'வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்' என்ற தலைப்பில் அவர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
"ஒரு பொருளாதார வல்லுனர் பொருளாதாரத்தைப் பத்திப் பேசினால்தானே பொருத்தமா இருக்கும்? ஏன் இவருக்கு வேற தலைப்பு கொடுத்திருக்காங்கன்னு புரியல!" என்றான் பட்டாபி.
"நீ வேற! பொருளாதாரத்தைப் பத்திப் பேசி போர் அடிக்கப் போறாரோன்னு பயந்தேன். நல்ல வேளை, வேற தலைப்பு கொடுத்து நம்மைக் காப்பாத்திட்டாங்களேன்னு நான் சந்தோஷப்பட்டுக்கிட்டிருக்கேன்!" என்றான் அவன் நண்பன் சுந்தரேசன்.
விழா முடிந்ததும், "எப்படி இருந்தது பேச்சு?" என்றான் பட்டாபி.
"நான் உன் அளவுக்குப் படிச்சவன் இல்ல. ஆனா, எனக்குத் தெரிஞ்ச அளவுக்குக் கூட அவருக்கு வரலாறு தெரியாது போல இருக்கே!".
"ஆமாம். நிறைய தப்பான தகவல்களைச் சொன்னாரு. அசோகர் தமிழ்நாட்டை ஆண்டப்பதான் புத்தமதம் தமிழ்நாட்டுக்கு வந்ததுன்னாரு. சிவாஜி பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்துப் போராடினார்னு சொன்னாரு. பாரதியார் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்காருன்னு சொன்னாரு!"
"தனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிஞ்சதா நினைச்சுக்கிட்டா அப்படித்தான்!"
"இதுல என்ன சோகம்னா, இன்னிக்கு இவர் பேச்சைக் கேட்டவங்க இவருக்குப் பொருளாதாரத்தைப் பத்திக் கூட சரியாத் தெரியுமோ, தெரியாதோன்னு நினைப்பாங்க!" என்றான் பட்டாபி.
"நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்!"
"இல்ல. பொருளாதராத்தில அவர் ஒரு மேதைதான் நான் அவரோட கட்டுரைகளையெல்லாம் படிச்சிருக்கேன்."
அது சரி. என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் அவருக்குப் பொருளாதாரமும் சரியாத் தெரியதுங்கற முடிவுக்கு வந்திருப்பாங்களோ! அப்படி அவங்க நினைச்சா, அதுக்குக் காரணம் அவர்தானே?" என்றான் சுந்தரேசன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)
குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
ஒருவர் தான் அறியாதவற்றையும் அறிந்தது போல் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும்போது, அவர் நன்கு கற்றறிந்துள்ள விஷயங்கள் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
No comments:
Post a Comment