'இது ஒரு பிழைப்பா?' என்று அவன் அடிக்கடி அலுத்துக் கொள்வது உண்டு.
அதனால்தான், அவன் தாய் காந்திமதி எவ்வளவோ வற்புறுத்தியும், ராமதாஸ் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை.
"நிரந்தரமான வருமானம் இல்லாம, எப்படிம்மா கல்யாணம் செஞ்சுக்கறது? பெண்டாட்டி பிள்ளைகளை வச்சுக் காப்பாத்த வேண்டாமா?" என்பான் ராமதாஸ்.
"தேவை ஏற்படறப்ப, அதுக்கேத்தாப்பல வருமானமும் வரும்டா. உன் பெண்டாட்டி கூட ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம். அவளுக்கு நிரந்தர வருமானம் இருந்தா, அது உனக்கு நல்லதுதானே?" என்பாள் காந்திமதி.
ஆயினும், ராமதாஸ் அவள் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவனுக்கும் சிலர் பெண் கொடுக்க முன்வந்ததுதான் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.
ராமதாஸ் தன் நிலைமையை அவர்களிடம் சொன்னபோது, "அதனால என்ன மாப்பிள்ளை? சமாளிச்சுக்கலாம். நாங்கள்ளாம் என்ன பெரிய வேலை பாத்தா குடும்பதைக் காப்பாத்தறோம்?" என்ற பாணியில் சிலர் அவனிடம் பேசியபோது, அவர்கள் குருட்டு நம்பிக்கைக்குக் காரணம், அவர்களுடைய அறியாமையா, அல்லது வறுமையா என்ற கேள்வி அவனுக்குள் எழும்.
இரண்டு நாட்களாக, ராமதாஸுக்கு வருமானம் இல்லை. பல மணி நேரம் கூவியும், பலரிடம் கேட்டுக் கொண்டும், அவன் சொன்ன பஸ்ஸில் யாரும் ஏறவில்லை. சில சமயம் இப்படி ஆவதுண்டு. அப்போதெல்லாம், முந்தைய நாட்களில் சம்பாதித்ததில் மீதம் இருப்பதை வைத்துச் சமாளித்து விடுவான்.
ஆனால், இப்போது அவன் கையிருப்பு காலியாக இருந்தது. முதல் நாள் இரவு சாப்பிட்டதோடு சரி. அன்று காலையே, அவனும் அவன் அம்மாவும் எதுவும் சாப்பிடவில்லை. அவனாவது பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் கடனுக்கு டீ குடித்துக் கொள்வான். அவன் அம்மாவுக்கு அதுவும் கிடைக்காது.
இன்று ஏதாவது வருமானம் கிடைத்தால்தான் அன்று, இரவு அவர்கள் இருவருக்கும் சாப்பாடு. இந்த வயதான காலத்தில் அம்மாவால் எவ்வளவு நேரம் பட்டினியாக இருக்க முடியும் என்று நினைத்தபோது, அவன் வயிற்றில் இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது.
"என்ன ராமதாஸ், கிராக்கி ஒண்ணும் கிடைக்கலையா?"
கோகுல்!
அந்த பஸ் ஸ்டாண்டில் தொழில் செய்பவன்தான் கோகுல். ஆனால் அவன் செய்யும் தொழில், வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடியது அல்ல!
ராமதாஸ் மௌனமாக இருந்தான்.
"இந்த பஸ் ஸ்டாண்டில எவ்வளவு பேரு இருக்காங்க பாரு! தனியா இருக்கற ஆம்பிளைகள்ள பத்து பேர் பக்கத்தில போய், அவங்க காதுகிட்ட சொன்னேன்னா, ரெண்டு பேராவது வருவாங்க. உனக்கு கமிஷன் நிச்சயம். அந்த விஷயத்துக்கு அலையறவங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா, யாராவது வந்து கேக்க மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டு!"
கோகுல் சொல்வது சரிதான். கோகுலுக்காக வேலை செய்யும் சிலர், தனியே இருக்கும் ஆண்களிடம் அருகில் சென்று பேசுவதையும், சிலர் அவர்களுடன் செல்வதையும் ராமதாஸ் கவனித்திருக்கிறான்.
பஸ்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்வதை விட, இது சுலபமாக இருக்குமே என்று அவனுக்கே சில சமயம் தோன்றி இருக்கிறது.
இப்போது கோகுல் கேட்டவுடன், இன்று ஒருநாள் முயற்சி செய்து, சிறிதளவாவது சம்பாதிக்கலாமே என்ற எண்ணம் மனதில் எழுந்தது.
ஆயினும், உடனே மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, "வேண்டாம் அண்ணே! அது எனக்குச் சரியாக வராது!" என்றபடியே, "மதுரை, திண்டுக்கல், தேனி" என்று கூவியபடியே, அங்கிருந்து அகன்றான் ராமதாஸ்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
பொருள்:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிக்கக் கூடிய இழிவான செயல்களைச் செய்யக் கூடாது.
No comments:
Post a Comment