பொதுவாக, ஒரு தாய் தன் மகனைப் பற்றிக் குறை கூறித் தன் மருமகளிடம் பேச மாட்டாள் என்றாலும், தன் மகன் பாஸ்கர் இப்படி இருக்கிறானே என்ற ஆதங்கத்தால் அன்னம் அப்படிப் பேசினாள்.
பள்ளிப் படிப்பு முடித்ததும், பாஸ்கரின் கணக்கு ஆசிரியர், "பாஸ்கர்! உனக்குக் கணக்கு நல்லா வருது. நீ எஞ்சினியரிங் படிக்கலாம். ஆனா, நீ அதுக்கு அப்ளை பண்ணவே இல்லை. பி.எஸ்.சி மேத்ஸ் அல்லது பி.காம் படி!" என்றார்.
கணக்கு ஆசிரியர் சொன்னதை, பாஸ்கர் தன் வீட்டில் வந்து சொன்னதும், "உன் அப்பா இல்லை. உன்னை எஞ்சினியரிங் படிக்க வைக்க எனக்கு வசதி இல்லை. உன்னோட ஆசிரியர் சொன்னபடியே, பி.எஸ்.சியோ, பி.காமோ படியேன்!" என்றாள் அன்னம். பாஸ்கரின் தந்தை அவன் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு ஒரு வருடம் முன்பு இறந்து விட்டார்.
"அவர் சொன்னாக்க? நான் பி.ஏ. லிடரேசர்தான் படிக்கப் போறேன்!" என்றான் பாஸ்கர்.
ஆங்கில இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறதா என்று சில நண்பர்கள் அவனிடம் கேட்டபோது, "ஆர்வம்கறது நாமா வளர்த்துக்கறதுதான்!" என்றான் பாஸ்கர், அலட்சியமாக.
ஆனால், ஆங்கில இலக்கியத்தில் அவனுக்கு ஆர்வம் ஏற்படவும் இல்லை. அந்தப் படிப்பு அவனுக்குக் கைகொடுக்கவும் இல்லை.
பட்டப்படிப்பு முடித்த பின், சற்றே நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டான் பாஸ்கர்.
பாஸ்கருக்கும், கமலிக்கும் தங்கள் மகன் சித்தார்த்தைப் பள்ளியில் சேர்ப்பது பற்றி விவாதம் ஏற்பட்டபோதுதான், அன்னம் இவ்வாறு சொன்னாள்.
தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நல்ல பள்ளியில் தங்கள் மகனைச் சேர்க்கலாம் என்று கமலி கருதினாள். ஆனால், ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள, புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்றான் பாஸ்கர். அது இன்னும் சிறந்த பள்ளி என்பது அவன் வாதம்.
பள்ளி பஸ் வந்து அழைத்துச் செல்லும் என்பதால், தூரம் ஒரு பிரச்னை இல்லை என்றான் பாஸ்கர்.
பாஸ்கரின் நண்பன் சுகுமார் கூட, "டேய்! அவ்வளவு தூரத்தில இருக்கற ஸ்கூல்ல சேக்கறது நல்லது இல்ல. அதோட, அந்த ஸ்கூல்ல இன்னும் கட்டடங்கள் கூட முழுசாக் கட்டல. அந்த ஸ்கூல் டெவலப் ஆகவே ரெண்டு மூணு வருஷம் ஆகும்னு சொல்றாங்க!" என்றான்.
ஆனால், பாஸ்கர் கேட்கவில்லை. சுகுமார் சென்றதும், "இவன் எல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்டான். இவனோட பையனை நான் சொல்ற ஸ்கூல்ல சேப்பானா?" என்றான் பாஸ்கர், கமலியிடம்.
பாஸ்கர் பிடிவாதமாக சித்தார்த்தை அந்தப் பள்ளியில் சேர்த்தான். பஸ் ஏற்பாடு செய்யச் சில நாட்கள் ஆகும் என்று பள்ளி நிர்வகம் தெரிவித்திருந்ததால், பாஸ்கரோ, கமலியோ சித்தார்த்தைப் பள்ளியில் கொண்டு விட்டு வந்தார்கள். இருவருமே வேலை பார்த்து வந்ததால், இருவருக்குமே நேரத்துக்கு அலுலகத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு மாதம் கழித்து, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிக மாணவர்கள் இல்லாததால், அங்கே பஸ் வராது என்று பள்ளியில் சொல்லி விட்டார்கள்.
"இந்த ஸ்கூல் டெவலப் ஆக ரெண்டு மூணு வருஷம் ஆகும்னு உங்க நண்பர் அப்பவே சொன்னாரு. நீங்க கேக்கல!" என்றாள் கமலி, குற்றம் சாட்டும் தொனியில்.
"பரவாயில்லை! ஆட்டோ ஏற்பாடு செஞ்சுடலாம்" என்றான் பாஸ்கர், ஆட்டோக்காரர் யாரேனும் இதற்கு முன்வருவாரா, முன்வந்தாலும், அவர் கேட்கும் கட்டணத்தைத் தன்னால் கொடுக்க முடியுமா என்று யோசித்தபடியே.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)
குறள் 848:
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
சுயபுத்தியும் இல்லாமல், பிறர் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடக்காமலும் இருப்பவனுக்கு, அந்த நிலை அவன் வாழ்நாள் முழுதும் அவனை விட்டு நீங்காத நோயாகும்.
No comments:
Post a Comment