முருகன் அலுவலகத்துக்கு வந்த நேரத்தில், அந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெறும் சபாபாதி என்ற ஊழியருக்கான வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அலுவலகத்தின் முன்னறையில், நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த ரவி, அலுவலகத்துக்குள் நுழைந்த முருகனைப் பார்த்து விட்டு, சற்று நேரம் வெளியே காத்திருக்கும்படி சைகை செய்தான். முருகன் வாயிற்படிக்கு வெளியே நின்றான்.
ஓய்வு பெறும் சபாபதியை வழியனுப்பிப் பாராட்டும் நிகழ்ச்சியின்போது, வழக்கம்போல், நிறுவன அதிபர் ஆறுமுகம் கண்கலங்கி விட்டார்.
"உங்களை மாதிரி ஊழியர்களோட உழைப்பாலதான் இந்த நிறுவனம் இவ்வளவு நல்லா வளர்ந்திருக்கு. இப்படிப்பட்ட அருமையான ஊழியர்களைப் பெற, நான் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும். நீங்க ஒவ்வொருத்தரும் ஓய்வு பெற்றுப் போகறப்ப, இந்த நிறுவனத்தைத் தாங்கிக்கிட்டிருக்கற ஒரு தூணை யாரோ அப்புறப்படுத்தற மாதிரி இருக்கு. ஆனா, புதுசா இங்கே வேலைக்கு வரவங்களும், தூண்களைப் போல வலுவா இந்த நிறுவனத்தைத் தாங்கறதால, இந்த நிறுவனம் எப்பவுமே வலுவா இருந்துக்கிட்டிருக்கு!" என்றார் ஆறுமுகம், உணர்ச்சிப் பெருக்குடன்.
நிகழ்ச்சி முடிந்ததும், ரவி அலுவலகத்துக்கு வெளியே வந்து, முருகனை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அலுவலகத்துக்கு வெளியே வந்ததும், முருகன் ரவியிடம், "உங்க முதலாளி இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுப் பேசறதைக் கேட்டப்ப, அவர் உண்மையாவே பேசறாரா, இல்லை டிராமா போடறாரான்னு முதல்ல எனக்கு சந்தேகம் வந்தது. ஆனா, அவர் உண்மையாவேதான் பேசினார்னு அப்புறம் புரிஞ்சுக்கிட்டேன்!" என்றான்.
"எனக்கு எப்பவுமே அது மாதிரி தோணினதில்ல! உனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அவர் பேச்சில மட்டும் இல்லாம, செயல்களிலேயும் உண்மையா நடந்துக்கறவரு. எங்க போட்டியாளர்கள் சில பேர் கொடுத்த பொய்யான தகவலை வச்சுக்கிட்டு, எங்க கம்பெனியிலேயும், சார் வீட்டிலேயும் வருமானவரித் துறை அதிகாரிகள் ரெண்டு மூணு தடவை சோதனை நடத்தி இருக்காங்க. ஆனா இங்கே தப்பா எதுவும் நடக்காததால, அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. சார் தொழிலை ரொம்ப நேர்மையா நடத்தறாரு. எந்த ஒரு சின்ன தப்பு கூடச் செய்ய மாட்டாரு. அதனாலதான், அவருக்குத் தொழில்லேயோ, சொந்த வாழ்க்கையிலேயோ எந்தப் பிரச்னையும் ஏற்படாம, எல்லாமே நல்லா நடந்துக்கிட்டிருக்குன்னு எனக்குத் தோணும்!" என்றான் ரவி.
"தன் நிறுவன வளர்ச்சிக்குத் தன்னோட ஊழியர்கள்தான் காரணம்னு உங்க முதலாளி சொல்றாரு. அவரோட நேர்மையான செயல்பாடுகளாலதான், அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாம, எல்லாம் நல்லாப் போயிட்டிருக்குன்னு நீ சொல்ற. உங்க ரெண்டு தரப்புமே, ஒத்தர் மத்தவருக்கு ஏத்தவரா இருக்கீங்க!" என்றான் முருகன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 66
வினைத்தூய்மை
குறள் 651;
துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
பொருள்:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை, ஆக்கத்தை (வளத்தை)க் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை, அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
No comments:
Post a Comment