'ரம்மி ஆடிப் பணம் வெல்லுங்கள்.'
'ஒருமுறை விளையாடிப் பார்த்தால் என்ன?'
மனதில் அந்த எண்ணம் எழுந்ததுமே, செல்வரங்கத்தின் சிந்தனை பின்னோக்கி ஓடியது.
செல்வரங்கம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சீட்டாடக் கற்றுக் கொண்டு விட்டான். அவன் கல்லூரி விடுதியில் சிலர் பணம் வைத்துச் சீட்டாடியதை, அவன் அருகில் இருந்து பார்த்திருக்கிறான்.
அப்போதெல்லாம், பணம் வைத்து விளையாடினால் தன்னால் பணம் வெல்ல முடியும் என்று அவனுக்குத் தோன்றும். ஆனால் அவனிடம் அப்போது பணம் இல்லாததால், அவன் அந்த முயற்சியில் இறங்கவில்லை.
வேலைக்குப் போன பிறகு, விடுமுறை நாட்களில், சில நண்பர்களுடன் பணம் வைத்து விளையாட ஆரம்பித்தான் செல்வரங்கம். பெரும்பாலும், அவன்தான் வெற்றி பெறுவான். ஒவ்வொரு முறை சீட்டாடி விட்டு வீட்டுக்குச் செல்லும்போதும், தான் எடுத்து வந்ததை விட அதிகப் பணத்துடன்தான் செல்வான்.
ஒருநாள், உமாபதி என்ற நண்பன், சீட்டாட்டத்தில் தன் மொத்த சம்பளத்தையும் வைத்துத் தோற்று விட்டான்
அந்த இழப்பைத் தாங்க முடியாமல், உமாபதி அழ ஆரம்பித்து விட்டான்.
"மொத்த சம்பளமும் போயிடுச்சு! என் குடும்பத்துக்கு எப்படி சாப்பாடு போடுவேன்? வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன்காரங்களுக்குக் கொடுக்க வேண்டியதுன்னு எத்தனையோ செலவு இருக்கே!" என்று அவன் பதைபதைத்ததைப் பார்த்தபோது, செல்வரங்கத்துக்கு மனதைப் பிசைந்தது.
அப்போது அவன் மனதில் உடனடியாக ஒரு எண்ணம் தோன்றியது.
தான் ஜெயித்த மொத்தப் பணத்தையும் உமாபதியிடம் கொடுத்து விட்டு, "இனிமே நீ சீட்டாடக் கூடாது. நானும் ஆட மாட்டேன்!" என்றான் செல்வரங்கம், உத்தரவிடுவது போல்.
உமாபதி நம்ப முடியாமல் அவனைப் பார்க்க, மற்ற நண்பர்கள் "என்னடா இது பைத்தியக்காரத்தனம்!" என்றனர்.
அன்றிலிருந்து. செல்வரங்கம் சீட்டாடுவதையே நிறுத்தி விட்டான். பணம் வைக்காமல் சும்மா விளையாடலாம் என்று யாராவது அழைத்தால் கூட, மறுத்து விடுவான்.
'சீட்டாடிப் பணம் சம்பாதிப்பது என்பது இன்னொருவரிடமிருந்து பணத்தைப் பறிப்பதுதானே! அதை அவர் ஒப்புதலுடன் செய்வதால் மட்டும் அது நியாயமாகி விடுமா? ஏன் இது பற்றிச் சிந்திக்காமல், இந்தச் செயலில் ஈடுபட்டேன்?' என்று நினைத்து நீண்ட காலம் வருந்தினான் செல்வரங்கம்.
இப்போது ரம்மி விளம்பரத்தைப் பார்த்ததும், விளையாடிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. 'ஆன்லைனில்தானே விளையாடப் போகிறோம்! யாருடனும் நேரடியாக விளையாடப் போவதில்லையே!' என்ற சிந்தனை எழுந்தது.
"சே! என்ன ஒரு சிந்தனை? நான் ஜெயிக்கிற பணம் யாரோ ஒருவரிடமிருந்துதானே வரப் போகிறது? ஆன்லைன் ரம்மியில் பலர் பணம் இழந்தது பற்றியும், சிலர் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் அடிக்கடி செய்திகள் வருகின்றனவே! ஒருமுறை அந்தத் தவறைச் செய்தேன். மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்று நான் எடுத்துக் கொண்ட உறுதி என்ன ஆயிற்று?'
ஒரு கணம் தனக்கு ஏற்பட்ட சிந்தனைக்காகத் தன்னை நொந்து கொண்ட செல்வரங்கம், மீண்டும் அந்தச் சிந்தனைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று உறுதி செய்து கொண்டான்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 655:
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
பொருள்:
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று நினைத்து வருந்தும்படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாக அப்படிச் செய்து விட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.
No comments:
Post a Comment