"அரசே! உங்கள் தந்தையைப் போல், நீங்களும் நல்லாட்சி தர வேண்டும்!" என்று வாழ்த்தினார் அமைச்சர்.
"உங்களைப் போன்ற அறிஞர்களின் ஆலோசனையுடன் என்னால் இயன்றதைச் செய்வேன்!" என்ற மகேந்திரன், தொடர்ந்து "அமைச்சரே! இத்தனை நாட்களாக அரண்மனையிலேயே இருந்து விட்டேன். நம் நாட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. எனவே, முதலில் நம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு, நம் நாட்டைப் பற்றியும், அதில் வாழும் மக்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான்.
"தங்கள் விருப்பப்படி, தங்கள் பயணத்துக்கு உடனே ஏற்பாடு செய்கிறேன் அரசே!" என்றார் அமைச்சர்.
ஒரு மாதம் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து விட்டு, அரண்மனைக்குத் திரும்பினான் மகேந்திரன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அமைச்சரை அழைத்தான்.
"அமைச்சரே! நம் நாட்டைச் சுற்றிப் பார்த்ததில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள். விளைச்சல் நன்றாக இருந்து வருவதால், உணவுப் பஞ்சம் இல்லை. மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், செல்வச் செழிப்புடனும் இருக்கிறார்கள். ஆயினும்..."
"என்ன அரசே!".
"பல இடங்களில் தரிசு நிலங்களைப் பார்த்தேன். அங்கிருந்த மக்களைக் கேட்டதற்கு, கிடைக்கும் விளைச்சல் போதும் என்பதால், அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றனர். மக்கள் தொகை பெருகும்போது அதிக விளைபொருள் தேவைப்படும் அல்லவா? எனவே, தரிசு நிலங்களைப் பயன்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அளித்து, அந்த நிலங்களைப் பண்படுத்தி விளைய வைக்க அவர்களுக்குப் பொருள் உதவியும் செய்யலாம் அல்லவா?" என்றான் மகேந்திரன்.
"நல்ல யோசனை அரசே! உடனே செயல்படுத்துகிறேன்" என்றார் அமைச்சர்.
"இரண்டாவதாக, பெரும்பாலான மக்கள் கல்வி அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். கல்விதான் ஒருவரைத் தகுதி உள்ளவராக ஆக்கும். எல்லா ஊர்களிலும் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி, அனைவரும் கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்."
"நிச்சயம் செய்ய வேண்டும், அரசே! நானே இது பற்றித் தங்கள் தந்தையிடம் கூறி இருக்கிறேன். இதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், கடந்த காலத்தில் இதைச் செயல்படுத்த முடியவில்லை. இதை உடனே செயல்படுத்த ஏற்பாடு செய்கிறேன். செய்து முடிக்கச் சிறிது காலம் பிடிக்கும்!" என்றார் அமைச்சர்.
"தாங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. அரசாங்கக் கருவூலத்திலிருந்து இதற்காக எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் மூன்றாவதாகச் சொல்ல விரும்பிய விஷயம் பொருள் ஈட்டுவது பற்றித்தான்!"
"சொல்லுங்கள், அரசே!"
"நம் நாட்டு மக்கள் வசதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், செல்வம் நிலையானதல்ல. அது தேய்ந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது. செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே இருந்தால்தான், அது குறையாமல் இருக்கும். எனவே, நாட்டின் செல்வத்தைப் பெருக்கும் வகையில், மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடத் திட்டம் வகுத்து, மக்களைத் தொழில்கள் செய்ய ஊக்குவிக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பொருட்களைப் பிற நாடுகளுக்கு வர்த்தகம் செய்து, நாம் நிறையப் பொருள் ஈட்டலாமே!"
"அரசே! ஆலோசனைகள் கூற வேண்டியது அமைச்சரின் கடமை. ஆனால், நீங்கள் என் பொறுப்பையும் நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் யோசனைகளை விரைவாகச் செயல்படுத்தி, நம் நாட்டைச் சிறந்து விளங்கச் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் முழு வேகத்தில் துவக்குகிறேன்!" என்றார் அமைச்சர்.
பொருட்பால்
அரணியல்
அதிகாரம் 74
நாடு
குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு..
குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
No comments:
Post a Comment