"பேச்சாளர்களை ஏற்பாடு செஞ்சுட்டு, பட்டியலை உங்ககிட்ட காட்டறேன்!" என்றார் செயலாளர் கோபி.
சில நாட்கள் கழித்து, செயலாளர் காட்டிய பட்டியலைக் காட்டியதும், "பூவரசன்னு ஒத்தரைப் போட்டிருக்கீங்களே, அவர் யாரு? நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றார் சாரங்கபாணி.
"என்ன சார், இப்படிச் சொல்றீங்க? பத்திரிகைகள்ள நிறையத் தொடர்கதைகள் எழுதறாரே! இன்னிக்கு இளைஞர்கள் மத்தியில அவருதான் ரொம்ப பிரபலம்!" என்றார் கோபி.
"அப்படியா? எனக்குத் தெரியாது. நான் பத்திரிகைகள் படிக்கறதில்ல. அவற்றில் வர கதைகளைப் பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. நல்லாப் பேசுவார் இல்ல?"
"பிரமாதமாப் பேசுவார் சார்!" என்றார் கோபி.
பத்திரிகைகள் படிக்கும் பழக்கமுள்ள தன் மனைவி சுந்தரியிடம், "பூவரசன்ங்கற எழுத்தாளரைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா?" என்றார் சாரங்கபாணி.
"கேள்விப்படாம என்ன? எந்தப் பத்திரிகையை எடுத்தாலும், அவர் கதைதான் இருக்கும். எழுத்தாளர்களிலேயே இன்னிக்கு அவர்தான் ரொம்பப் பிரபலம். எதுக்குக் கேக்கறீங்க?" என்றாள் சுந்தரி.
"அவரை எங்க இலக்கிய மன்றத்தில பேசறதுக்குக் கூப்பிட்டிருக்கோம். கோபிதான் ஏற்பாடு செஞ்சாரு. எனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அதுதான் உன்னைக் கேட்டேன்!"
"நீங்களும் அவரைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டீங்களா?" என்றாள் சுந்தரி.
சுந்தரி சொன்னதன் பொருள் சாரங்கபாணிக்கு அப்போது விளவ்கவில்லை!
"ஆமாம், அன்னிக்கு நான் பூவரசனைப் பத்திக் கேட்டப்ப, அவர் ரொம்ப நல்ல எழுத்தாளர்னு சொன்னியே!" என்றார் சாரங்கபாணி..
"நல்ல எழுத்தாளர்னு சொல்ல, ரொம்ப பிரபலமானவர்னு சொன்னேன். ஏன், என்ன ஆச்சு? நல்லாப் பேசினார் இல்ல?" என்றாள் சுந்தரி.
"என்னத்தைச் சொல்ல? திருஷ்டிப் பரிகாரம் மாதிரி ஆயிடுச்சு. மற்ற அஞ்சு பேச்சாளர்களும் அறிஞர்கள். அவங்க தங்களுக்குக் கொடுத்த தலைப்புகளைப் பத்தி ஆழமா, அருமையா பேசினாங்க. ஆனா பூவரசன், தலைப்போட தன்மையைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம, கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம, விளையாட்டுத்தனமாப் பேசினாரு. ரொம்ப தரக்குறைவாகவும் இருந்தது. அவர் பேசறப்ப, உறுப்பினர்கள் எல்லாரும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வச்சுக்கிட்டிருந்தாங்க. கூட்டம் முடிஞ்சதும், இவரை எதுக்கு சார் கூப்பிட்டீங்கன்னு என்னை வறுத்து எடுத்துட்டாங்க. கோபியைக் கேட்டா, அவர் 'எனக்குத் தெரியாது சார், அவர் பிரபலமானவராச்சேன்னு கூப்பிட்டேன்'னு சொல்றாரு. நல்ல பாலோட, அழுக்குத் தண்ணியைக் கலந்த மாதிரி ஆயிடுச்சு!" என்றார் சாரங்கபாணி, வருத்தத்துடன்.
"அவரோட இயல்பு அப்படித்தாங்க. அவர் எழுதறதும் அப்படித்தான். ஆனா, அதை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கு. உங்க இலக்கிய மன்றக் கூட்டங்கள்ள பேசறதுக்கு அவர் பொருத்தமா இருக்க மாட்டாருன்னு அன்னிக்கு நீங்க சொன்னப்பவே எனக்குத் தோணிச்சு. நீங்க அவரை ஏற்பாடு செஞ்சப்பறம், அவரைப் பத்தித் தப்பா சொல்லி, உங்களைக் கவலைப்பட வைக்க வேண்டாம்னுதான் நான் எதுவும் சொல்லல!" என்றாள் சுந்தரி.
"பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கறதில எவ்வளவு கவனமா இருக்கணுங்கறதுக்கு எனக்கு இது ஒரு பாடம்!" என்றார் சாரங்கபாணி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
No comments:
Post a Comment