சரியான உணவு இல்லாமல் வாடிய நிலையிலும், படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து, பள்ளிப் படிப்பை முடித்தான் சுப்பிரமணி.
ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, திருமணமும் செய்து கொண்டான். ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் கண்ணன் என்று பெயர் வைத்தான்.
சில ஆண்டுகளில், வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஓரளவு வசதியும் வந்தது.
படிப்புதான் தன் வாழ்க்கையில் தனக்கு அதிகம் உதவியது என்று பலரிடமும் சொல்லிக் கொண்டிருப்பான் சுப்பிரமணி.
ஆனால் அவன் நண்பன் முத்துசாமி, "படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுடா. புத்திக் கூர்மை இருக்கணும். அது பிறவியிலேயே இருக்கணும். என்னை எடுத்துக்க. நான் பட்டப்படிப்பு படிச்சிருக்கேன். ஆனா, பள்ளிப்படிப்பு மட்டுமே படிச்ச நீ, என்னை விட நல்லா முன்னுக்கு வந்திருக்க. அதுக்குக் காரணம் உனக்கு இயல்பாகவே இருக்கிற அறிவுதான். அந்த அறிவு எனக்குக் கொஞ்சம் மட்டுதான்!" என்றான் சிரித்துக் கொண்டே.
முத்துசாமி பொறாமை உணர்வு இல்லாமல் தன்னைத் தாழ்த்திக் கொண்டு, சுப்பிரமணியை உயர்த்திப் பேசியது அவன் மீது சுப்பிரமணிக்கு மதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும், முத்துசாமியின் கூற்றை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முத்துசாமி சரியாக முயற்சி செய்திருக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டான் சுப்பிரமணி. ஆயினும், முத்துசாமியிடம் இதைச் சொல்லி, அவன் மனதைப் புண்படுத்த சுப்பிரமணி விரும்பவில்லை.
கண்ணனைப் பள்ளியில் சேர்த்துச் சில ஆண்டுகள் ஆகி விட்டன. அவன் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
"கண்ணன் சரியாவே படிக்க மாட்டேங்கறான். மூணாம் வகுப்பு படிக்கிறான். இன்னும் கூட எழுத்துக் கூட்டி சரியாப் படிக்க வரலை!" என்றாள் சுப்பிரமணியின் மனைவி சாவித்திரி.
"நாமதான் சொல்லிக் கொடுக்கணும். சரி. நான் சொல்லிக் கொடுத்துப் பாக்கறேன்!" என்றான் சுப்பிரமணி.
சுப்பிரமணி பாடங்களைச் சொல்லிக் கொடுத்த பிறகும், கண்ணனிடம் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஒருவேளை முத்துசாமி சொன்னது போல், அறிவு என்பது இயல்பாகவே இருக்க வேண்டிய ஒரு விஷயமோ என்று சுப்பிரமணிக்குத் தோன்றியது.
பள்ளிக்குச் சென்று வகுப்பாசிரியரிடம் கேட்டபோது, "கண்ணன் படிப்பில வீக்காத்தான் இருக்கான்" என்றார் அவர்.
"பாடங்களைப் புரிஞ்சுக்கற அறிவு அவனுக்கு இல்லைன்னு சொல்றீங்களா?" என்றான் சுப்பிரமணி.
"அப்படிச் சொல்ல முடியாது. குறும்புத்தனமா சில வேலைகள் எல்லாம் செய்யறான். அதுக்கு புத்திசாலித்தனம் வேணும், இல்ல? அறிவைச் சரியான வழியில பயன்படுத்த மாட்டேங்கறான். நான் அதை மாத்த முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க!"என்றார் பள்ளி ஆசிரியர்.
கண்ணனின் பிரச்னை, தான் அனுபவித்த வறுமையை விடத் தீவிரமானது என்று சுப்பிரமணிக்குத் தோன்றியது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 85
புல்லறிவாண்மை (தாழ்ந்த அறிவைப் பயன்படுத்துதல்)
குறள் 841:
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
அறிவின்மையே, இல்லாமை எல்லாவற்றிலும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
No comments:
Post a Comment