Sunday, December 4, 2022

657. கடன் வசூல் அதிகாரி

குமரனை யாராவது "எங்கே வேலை செய்யற?" என்று கேட்டால், அவன் சொல்லும் வெளிநாட்டு வங்கியின் பெயரைக் கேட்டுப் பலரும் அவனை மதிப்புடன் பார்ப்பார்கள்.

"என்ன வேலை?" என்று பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. அப்படி யாராவது கேட்டால், 'கடன் வசூல் அதிகாரி' என்று சொல்வான். அதற்கு மேல் யாரும் விரிவாக அவன் வேலை பற்றிக் கேட்க மாட்டார்கள்.

குமரனுக்குப் பெற்றோர்கள் இல்லாததால், அவன் சித்தப்பா அவனுக்குப் பெண் பார்த்தார்.

பெண் பார்க்கச் சென்றபோது, பெண்ணிடம் தனியாகப் பேச விரும்பினான் குமரன். பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்ததும், இருவரும் ஒரு அறைக்குள் அமர்ந்து பேசினர்.

"நான் என்ன வேலை செய்யறேன்னு உனக்குத் தெரியுமா?" என்றான் குமரன்.

"கடன் வசூல் அதிகாரின்னு சொன்னாங்களே!" என்றாள், கிரிஜா என்ற அந்தப் பெண்.

"ஆமாம். ஆனா, கடன் வசூல் அதிகாரி இல்லை, கடன் வசூல் அடியாள்!"

"என்ன சொல்றீங்க?"

"எங்க வங்கில கடன் வாங்கிட்டுத் தவணை கட்டாதவங்க, கிரடிட் கார்ட்ல பொருள் வாங்கிட்டுப் பணம் கொடுக்காதவங்க இவங்க வீட்டுக்கெல்லாம் போய் மிரட்டணும், அக்கம்பக்கத்தில இருக்கறவங்களுக்குக் கேட்கற மாதிரி அவமரியாதையாப் பேசணும், சில சமயம், வீட்டுக்குள்ள போய்க் கதவை சாத்திட்டு, கடன் வாங்கினவரை ரெண்டு தட்டு தட்டணும், கொலை மிரட்டல் விடுக்கணும். கார், பைக், டிவி மாதிரி பொருட்களைத் தூக்கிக்கிட்டு வரணும். இந்த மாதிரி வேலைதான் நான் செய்யறது!" என்றான் குமரன், வெறுப்புடன்.

"எங்க பக்கத்து வீட்டில கூட இந்த மாதிரி வந்து மிரட்டினாங்க. எங்களுக்கே பயமா இருந்தது!" என்றாள் கிரிஜா.

"ஆரம்பத்தில எனக்கு ஒண்ணும் தெரியல. ஆனா இப்பல்லாம், மத்தவங்களை மிரட்டி, அவங்களுக்கு பயத்தை வரவழைச்சு, எல்லாத்தையும் வித்தாவது பணத்தைக் கட்ட வைக்கறது எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. நான் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யறேன்னாலும், பழி, பாவம் எல்லாம் எனக்குத்தானே! அவங்க என்னை எப்படி வெறுப்பாங்க, எப்படியெல்லாம் சாபம் கொடுப்பாங்க! சில பேர் 'படுபாவி, நீ நல்லா இருப்பியா?'ன்'னு நேரடியாவே எனக்கு சாபம் விடுவாங்க. மனசுக்குள்ள என்னை சபிக்கிறவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. என் மிரட்டலுக்கு பயந்து, பணம் கட்டவும் வழியில்லாம, ஒத்தர் தற்கொலையே பண்ணிக்கிட்டாரு!"

"இதையெல்லாம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

"நான் இந்த வேலையில தொடர விரும்பல. ஆனா, நான் அதிகம் படிக்கல. அதனால, எனக்கு வேற நல்ல வேலை கிடைக்காது. குறைஞ்ச சம்பளத்திலதான் வேலை கிடைக்கும். அந்த நிலையில, நீ என்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிப்பியா?" 

"நிச்சயமா. அதிக வருமானத்துக்காக என்ன பழி வந்தாலும் பரவாயில்லேன்னு  ஒரு தப்பான வேலையில இருக்கறதை விட, வறுமை வந்தாலும் பரவாயில்லைன்னு நியாயமான வேலை பாக்கறதே நல்லது" என்றாள் கிரிஜா.

"அப்படின்னா, நான் வேற வேலையில சேர்ந்துட்டு, அப்புறம் உன் வீட்டில வந்து பெண் கேக்கறேன்!" என்றான் குமரன், மன நிறைவுடன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 657:
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பொருள்:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல், நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...