"நான் செய்யப் போற பிசினஸ் பத்தி ஒத்தர் பயிற்சி வகுப்பு நடத்தி இருக்காரு. அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களை வச்சுக்கிட்டுத்தானே நான் தொழில் ஆரம்பக்கப் போறேன்! இதுல இன்னொருத்தர் யோசனை எதுக்கு?" என்றான் ராம்குமார்.
"டேய் முட்டாள்! யாரோ ஒருத்தன் சொந்தத் தொழில் தொடங்கப் பயிற்சி கொடுக்கறதாச் சொல்லி, ஏகப்பட்ட கட்டணம் வாங்கிக்கிட்டு, அம்பது பேரை உக்கார வச்சு, வகுப்பு எடுக்கற மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கான். அதை வச்சுக்கிட்டு நீ தொழில் ஆரம்பிக்கத் துணிஞ்சுட்ட! அனுபவம் உள்ள ஒத்தர்கிட்ட உன்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்றேன். அவரோட ஆலோசனைகள் உனக்குப் பயனுள்ளதா இருக்கும். அதைக் கேட்டுக்கறதில உனக்கு என்ன கஷ்டம்?" என்றான் தனஞ்சயன், கோபத்துடன்.
"சரி. நீ சொல்றதுக்காக வரேன்!" என்றான் ராம்குமார், தான் நண்பனுக்கு ஏதோ உதவி செய்வது போல்.
அடுத்த நாளே, தொழிலதிபர் ஆனந்தனை இருவரும் சென்று பார்த்தனர்.
"தம்பி! தொழில் ஆரம்பிக்கற எண்ணம் வந்துட்டா, அது ஒரு போதை மாதிரிதான். ஆர்வம் அதிகமா இருக்கும். அந்த அதீத ஆர்வமே அறிவைச் செயல்படாம செஞ்சுடும். நாம செய்யறதெல்லாம் சரியா இருக்கும்னு குருட்டுத்தனமா நம்ப வைக்கும். நான் பல தொழில்கள் செஞ்சு பார்த்து, எல்லாத்திலேயும் தோல்வி அடைஞ்சு, அப்புறம் ஒரு இடத்தில வேலைக்குப் போய், மூணு வருஷம் வேலை பார்த்து, அந்தத் தொழிலைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, அப்புறம் அதை ஆரம்பிச்சேன். அதுதான் எனக்கு வெற்றியைக் கொடுத்தது. அதனால, எங்கிட்ட யார் ஆலோசனை கேட்டாலும், தெரியாத தொழில்ல இறங்காதீங்கன்னுதான் சொல்லுவேன். செய்ய நினைக்கிற தொழிலைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கப்புறம் அதில இறங்கினாதான் வெற்றி கிடைக்கும்" என்றார் ஆனந்தன்.
"ஏண்டா, நீ தொழில் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னப்பவே, உன்னை ஆனந்தன் சார்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போனேன். தெரியாத தொழில்ல இறங்காதேன்னு அவர் சொன்னது அவரோட அனுபவத்தின் அடிப்படையில. ஆனா, நீ அவர் சொன்னதைக் காதில போட்டுக்காம, உனக்குத் தெரியாத ஒரு தொழில்ல இறங்கின. இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற!" என்றான் தனஞ்சயன்.
"இந்தப் பயிற்சியை நடத்தினவர் இந்தத் தொழில்ல யாருமே தோல்வி அடைய முடியாதுன்னு சொன்னாரு. அதை நம்பித்தான் இதில இறங்கினேன்" என்றான் ராம்குமார், சோர்வுடன்.
"காசு வாங்கிக்கிட்டுப் பயிற்சி கொடுக்கறவன் சொன்னதை அப்படியே நம்பின. ஆனா அனுபவப்பட்ட ஒத்தர், தன்னோட பிசியான நேரத்திலேயும், உனக்காக அரை மணி நேரம் ஒதுக்கித் தன்னோட அனுபவத்தின் அடிப்படையில சொன்ன உண்மையான ஆலோசனையைப் பத்தி யோசிச்சுக் கூடப் பாக்காம தூக்கிப் போட்டுட்ட. உன்னை விடப் பெரிய முட்டாள் இருக்க முடியுமா?" என்றான் தனஞ்சயன், கோபத்துடனும், வருத்தத்துடனும்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)
குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
பெறுதற்கு அரிய அறிவுரையைப் பெற்றாலும், அதை உள் வாங்கிக் கொள்ளாமல் வெளியே விடுபவன், அறியாமையால் தனக்குத் தானே துன்பத்தை விளைவித்துக் கொள்வான்.
No comments:
Post a Comment