"அப்படியா?" என்றான் கண்ணபிரான்.
இன்னும் சிறிது நேரம், தான் கேள்விப்பட்ட திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய 'சுவையான' தகவல்கள் பற்றிப் பேசி விட்டு ராம்பிரசாத் கிளம்பினான்.
ராம்பிரசாத் கிளம்பிச் சென்றதும், "நீங்க நல்லாப் படிச்சவர், அறிவாளி. சீரியஸான விஷயங்கள்ள ஆர்வம் உள்ளவர். இது மாதிரி உருப்படி இல்லாத விஷயங்களைப் பேசற இவர் எப்படி உங்களுக்கு நண்பரா அமைஞ்சாரு?" என்றாள் கண்ணபிரானின் மனைவி கிருத்திகா, சிரித்துக் கொண்டே.
"நண்பர்கள் பலவிதமா இருப்பாங்க. இவன் ஒரு விதம். அவ்வளவுதான். அவனுக்கு எது தெரியுமோ, எதில ஆர்வம் இருக்கோ, அதைப் பத்திதானே அவனால பேச முடியும்?" என்றான் கண்ணபிரான்.
"உங்க நண்பர்கள்ள பல பேர் தத்துவம், இலக்கியம் மாதிரி விஷயங்களைப் பேசறவங்க. மத்தவங்க அப்படி இல்லாட்டாலும், புத்திசாலிகள். அவங்களோட பழகிட்டு, இவரோட பழகறது உங்களுக்குக் கடினமா இல்லையா?"
சற்று யோசித்த கண்ணபிரான், "ராஜன்னு எனக்கு ஒரு நண்பன் இருந்தானே, உனக்கு நினைவிருக்கா?" என்றான்.
"ஏன் நினைவில்லாம? உங்களோட ரொம்ப நெருங்கின நண்பராச்சே அவர்! நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா, மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருப்பீங்க. கல்யாணம் ஆன புதுசில, 'என்ன இவரு, தனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, மனைவின்னு ஒருத்தி இருக்காங்கற நினைவே இல்லாம, தன் நண்பரோட மணிக்கணக்காப் பேசிக்கிட்டிருக்காரே'ன்னு வருத்தப்பட்டிருக்கேன். ஏன், உங்ககிட்ட சொல்லி சண்டை கூடப் போட்டிருக்கேன். ஏன் திடீர்னு அவரைப் பத்திக் கேக்கறீங்க?"
"ஏதோ ஒரு விஷயத்தில என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு, அவன் என்னோட நட்பை முறிச்சுக்கிட்டுப் போனதைப் பத்தி நான் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கேன்னு உனக்குத் தெரியும், இல்ல?"
"ஆமாம். இன்னிவரைக்கும், அவர் பிரிஞ்சு போனதைப் பத்தி நீங்க வருத்தப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கீங்க. இப்ப கூட, அவரைப் பத்திப் பேச்சை எடுக்கறப்ப, உங்க முகம் வாடிடுச்சே!"
"ஒருவேளை, இந்த ராம்பிரசாத் என்னோட சண்டை போட்டுட்டு, என் நட்பை முறிச்சுக்கிட்டுப் போனான்னு வச்சுக்கயேன், அது எனக்கு ஒரு இழப்பாகவே தெரியாது. ஏன்னா, அவன் எங்கிட்ட பேசறதெல்லாம் அர்த்தம் இல்லாத, உருப்படி இல்லாத விஷயங்களைப் பத்தித்தானே? அவனோட நட்பு முறிஞ்சாலும், அது எனக்கு எந்தத் துன்பத்தையும் கொடுக்காதுங்கறதால, அவனோட நட்பு ரொம்ப இனிமையானதுன்னு வச்சுக்கலாம் இல்ல?"
சற்று முன்பு வாடி இருந்த கண்ணபிரானின் முகத்தில், இப்போது சிரிப்பு இருந்தது. அவன் சிரிப்பில் கிருத்திகாவும் கலந்து கொண்டாள்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
பேதைகளுடன் (அறிவற்றவர்களுடன்) கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால், அவர்களிடமிருந்து பிரியும்போது, எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
No comments:
Post a Comment