பரந்தாமனின் சக ஊழியனும், அவனுடைய நண்பனுமான கண்ணன், "நான் ஏதாவது சொன்னா, என் அசிஸ்டன்ட் கூடக் கேக்க மாட்டேங்கறான்! நீ ஏதாவது சொன்னா, ஜி எம் கூட பயந்து பணிவாக் கேக்கற மாதிரி கேக்கறாரே!" என்று அடிக்கடி அவனிடம் சொல்லுவான்:
அவர்கள் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளர் பதவி காலியானபோது, நான்கு டிபார்ட்மென்ட் மானேஜர்களில் ஒருவர்தான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பரந்தாமனுக்குத்தான் அந்தப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ராமமூர்த்தி என்ற மற்றொரு டிபார்ட்மென்ட் மானேஜருக்கு அந்தப் பதவி கிடைத்தது.
பரந்தாமனுக்குப் பெரிய அதிர்ச்சி.
"ஏண்டா இப்படிப் பண்ணினாங்க? ராமமூர்த்தி இருக்கற இடமே தெரியாம இருப்பாரு. என்னை மாதிரி துடிப்பா இருக்கற ஆளை விட்டுட்டு, அவருக்கு புரொமோஷன் கொடுத்திருக்காங்க. ஜி எம் பொதுவா நியாயமா நடந்துக்கறவராச்சே! ஒருவேளை சேர்மன் சொல்லி, இப்படி செஞ்சிருப்பாங்களோ?" என்றான் பரந்தாமன், கண்ணனிடம்.
"இல்லடா! இது ஜி எம்மோட முடிவுதான்" என்றான் கண்ணன்.
"உனக்கு எப்படித் தெரியும்?"
"ஜி எம்மே எங்கிட்ட சொன்னார்!" என்றான் கண்ணன், தயக்கத்துடன்.
"உங்கிட்ட சொன்னாரா? எதுக்கு? என்ன சொன்னார்?" என்றான் பரந்தாமன், வியப்புடன்.
"நேத்திக்கு ராமமூர்த்திக்கு புரொமோஷன்னு அறிவிச்ச உடனேயே, ஜி எம் என்னைக் கூப்பிட்டார். 'கண்ணன்! பரந்தாமனுக்கு புரொமோஷன் கிடைக்காதது அவர் மாதிரியே, அவரோட நண்பரான உங்களுக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கும். அதுக்கு முக்கியமான காரணம் பரந்தாமனோட செயல்பாடுதான், பரந்தாமன் ரொம்ப டைனமிக்காத் தெரிஞ்சாலும், அவர்கிட்ட ஒரு குறை இருக்கு. அவர் எந்த வேலையையும் சரியா முடிக்கறதில்ல. ரொம்ப உற்சாகமா ஒரு வேலையை எடுத்துப்பாரு. ஆனா, அதை முடிக்காம டைவர்ட் ஆகிப் போயிடுவாரு. எங்களைப் பொருத்தவரையிலும், என்ன ரிசல்ட் வருதுன்னுதான் பாப்போம். அப்படிப் பாக்கறப்ப, பரந்தாமனோட பல செயல்பாடுகள் முடிவு பெறாம அந்தரத்தில தொங்கிக்கிட்டிருக்கறதைத்தான் நாங்க பாக்கறோம். இதைப் பத்தி பரந்தாமன்கிட்ட நான் பல தடவை சொல்லி இருக்கேன். அவர் 'முடிச்சுடறேன் சார்'ன்னு சொல்லுவாரு. ஆனா முடிக்க மாட்டாரு. அவர் கவனம் பல விஷயங்கள்ள சிதறி இருக்கு. அவர்கிட்ட ஃபோகஸ் இல்ல. டைனமிஸம்ங்கறது வேகம் காட்டறதில மட்டும் இருந்தா போதாது, செய்ய வேண்டிய வேலைகளை செஞ்சு முடிக்கறதிலயும் இருக்கணும். ராமமூர்த்தி அமைதியா இருந்தாலும், செய்ய வேண்டிய வேலைகள்ள கவனம் செலுத்தி செஞ்சு முடிச்சுடுவாரு. அதனாலதான் அவருக்கு புரொமோஷன் கிடைச்சது. நான் பல தடவை சொல்லியும், பரந்தாமனுக்கு அவரோட குறைபாடு புரியல. நீங்க அவர் நண்பர்ங்கறதால, நீங்க அவர்கிட்ட சொன்னா, அவர் புரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன். அவர் தன் பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு, செய்ய வேண்டிய வேலைகள்ள உறுதியான கவனம் வச்சு, வேலைகளை செஞ்சு முடிக்கப் பழகிக்கிட்டா, அவருக்கு இருக்கிற திறமைக்கு, அவர் நல்லா முன்னுக்கு வரலாம். செயல்பாடுகள் சரியா இல்லாட்டா, மற்ற திறமைகள் இருந்தும் பயன் இல்லாம போயிடும். அவர்கிட்ட இதைச் சொல்லிப் புரிய வையுங்க. இந்த தடவை மிஸ் ஆன புரொமோஷன் அடுத்த தடவை கிடைக்கறது அவர் கையிலதான் இருக்கு' ன்னு சொன்னார்!"
கண்ணன் சற்றுத் தயங்கி விட்டு, "அவர் சொன்னப்பறம், அவர் சொன்னதில உண்மை இருக்குன்னுதான் எனக்கும் தோணுது!" என்றான்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 67
வினைத்திட்பம்
குறள் 661:
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
பொருள்:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்பட மாட்டா.
No comments:
Post a Comment