"'முட்டாப் பசங்களையெல்லாம் தாண்டவக்கோனே,
காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே!'
இது 'பராசக்தி' படத்தில வர ஒரு பாட்டு. இந்த வரிகள் நம் விநாயகத்துக்கு அப்படியே பொருந்தும்" என்றான் வாசு.
"என்னப்பா இது? அவன் ஏதோ தொழில் செஞ்சு நல்லா சம்பாதிக்கிறான். அவனைப் போய் முட்டாள்ங்கறியே!" என்றார் பரமசிவம்.
"அவன் அப்பா ஆரம்பிச்ச தொழில் அது. அது பாட்டுக்குத் தானே ஓடிக்கிட்டிருக்கு. அவன் ஆஃபீசுக்கே போறதில்ல. எல்லாத்தையும் ஒரு மானேஜர் பாத்துக்கறாரு. அவன் ஆஃபீஸ் போகாம இருக்கறது நல்லதுக்குத்தான். அவன் போய் நிர்வாகம் செய்யறேன்னு ஆரம்பிச்சா, எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடுவான். அப்புறம் தொழிலையே இழுத்து மூட வேண்டி இருக்கும்!"
"சரி. அதெல்லாம் நமக்கு எதுக்கு?"
"வீட்டில சும்மா கிடக்கற புத்தகங்களை உங்களை மாதிரி ஒரு ஆராய்ச்சியாளருக்கு இலவசமாவே கொடுத்திருக்கலாம். ஆனா, படிச்சுப் பாக்கக் கூடக் கொடுக்க மாட்டேன்னா, அவன் என்ன ஆளு?" என்றான் வாசு.
சில நாட்கள் கழித்து, வாசுவுக்கு ஃபோன் செய்த பரமசிவம், "வாசு! ஒரு ஆச்சரியமான விஷயம். விநாயகம் எனக்கு ஃபோன் பண்ணினான். அவன் வீட்டில இருக்கற எல்லாப் புத்தகங்களையும் சும்மாவே எடுத்துக்கிட்டுப் போகச் சொல்லிட்டான். நூறு புத்தகங்களுக்கு மேல இருக்குமாம். என்னால நம்பவே முடியல!" என்றார், மகிழ்ச்சியுடன்.
"என்னாலயும்தான். உடனே காரை எடுத்துக்கிட்டுப் போய் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடுங்க. அப்புறம் அவனுக்கு மனசு மாறிடப் போகுது!" என்றான் வாசு.
"என்னப்பா நீ! எவ்வளவு நல்ல மனசோட புத்தகங்களை எனக்குக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்கான்! அவன் பரந்த மனசைப் பாராட்டாம..."
''ஒருவேளை பழைய பேப்பர்காரர் இதையெல்லாம் விலை கொடுத்து எடுத்துக்க முடியாதுன்னு சொல்லி இருப்பாரு' என்று மனதில் நினைத்துக் கொண்ட வாசு, "பரந்த மனசெல்லாம் இல்ல, சார்! ஏதோ உங்களோட அதிர்ஷ்டம், அவனுக்கு திடீர்னு இப்படித் தோணி இருக்கு!" என்றான்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)
குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
No comments:
Post a Comment