கியை பாலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மூலமா இன்னொரு கார்டுக்கு மாத்திடுவேன். அதை ஆறு மாசத்திலேயோ, ஒரு வருஷத்திலேயோ கொஞ்சம் கொஞ்சமா கட்டிக்கலாம். ஒரு பர்ஸன்ட்தான் வட்டி போடுவாங்க!"

"ப்ராசஸிங் சார்ஜுன்னு ஒண்ணு போடுவாங்களே?"

"ஆமாம். அது ஐநூறோ, ஆயிரமோ போடுவாங்க. அதை நான் பொருட்படுத்தறதில!" என்றான் தாமோதரன், அலட்சியமாக.

"இதுல ரெண்டு மூணு விஷயம் இருக்கு. உன்னோட கடன் நிலுவைத் தொகை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டே போகும். ப்ராசஸிங் சார்ஜ், வட்டின்னே ஏகப்பட்ட பணம் போகும். நீ நிறைய கார்டு வேற வச்சிருக்கறதால, இன்னொரு கார்டில வாங்கலாம்னு இறங்குவே. சில மாதங்கள்ள கடன் தொகை கட்டுக்கடங்காம போயிடும். வட்டியா வேற ஏகப்பட்ட பணம் கொடுத்துக்கிட்டிருப்ப. ஒண்ணு அல்லது ரெண்டு கார்டு வச்சுக்கிட்டாதான், கிரடிட் கார்டை கட்டுப்பாட்டோட பயன்படுத்த முடியும்!"

"மணி! நீ சம்பளம் வாங்கறவன். உனக்கு நிலையான வருமானம்தான். எனக்கு அப்படி இல்ல. திடீர்னு ஒரு பெரிய தொகை வரும். அப்ப எல்லா கிரடிட் கார்ட் தொகைகளையும் ஒரே நேரத்தில அடைச்சுடுவேன்!"

"நிலையான வருமானம் இல்லாதப்பதான், இன்னும் கவனமா இருக்கணும். நீ சொல்ற மாதிரி, உனக்கு திடீர்னு நிறைய பணம் வரலாம். அது மாதிரி, சில சமயம் பணம் வரதுக்கு தாமதாமானா, கேஷ் ஃப்ளோ இல்லாம கூட இருக்கும். அதனாலதான், ஜாக்கிரதையா இருந்துக்கச் சொல்றேன்!" என்றான் மணி.

மணி சென்றதும், "பெரிய கம்பெனியில ஃபைனான்ஸ் மானேஜரா இருக்கான். ஆனா, கிரடிட் கார்டுகளை எப்படி புத்திசாலித்தனமாப் பயன்படுத்தறதுன்னு தெரியல. இந்த லட்சணத்தில எனக்கு வேற அட்வைஸ் பண்றான்!" என்றான் தாமோதரன், தன் மனைவியிடம்.

"அவர் என்ன சொன்னார்னு எனக்குத் தெரியாது. ஆனா, ரெண்டு மூணு மாசமா நான் கவனிக்கிற ஒரு விஷயத்தை சொல்றேன். நீங்க மாசா மாசம் கிரடிட் கார்டுக்குக் கட்டற தொகை அதிகமாகிக்கிட்டே போகுது. அதனால, வீட்டுச் செலவுக்குக் கொடுக்கற பணத்தைக் கூடக் குறைச்சுட்டீங்க. சரி, கடனையெல்லாம் அடைச்சுக்கிட்டிருக்கீங்க போலருக்குன்னு நினைச்சேன். ஆனா, கிரடிட் கார்ட் பில்லையெல்லாம் பாத்தா, மாசா மாசம் கடன் பாக்கி அதிகமாகிக்கிட்டே போகுது. கிரடிட் கார்ட் பயன்படுத்தறதை நிறுத்துங்க. இல்லேன்னா, இது எங்கே போய் முடியும்னே தெரியல!" என்றாள் அவன் மனைவி.

'அவன்தான் அறிவில்லாம பேசிட்டுப் போறான்னா, நீயுமா?' என்று நினைத்துக் கொண்டான் தாமோதரன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)

குறள் 849:
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

பொருள்: 
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததையே அறிவாக எண்ணுவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...