பெரும்பாலும், ஐயா தன்னைச் சுற்றித் தன் துதிபாடிகளையும், சட்டத்தையோ, விதிகளையோ பற்றிக் கவலைப்படாமல் தான் விரும்பியதைச் செய்பவர்களையும்தான் வைத்துக் கொள்வார். வளைந்து கொடுக்காதவன் என்று கருதப்பட்ட என்னை ஏன் வைத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.
ஐயா என்னைத் தன் வீட்டு அலுவலகத்தில் நியமித்துக் கொண்டார். அவர் வீட்டில் பல்வேறு சந்திப்புகள் நிகழும், பல்வேறு பரிவர்த்தனைகளும் நடக்கும். அவற்றை நான் வெளியில் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையில்தான், என்னைத் தன் வீட்டு அலுவலகத்தில் நியமித்துக் கொண்டார் என்று நான் பிறகுதான் புரிந்து கொண்டேன்.
ஐயாவின் வீட்டில், தங்கப்பன் என்ற அவருடைய தூரத்து உறவினர் ஒருவரும் தங்கி இருந்தார். அவர்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகளை நிகழ்த்தியவர். பல தொழிலதிபர்களும், ஒப்பந்ததாரர்களும் பெரிய சூட்கேஸ்களைக் கொண்டு வந்து இறக்குவதும், தங்கப்பன் அவற்றைத் திறந்து பார்த்து விட்டு, அவருக்கு நம்பிக்கையான வேலையாட்கள் மூலம் அவற்றை உள்ளே கொண்டு வைக்கச் சொல்வதும், அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.
நான் இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்தேன்.
ஒரு விடுமுறை நாளில், நான் ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தபோது, என் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். என்னை ஓரிரு முறை உற்றுப் பார்த்து விட்டு, "சார்! நீங்க ஐயா வீட்டில இருக்கறவருதானே?" என்றார்.
"முதல்வரோட வீட்டு அலுவலகத்தில வேலை செய்யற ஒரு அதிகாரி நான்" என்றேன் நான்.
"உங்களைப் பாத்திருக்கேன் அங்கே. என்ன சார், இப்படிப்பட்ட அநியாயம் எல்லாம் பண்றாங்க?" என்றார் அவர், ஆத்திரத்துடன்.
"என்ன விஷயம்? ஏதாவது பிரச்னைன்னா, குறை தீர்க்கற அலுவலகத்துக்கு எழுதிப் போடுங்க."
"ஐயா செஞ்ச அக்கிரமத்தைப் பத்தி, குறை தீர்க்கற அலுவலகத்தில சொல்ல முடியுமா என்ன?"
"சார், இதையெல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க!" என்று நான் கூறியதைப் பொருட்படுத்தாமல், அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன், அவர் புறநகர்ப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பண்ணை அமைத்து, ஒரு பண்ணை வீட்டையும் கட்டிக் குடி இருந்து வந்தாராம்.
ஐயாவின் வீட்டுக்கு அவரை வரவழைத்து, ஐயாவும் தங்கப்பனும் அவரை மிரட்டி, அந்த நிலத்தையும் வீட்டையும் மிகக் குறைந்த விலையில் தங்களுக்கு விற்க வைத்து விட்டார்களாம்.
"அவங்க கொடுத்த பணத்தில, என்னால ஒரு ஃபிளாட் கூட வாங்க முடியாது சார். இனிமே, நானும், என் குடும்பமும் நடுத்தெருவிலதான் நிக்கணும்" என்று கூறி, அவர் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்.
"நீங்க விற்க முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே!" என்றேன் நான், அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்.
"எப்படி சார்? என் குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய்க் கொலை செஞ்சுடுவேன்னு மிரட்டினாங்க. ஏற்கெனவே, ஒத்தரோட குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் மிரட்டி, அவர் சொத்தை எழுதி வாங்கி இருக்காங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். அப்படி இருக்கறப்ப, நான் எப்படி அந்த மிரட்டலுக்குப் பணியாம இருக்க முடியும்?" என்றவர், திடீரென்று கோபத்துடன் எழுந்து, "நான் இப்ப சொல்றேன் சார்! இவங்க நல்லா இருக்க மாட்டாங்க. என்னோட கண்ணீரும், என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பலரோட கண்ணீரும், இவங்களை சும்மா விடாது!" என்று சாபமிடுவது போல் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.
இப்போது நான் ஓய்வு பெற்று விட்டேன்.
அன்று, என் வழக்கறிஞரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பல வருடங்கள் முன்பு, ஒரு கிராமத்தில் நான் வாங்கி இருந்த சிறிதளவு நிலத்தைச் சிலர் போலிப் பத்திரம் தயாரித்து விற்று விட்டதை எதிர்த்து நான் போட்டிருந்த வழக்கில், எனக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ள செய்தியை அவர் தெரிவித்தார்.
"ரொம்ப நன்றி சார்!" என்றேன் நான்.
"நன்றியெல்லாம் எதுக்கு சார்? நீங்க நியாயமா சம்பாதிச்ச சொத்து உங்களை விட்டு எப்படிப் போகும்? அதான் திரும்பிக் கிடைச்சுடுச்சு!" என்றவர், தொடர்ந்து, "ஆமாம், ஐயாவோட சொத்தையெல்லாம் ஏலம் விடப் போறாங்களாமே!" என்றார்.
"ம்" என்றேன் நான். நான் ஐயா பற்றிப் பேசுவதில்லை என்றாலும், என்னிடம் பேசுபவர்கள் ஐயா பற்றிப் பேசாமல் இருப்பதில்லை!
"கொஞ்ச அக்கிரமா பண்ணினாங்க, ரெண்டு பேரும்? சொத்துக் குவிப்பு வழக்கில ரெண்டு பேருக்கும் அஞ்சு வருஷ சிறை தண்டனை கிடைச்சப்பறம், சொத்துக்களைப் பறிமுதல் செய்யறதும் ஆரம்பிச்சுடுச்சு. எத்தனை பேர் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்களோ!" என்றார் வக்கீல்.
அன்று பூங்காவில் என் பக்கத்தில் அமர்ந்து புலம்பி சாபம் விட்ட அந்த மனிதரின் முகம் என் நினைவில் நினைவு வந்தது.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
பொருள்:
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம், நாம் அழ நம்மை விட்டுப் போய் விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும், அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
No comments:
Post a Comment