Sunday, November 27, 2022

653. "சுறுசுறுப்புக்கு மறுபெயர் பரணி"

பரணி அந்தக் கட்சியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அவ்வளவு வேகமாக முன்னேறுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பொதுவாகக் கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களும் கட்சித் தலைவரால் அறியப்பட வாய்ப்பில்லை. ஆனால், அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, அவற்றுக்குக் கட்சியின் முக்கியத் தலைவர்களை அழைத்துப் பேசச் செய்வது போன்ற செயல்களால், கட்சித் தலைவரின் கவனத்தை ஈர்த்தான் பரணி.

பரணியைப் பார்க்க விரும்பி, கட்சித் தலைவர் அவனை அழைத்து வரச் சொன்னார். கட்சித் தலைவரைச் சந்தித்ததும், பரணியின் நிலை மேலும் உயர்ந்து விட்டது. 

'சுறுசுறுப்புக்கு மறுபெயர் பரணி' என்று கட்சித் தலைவரால் வெளிப்படையாகப் புகழப்பட்ட பரணி, புதிதாக உருவாக்கப்பட்ட, கட்சியின் 'புதிய உறுப்பினர் பயிற்சி அணி'யின் தலைவராக அறிவிக்கப்பட்டான்.

பரணிக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, அப்படி ஒரு அணியைக் கட்சித் தலைவர் புதிதாக உருவாக்கியதாகக் கட்சியில் பலரும் கருதினர்.

கட்சியில் பொறுப்பு கிடைத்ததும், பரணியின் வளர்ச்சி வேகம் இன்னும் அதிகமாகியது.

"என்னையா செஞ்சுட்டு வந்திருக்க? நீ படிச்சவன்தானே? அறிவு வேணாம்?" என்றார் மாவட்டச் செயலாளர்.

"இல்லீங்க. நான் பாட்டுக்கு ஓட்டல்ல உக்காந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். அப்ப அந்த ஆளு வந்து எங்கிட்ட தகராறு பண்ணினான். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வார்த்தை முத்திப் போய் அவன் கடுமையாப் பேசினதால, நானும் கொஞ்சம் கடுமையாப் பேசிட்டேன" என்றான் பரணி, சங்கடத்துடன் நெளிந்தபடி.

"கொஞ்சம் கடுமையாப் பேசினியா? பச்சைப் பச்சையா, கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவனைத் திட்டியிருக்கே. தமிழ்ல இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை இருக்குன்னு எனக்கு இத்தனை நாளா தெரியாதுய்யா! நீ பேசினதையெல்லாம் யாரோ ஒத்தன் வீடியோ எடுத்து இன்டர்நெட்ல போட்டு, அந்த வீடியோ வைரலாயிடுச்சு. 'கண்ணியத்தைப் பத்திப் பேசற தலைவரோட கட்சியில பொறுப்பில இருக்கறவரு எவ்வளவு கண்ணியமாப் பேசி இருக்காரு பாருங்க'ன்னு எதிர்க்கட்சிக்காரங்களும், மீடியாக்காரங்களும் எகத்தாளமாப் பேசறாங்க. தலைவர் ரொம்பக் கோபமா இருக்காரு. என்ன செய்யப் போறாரோ தெரியாது. இத்தனை நாளா, இவ்வளவு நல்லா வேலை செஞ்சு வேகமா மேல வந்துக்கிட்டிருந்த நீ, இந்த ஒரு விஷயத்தால, உன் அரசியல் எதிர்காலத்தையே பாழடிச்சுக்கிட்டியேய்யா!" என்றார் மாவட்டச் செயலாளர்.

கட்சியின் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்காக, பரணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகக் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து அன்று மாலை அறிவிப்பு வந்தது.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை

குறள் 653;
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

பொருள்:
மேன்மேலும் உயர வேண்டும் என்று விரும்பி முயல்கின்றவர், தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...