"ஏற்கெனவே அஞ்சாறு நிறுவனங்களுக்குப் பொருளாதார ஆலோசகரா இருக்கீங்க. இப்படி ஊர் ஊராப் போய் செமினார்ல வேற பேசறீங்க. இதுல உங்களுக்குப் பெரிசா பணம் எதுவும் வரதில்ல. இது எதுக்கு?" என்றாள் அவர் மனைவி கமலா.
"நிறுவனங்களுக்குப் பொருளாதார ஆலோசகரா இருக்கறது என் தொழில். செமினார்கள்ள எல்லாம் பேசறது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த. என் செமினாருக்கு சிறு தொழிலதிபர்கள்ளேந்து, சாதாரண மக்கள் வரை பல பேர் வராங்க. பொருளாதாரம் பத்திப் பல அடிப்படையான விஷயங்களை நான் எளிமையா எடுத்துச் சொல்லி விளக்கறது ரொம்பப் பயனுள்ளதா இருக்கறதா பல பேர் எங்கிட்ட நேரில சொல்லி இருக்காங்க. சில பேர் கடிதம், ஈமெயில் மூலமா சொல்றாங்க. இதெல்லாம் எனக்கு ஒரு மனத் திருப்தியைக் கொடுக்குது. அதுக்குத்தான் இதையெல்லாம் செய்யறேன்."
"நீங்க சொல்றது சரிதான். இப்ப கூட, அதிக வட்டி கொடுக்கறதா சொன்ன நிறுவனங்கள்ள நிறைய பேர் முதலீடு செஞ்சு தங்களோட பணத்தை இழந்ததா அடிக்கடி செய்தி வந்துக்கிட்டிருக்கே!"
"என்ன செய்யறது? பணம் என்கிற வார்த்தைக்கே ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கு. அதிகமாப் பணம் கிடைக்கும்னா, மக்கள் வெளிச்சத்தைப் பார்த்து விளக்கில விழற விட்டில் பூச்சிகள் மாதிரி, சிந்திக்காம அங்கே போய் விழறாங்க. என்னால முடிஞ்சவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டிருக்கேன். அதிக வட்டி கொடுக்கறதெல்லாம் யாராலயும் தொடர்ந்து செய்ய முடியாதுங்கறதை நான் புள்ளி விவரங்கள், உதாரணங்களோட விளக்கறப்ப எல்லாரும் புரிஞ்சுக்கறாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்குப் பொருளாதார விஷயங்கள்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னுதான் இதையெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் அமுதன், பெருமையுடன்.
கணவரின் பெருமித உணர்வில் பங்கு கொள்வது போல், கமலா அவரைப் பெருமையுடன் பார்த்தாள்.
"'ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, தான் போய் விழுமாம் கழனிப்பானையில துள்ளி' ன்னு சொல்லுவாங்க. அது மாதிரி இருக்கு நீங்க செஞ்சிருக்கறது!" என்றாள் கமலா, அதிர்ச்சியுடனும், ஆத்திரத்துடனும்.
"இல்ல. அவனோட பிசினஸ் ஐடியா நல்லதாத்தான் தெரிஞ்சது. ஆரம்பத்தில முதலீடு செஞ்சா, கம்பெனி வளர்ந்து, பப்ளிக் இஷ்யூ வெளியிட்டு, ஸ்டாக் மார்க்கெட்ல லிஸ்ட் ஆனதும், பெரிய லாபம் கிடைக்கும்னு சொன்னான். ஆனா, ஆரம்பத்திலேயே மோசடி பண்ணிட்டான்! என்னை மாதிரி ஆறு பேர் ஆளுக்கு அம்பது லட்ச ரூபாய் முதலீடு செஞ்சோம். அதில, என்னைப் பார்த்து முதலீடு செஞ்சவங்க ரெண்டு பேர்! ஒரு வருஷத்துக்குள்ளேயே மொத்தப் பணமும் போயிடுச்சு. முதலீடு செஞ்ச பணம் எல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. அவனையும் காணோம். வெளிநாட்டுக்கு ஓடிட்டானோ என்னவோ தெரியல. கம்பெனி ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு எதுவும் தெரியல. அவங்களுக்கே ரெண்டு மாசமா சம்பளம் வரலையாம். போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். 'நீங்க கூடவா சார் இப்படி ஏமாந்தீங்க?'ன்னு அசிஸ்டன்ட் கமிஷனர் என்னைப் பார்த்து சிரிக்கிறாரு!" என்றார் அமுதன், அவமானத்துடன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால், அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.
No comments:
Post a Comment