ஒருமுறை முகுந்தன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கே முகுந்தனின் அண்ணன் ராமுவைச் சந்தித்தான் கணபதி.
ராமு ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும், அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டதா,ல் அவன் வேலை இழந்து விட்டதாகவும், வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாகவும் கணபதி அறிந்து கொண்டான்.
சற்று நேரம் ராமுவிடம் பேசியதில், ராமு அறிவுக் கூர்மை மிகுந்தவன் என்பதும், ரசாயனப் பட்டதாரியான அவன், ரசாயனப் பொருட்கள் பற்றி நிறையப் படித்து வருகிறான் என்பதையும் கணபதி அறிந்து கொண்டான்.
எதனாலோ, ராமுவின் மீது கணபதிக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது. ராமுவைப் பார்ப்பதற்காகவே, முகுந்தன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தான் கணபதி.
"ஏண்டா, நான் உன்னோட நண்பன். இத்தனை நாளா, என் வீட்டுக்கு நீ அடிக்கடி வந்ததில்ல. ஆனா இப்பல்லாம், என் அண்ணனைப் பாக்க அடிக்கடி வர. என்னை விட, அவன்தான் உனக்கு நெருக்கமான நண்பனா இருக்கான் போல இருக்கு!" என்றான் முகுந்தன், விளையாட்டாக.
"உன்னைத்தான் ஆஃபீஸ்ல தினமும் பாக்கறேனே! அப்புறம் உன் வீட்டுக்கு வேற வந்து உன்னைப் பாக்கணுமா?" என்றான் கணபதி.
"உன் அண்ணன் ராமு ஒரு ஜீனியஸ். ரசாயனப் பொருட்கள் பத்தி அவர்கிட்ட நிறைய யோசனைகள் இருக்கு. அவரோட சேர்ந்து ஒரு ரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்" என்றான் கணபதி, முகுந்தனிடம்.
"முதலீடு செய்ய அவன்கிட்ட பணம் கிடையாதுடா!" என்றான் முகுந்தன்.
"அவர் முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். ஒர்க்கிங் பார்ட்னரா இருக்கட்டும். நான் முதலீடு போட்டுக்கறேன்" என்றான் கணபதி.
"ஒரு நல்ல வேலையில இருக்க. அதை விட்டுட்டு, முதல் போட்டுத் தொழில் ஆரம்பிக்கற. நல்லா யோசிச்சு செய்!" என்றான் கணபதி.
முகுந்தன் வேலையை விட்டு விட்டுத் தொழிற்சாலை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
ராமுவுடன் சேர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தான்.
தொழிற்சாலை அமைக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதை வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாக இருந்தது.
இரவு பத்து மணிக்கு, முகுந்தனின் வீட்டு அழைப்பு மணி அடித்தது. முகுந்தன் கதவைத் திறந்தான.
"வா கணபதி! என்ன இந்த நேரத்தில?"
"ராமு இருக்காரா?"
"அவன் இப்பதான் படுத்துக்கப் போனான். கூப்பிடறேன்!" என்று சொல்லி, உள்ளே போகத் திரும்பியவன், "முக்கியமான விஷயமா?" என்றான், சற்றுக் கவலையுடன்.
"ஆமாம்!" என்றான் கணபதி.
ராமு வந்தவுடன், அவன் உட்காரும் வரை கூடக் காத்திராமல், "ஏன் ராமு! இந்த கெமிகலை போதை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்த முடியுமா என்ன?" என்றான் முகுந்தன், அவசரமாக.
கவலையுடன் வந்த ராமுவின் முகம் மலர்ந்தது. "இதுதானா விஷயம்? நான் கூட இந்த நேரத்தில நீங்க வந்ததும், ஏதாவது பிரச்னையோன்னு பயந்துட்டேன்!" என்று பீடிகை போட்டு விட்டு, "செயற்கையான சில போதை மருந்துகள் தயாரிக்க, இந்த கெமிகலைப் பயன்படுத்தறாங்க. ஆனா, அது ஃபார்மசூடிகல் கிரேட். நாம தயாரிக்கப் போறது இண்டஸ்டிரியல் கிரேட்தானே?" என்றான்.
"இல்லை, ராமு. செயற்கையான போதை மருந்துகள் தயாரிப்பே ஒரு சட்ட விரோதமான செயல். அவங்க ஃபார்மசூடிகல் கிரேடுதான் பயன்படுத்தணும்னு என்ன இருக்கு? இண்டஸ்டிரியல் கிரேடைக் கூட அவங்க பயன்படுத்தலாமே!"
"இல்லை, முகுந்தன். இண்டஸ்டிரியல் கிரேடில அந்த குவாலிடி கிடைக்காது. அப்படி இருந்தா, இண்டஸ்டிரியல் கிரேட் தயாரிக்க, அரசாங்கத்தில நிறைய கட்டுப்பாடுகள் விதிச்சிருப்பாங்களே! அது மாதிரி இல்லையே!"
"இல்லை. இண்டஸ்டிரியல் கிரேடைப் பயன்படுத்திக் கூட போதை மருந்துகளைத் தயாரிக்கிறாங்கன்னு எனக்கு ஒரு நண்பர் சொன்னாரு. அவரோட தகவல் தப்பா இருக்காது. அதனால. நாம தயாரிக்கற பொருள் போதை மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படறதுக்கு வாய்ப்பு இருக்கு. சரிதானே?"
"என்ன பேசற, கணபதி? நீங்க தயாரிக்கற பொருளை மார்க்கெட்ல விக்கப் போறீங்க. அது கைமாறி, போதைப் பொருட்கள் தயாரிக்கறவங்க கைக்குப் போனா, நாம என்ன செய்ய முடியும்?" என்றான் முகுந்தன்.
"நாம தயாரிக்கப் போற பொருள் தவறாப் பயன்படுத்தப்படலாம்னு தெரிஞ்சப்பறம், அதை எப்படித் தயாரிக்க முடியும்?" என்றான் கணபதி.
"என்ன சொல்ல வரீங்க கணபதி?" என்றான் ராமு, அதிர்ச்சியுடன்.
"இந்த யோசனையைக் கைவிட்டுட வேண்டியதுதான், வேற ஏதாவது ஐடியா இருந்தா பாக்கலாம்!"
"டேய் கணபதி! முட்டாளாடா நீ? வேலையை விட்டுட்டு, இந்த புராஜக்டுக்காக இவ்வளவு தூரம் முயற்சி எடுத்துட்டு, இப்ப ஒரு அற்பக் காரணத்துக்காக, அதைக் கைவிடறேங்கறியே! கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சுப் பாரு!" என்றான் முகுந்தன், சற்றுக் கோபத்துடன்.
"ஐ ஆம் சாரி. ஒரு செயலினால தப்பான விளைவுகள் ஏற்படலாம்னு தெரிஞ்சப்பறம், அந்தச் செயல்ல இறங்கக் கூடாது. இதுதான் என்னோட நிலை!"
"முகுந்தன், இனிமே உங்களை நம்பி நான் எதிலேயும் ஈடுபட முடியாது. இனிமே, எங்கிட்ட வேற ஐடியா பத்தியெல்லாம் பேசாதீங்க!" என்று கோபமாகக் கூறியபடியே உள்ளே சென்றான் ராமு.
"அப்ப, நான் வேலைக்கு முயற்சி செய்ய வேண்டியதுதான்!" என்றான் கணபதி.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 652;
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
பொருள்:
புகழையும், அறத்தையும் தராத (தூய்மை அற்ற) செயல்களை, எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
No comments:
Post a Comment