வழக்கமாக எல்லா ஆசிரியர்களிடமும் சந்தேகம் கேட்கும் முதல் வரிசை குணசீலன் எழுந்து ஒரு சந்தேகம் கேட்டான்.
சம்பந்தத்துக்கு ஜிவ்வென்று கோபம் வந்து விட்டது.
"ஒரு மணி நேரமா இதை விளக்கி இருக்கேன். இப்ப வந்து, ஆரம்பத்தில சொன்ன விஷயத்தில சந்தேகம் கேக்கற! மறுபடி முதல்லேந்து ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் விளக்கணுமா? அதுக்கு அடுத்த வகுப்பு எடுக்க வேண்டிய பேராசிரியர் அனுமதி கொடுப்பாரான்னு முதல்ல கேட்டுக்க!"
"இல்லை சார்! அப்பவே கேக்க நினைச்சேன். உங்க லெக்சரின்போது குறுக்கே கேள்வி கேட்கக் கூடாது, முடிஞ்சப்பறம்தான் கேக்கணும்னு நீங்க சொல்லி இருக்கீங்க. அதனாலதான் இப்ப கேட்டேன்" என்றான் குணசீலன், சற்று பயந்த குரலில்.
"அதுக்காக? அடிப்படையான விஷயத்தைப் பத்தி, எல்லாம் முடிஞ்சப்பறமா கேக்கறது? புத்தகத்தைப் படி. புரியும்!" என்று சம்பந்தம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வகுப்பு நேரம் முடிந்ததற்கான மணி அடித்தது.
சம்பந்தம் எழுந்து வெளியே போய் விட்டார்.
"புரொஃபசர் சம்பந்தம்! நீங்க நிறையப் படிச்சிருக்கீங்க. ரிஸர்ச் பேப்பர்ஸ் பப்ளிஷ் பண்ணி இருக்கீங்க. நிறைய அனுபவம் உள்ளவர். ஆனா, உங்க மாணவர்கள் ஒரு விஷயம் சொல்றாங்க!" என்றார் கல்லூரி முதல்வர்.
"என்ன சொல்றாங்க?"
"நீங்க நடத்தின பாடத்தில மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அதை நீங்க விளக்க மாட்டேங்கறீங்களாமே!"
"முட்டாள்தனமான சந்தேகங்களையெல்லாம் விளக்க முடியாது, சார்"
"மன்னிக்கணும், புரொஃபசர். ஆசிரியர் தொழில்ல இருக்கிற நமக்கு மாணவர்கள் புரிஞ்சுக்கற விதத்தில சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை உண்டு. மாணவர்கள் சந்தேகம் கேட்டா, அதை விளக்க வேண்டிய பொறுப்பும் உண்டு."
"எல்லா மணவர்களுக்கும் எல்லா விஷயங்களும் புரியும்னு சொல்ல முடியாது. மாணவர்களோட எந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுங்கறதை ஆசிரியர்தான் முடிவு செய்யணும்னு நினைக்கறேன்" என்றார் சம்பந்தம்
'உங்களோட குறையை ஒத்துக்கவே மாட்டீங்க. அப்புறம் எங்கே அதை சரி செய்யப் போறீங்க?' என்று நினைத்த முதல்வர், பேச்சை மாற்ற விரும்பி, "ஆமாம். ரொம்ப நாளா உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சுப்பேன். நீங்க எப்பவும் முழுக்கை சட்டைதான் போடுவீங்களா? உங்களை வெளியில எங்கேயாவது பாக்கறப்ப கூட, நீங்க முழுக்கை சட்டைதான் போட்டுக்கிட்டிருக்கீங்க!" என்றார்.
சம்பந்தம் இலேசாகச் சிரித்தார். தலைப்பு மாறியது அவருக்கு நிம்மதி அளித்திருக்க வேண்டும்!
"அது ஒண்ணுமில்ல, சார்! சின்ன வயசில பட்டாசு வெடிக்கறப்ப, என் கையில ஒரு வாணம் பட்டுத் தீக்காயம் ஏற்பட்டது. அந்த வடு கொஞ்சம் பெரிசா, பழுப்பு நிறத்தில தனியாத் தெரியும். அது வெளியில தெரியாம இருக்கத்தான் முழுக்கை சட்டை போடற பழக்கத்தை வச்சுக்கிட்டிருக்கேன்!"
தன் உடலில் இருக்கும் சிறு குறையைப் பெரிதாக நினைத்து, முழுக்கை சட்டை போடுவதன் மூலம் அதை மறைக்கத் தெரிந்த சம்பந்தத்துக்கு, தான் கற்பிப்பதில் உள்ள குறையை ஏற்றுக் கொண்டு, அதைச் சரி செய்யத் தெரியவில்லையே!' என்று நினைத்துக் கொண்டார் முதல்வர்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)
குறள் 846:
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம் உடலை மட்டும் மறைப்பது அறிவின்மை.
No comments:
Post a Comment