Wednesday, November 23, 2022

838. செல்வகுமாரின் தேர்வு

மக்கள் நல்வாழ்வுக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான செல்வகுமார், ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறைக்குச் செல்ல நேர்ந்தபோது, தான் வகித்து வந்த முதல்வர் பதவிக்கு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் கந்தப்பன்.

கந்தப்பன் செல்வகுமாரின் அமைச்சரவையில் ஏதோ ஒரு துறைக்கு அமைச்சராக இருந்தார். செல்வகுமாரின் அரசில், செல்வகுமார் மட்டுமே அதிகாரமும் வல்லமையும் பெற்றவர், மற்றவர்கள் ஒன்று என்ற இலக்கத்துக்குப் பின் அணிவகுத்து நிற்கும் பூஜ்யங்கள் என்று கருதப்பட்டதால், கந்தப்பன் என்று ஒரு அமைச்சர் இருந்தது கூடப் பலருக்குத் தெரியாது.

"கட்சியில மூத்த தலைவர்கள் நாம இவ்வளவு பேர் இருக்கோம். அறிவு, அனுபவம் எதுவுமே இல்லாத இந்த ஆளை, ஐயா முதல்வர் ஆக்கிட்டுப் போயிட்டாரே!" என்று மூத்த தலைவர்கள் தங்களுக்குள் புலம்பினாலும், செல்வகுமாருக்கு அடிமைகளாக இருந்து பழகி விட்ட அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

துவக்கத்தில், தான் ஒரு சாதாரண மனிதன், ஐயாவின் கருணையால் முதல்வரானவன் என்று தன்னைப் பற்றி அடக்கமாகக் கூறிக் கொண்ட கந்தப்பன், சிறிது சிறிதாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.

ஒரு முறை சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்தித்து விட்டு வந்தவர், அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கச் செல்லவில்லை. மற்ற அமைச்சர்களும் செல்லக் கூடாது என்று அவர்களுக்கு ரகசியமாக உத்தரவு போட்டு விட்டார். 

அப்படி எந்த அமைச்சராவது சென்று பார்த்தால், அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் என்று கந்தப்பன் எச்சரித்திருந்ததால், மூத்த அமைச்சர்கள் கூடச் சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்திக்க முயலவில்லை.

சில சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று செல்வகுமாரைச் சந்தித்து, கந்தப்பனின் செயல்பாடு பற்றிக் கூறினர். 

"கொஞ்ச நாள் காத்திருங்க. சிறையிலிருந்துக்கிட்டே அவனைத் தூக்கி அடிக்கிறேன்!" என்று வீரமாகச் சூளுரைத்தார் செல்வகுமார்.

ந்தப்பனின் அதிகார மமதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கையில் போட்டுக் கொண்டு, கட்சியின் உயர்மட்டக் கூழுவைக் கூட்டிக் கட்சியின் நிரந்தரத் தலைவராக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த செல்வகுமாரை நீக்கி விட்டுத் தன்னைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.

கந்தப்பன் முதல்வராக இருந்ததுடன், கட்சித் தலைவராகவும் ஆகி விட்டதால், கந்தப்பனை எதிர்ப்பது கடினம் என்று புரிந்து கொண்டு, எல்லா அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் கந்தப்பனின் அதிகாரத்துக்குப் பணிந்தனர்.

அறிவும், அனுபவமும் இல்லாத நிலையில், கந்தப்பனின் ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் மிகுந்திருந்தன. ஊழல் புகார்களும் நிறைய எழுந்தன.

மக்கள் கந்தப்பனின் ஆட்சியின் மீது வெறுப்படைந்திருந்தாலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகும் தேர்தல் வரை அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர்.

சிறையில் செல்வகுமாரைச் சந்தித்த அவருடைய விசுவாசியான கருணாகரன், கந்தப்பனின் அத்துமீறல்களையும், தவறான செயல்பாடுகளையும் பற்றி அவரிடம் விரிவாகப் பேசினார்.

"தெரியும். ஜெயில்ல எனக்குச் செய்திப் பத்திரிகைகள் கொடுக்கறாங்க!" என்றார் செல்வகுமார், விரக்தியுடன்.

"என்ன ஐயா இது! கந்தப்பனோட அட்டகாசம் தாங்க முடியல. சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேர் அவனுக்கு எதிராத்தான் இருக்காங்க. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. அவனைக் கவுத்துடலாம்" என்றார் 

"கவுத்துட்டு? நமக்கு ரொம்பக் குறுகிய பெரும்பான்மைதான் இருக்கு. பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அவன் பின்னால போனாலும், நமக்குப் பெரும்பான்மை போயிடும். அப்புறம், இன்னொத்தரை வச்சு எப்படி ஆட்சி அமைக்க முடியும்? இப்போதைக்கு, நம்ம கட்சி ஆட்சி நடக்குதுன்னு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்!"

"என்னங்க, இப்படிச் சொல்றீங்க? அப்ப, அவனை எதுவும் செய்ய முடியாதா?"

"எனக்கு விசுவாசமா இருப்பான்னுதான் அவனைப் போட்டேன். அவன் ஒரு முட்டாளா இருக்கறது நமக்கு வசதியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, குரங்குக்குக் கள்ளு ஊத்திக் கொடுத்த மாதிரி ஆயிடுச்சு. இன்னும் ரெண்டு வருஷத்தில நான் வெளியில வருவேன். அதுக்கப்பறம் தேர்தலுக்கு ஒரு வருஷம் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது செய்ய முடியுமான்னு அப்புறம்தான் பாக்கணும்!" என்றார் செல்வகுமார்.

"அதுக்குள்ள, அவன் ஆட்சியையும், கட்சியையும் எந்த அளவுக்குச் சீரழிக்கப் போறானோ!" என்றார்  கருணாகரன், கவலையுடன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

பொருள்: 
பேதையின் (அறிவற்றவனின்) கையில் ஒரு பொருள் கிடைத்தால், (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கியது போன்று ஆகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...