"வேற எங்கேயாவது நிலம் வாங்கி, அங்கே கட்டிடம் கட்டிக்கலாம்!" என்றார் அவருடைய செயலாளர் முத்துலிங்கம்.
ஈஸ்வர யோகி சிரித்தார். "முத்து! நீ படிச்சவன். முத்து முத்தான யோசனைகளைச் சொல்லுவேன்னுதான், உன்னை என்னோட செகரட்டரியா வச்சுக்கிட்டிருக்கேன். இது மாதிரி சொத்தையான யோசனைகளைச் சொல்றதுக்கு இல்ல!" என்றார்.
ஈஸ்வர யோகி இது போல் சிரித்துக் கொண்டே பேசினால், அவர் கோபத்தில் பேசுகிறார் என்று பொருள் என்பது முத்துலிங்கத்துக்குத் தெரியும் என்பதால், அவர் மௌனமாக இருந்தார்.
"பக்கத்தில காட்டு நிலம் இருக்கு இல்ல, அதில அஞ்சு ஏக்கர்ல மரங்களை வெட்டிட்டு, அங்கே ஆசிரமத்தைக் கட்டிக்கலாம்!" என்றார் ஈஸ்வர யோகி.
"சுவாமிஜி! அது காட்டு நிலம். அது அரசாங்க நிலம். அதோட, அங்கே கட்டிடங்கள் கட்ட அனுமதி இல்ல."
"அரசாங்கம் அதை சும்மாதானே விட்டு வச்சிருக்கு? அதனால அதை நாம எடுத்துக்கலாம். அங்கே யோகா ஸ்கூல் ஆரம்பிக்கப் போறதா சொல்லி, ஓரமா ஸ்கூலுக்கு சின்னதா ஒரு கட்டிடம் கட்டிட்டு, மற்ற இடங்கள்ள நமக்கு வேண்டிய கட்டிடங்களைக் கட்டிக்கலாம். ஆர்க்கிடெக்ட்கிட்ட சொல்லி பிளான் போடச் சொல்லு. கட்டிட வேலையைச் சீக்கிரமா ஆரம்பிக்கணும்."
"பிளான் அப்ரூவல் எல்லாம் வாங்கணுமே, சுவாமிஜி!"
"கட்டினப்பறம் அப்ளை பண்ணி வாங்கிக்கலாம். எல்லா இடத்திலயும் நம்ம ஆளுங்கதானே இருக்காங்க?" என்று சொல்லிச் சிரித்தார் ஈஸ்வர யோகி. இது கோபச் சிரிப்பல்ல, அரசாங்கத்தையே தன் கையில் வைத்திருப்பதான நினைப்பின் காரணமாக எழுந்த ஆணவச் சிரிப்பு என்று முத்துலிங்கத்துக்குப் புரிந்தது.
உள்ளூர் மக்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, காட்டு நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் எழுந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில், நான்கு பக்கமும் உயரமான சுவர்கள் கட்டப்பட்டன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த இருந்த மான்கள் போன்ற விலங்குகள், தாங்கள் நடமாடும் பாதை அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு குழம்பி, காட்டுக்குள் வேறு இடங்களைத் தேடிச் சென்றன.
வளாகத்தின் ஒரு ஓரத்தில், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ், ஒரு சிறிய இடம் 'ஈஸ்வர யோகி யோகா பள்ளி' என்ற பெயர்ப் பலகையுடன் அநாதையாக கவனிப்பாரற்றுக் கிடக்க, முக்கியக் கட்டிடங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பக்தர்கள், ஈஸ்வர யோகியின் தர்ம உபதேசங்களைக் கேட்கவும், சிறப்பான நாட்களில் அவர் திரைப்பட நடிகைகளுடன் சேர்ந்து நடனமாடுவதைக் கண்டு களிக்கவும் குவிந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, புதிதாக வந்த அரசு, காட்டு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கப் போவதாகவும், நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் ஈஸ்வர யோகியின் ஆசிரமத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஈஸ்வர யோகி நீதிமன்றம் சென்று, அரசாங்கத்தின் நோட்டீசுக்குத் தடை வாங்கினார். மத்திய அரசை அணுகி, யோகா பள்ளி ஒரு கல்வி நிறுவனம் என்பதால், தங்களுக்கு சுற்றுச் சூழல் விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு அளித்தார். ஈஸ்வர யோகிக்கு ஆதரவாக மத்திய அரசு மனு தாக்கல் செய்ததால், மாநில அரசின் நோட்டீஸை நீதிமன்றம் ரத்து செய்தது.
"பாத்தியா? என்னவோ காட்டு நிலத்தில கட்டிடம் கட்டக் கூடாதுன்னு எனக்கு தர்மோபதேசம் பண்ணினியே?" என்றார் ஈஸ்வர யோகி, முத்துலிங்கத்தைப் பார்த்து.
'நீங்கதான் மத்தவங்களுக்கு தர்மோபதேசம் பண்ணிட்டு, எல்லா அதர்மமான காரியங்களையும் செய்வீங்க. நான் எப்படி உங்களுக்கு தர்மோபதேசம் செய்ய முடியும்?' என்று நினைத்துக் கொண்டார் முத்துலிங்கம்.
"இன்று காலை ஈஸ்வர யோகியின் ஆசிரமத்துக்குள் நுழைந்த ஒரு மதம் பிடித்த யானை, ஆசிரமத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்த ஈஸ்வர யோகியைத் தும்பிக்கையால் தூக்கி வீசியதில், ஈஸ்வர யோகிக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஸ்வர யோகியின் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். யானையால் தூக்கி எறியப்பட்ட ஈஸ்வர யோகியின் அலறலைக் கேட்டு, ஆசிரமத்துக்குள்ளிருந்து பலர் ஓடி வந்தததைப் பார்த்ததும், யானை பயந்து காட்டுக்குள் ஓடி விட்டது. அதனால், வேறு யாருக்கும் அந்த யானையால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், ஈஸ்வர யோகியின் ஆசிரமம் அமைந்துள்ள காட்டு நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி, மீண்டும் நீதிமன்றத்தை அணுப் போவதாக, வனத்துறை அமைச்சர் வேழவேந்தன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் பல செய்திகள், சிறிய இடைவேளைக்குப் பின்..." என்றார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண்மணி, புன்னகையுடன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
பொருள்:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு, ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும், துன்பமே ஏற்படும்.
No comments:
Post a Comment