Friday, November 18, 2022

644. பேராசிரியர் கற்பித்த பாடம்!

எங்கள் கல்லூரியின் விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் உணவுக் கூடத்தில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு ஒப்பந்ததாரரை முடிவு செய்ய வேண்டும். 

அதற்காக விண்ணப்பித்திருந்த ஐந்து பேரிடமும் பேசி அவர்களில் ஒருவரை  முடிவு செய்யும் பொறுப்பை விடுதியின் உணவுப் பிரிவு செயலாளரான எனக்கும் விடுதியின் வார்டனான எங்கள் ஆங்கிலப் பேராசரியருக்கும் எங்கள் கல்லூரி முதல்வர் அளித்திருந்தார்.

எங்கள் ஆங்கிலப் பேராசிரியர் வகுப்பில் முழுவதும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். தப்பித் தவறி கூட ஒரு தமிழ் வார்த்தையை அவர் பேசி நான் கேட்டதில்லை. 

 விண்ணப்பதாரர்களைச் சந்தித்துப் பேச, அவர் அறையிலிருந்து விடுதி அலுவல் அறைக்கு வரும்போது கூட அவர் என்னிடம் ஆங்கிலத்தில்தான் பேசிக்  கொண்டிருந்தார். நான் தட்டுத் தடுமாறி அவருக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

விண்ணப்பதாரர்களுடன் அவர் எப்படிப் பேசுவாரோ என்ற மெல்லிய அச்சம் எனக்கு எழுந்தது. அநேகமாக நானேதான் அவர்களிடம் பேசி முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

முதல் விண்ணப்பதார் அறைக்குள் வந்ததும் அவசரமாக நானே முதலில் பேசி அவருக்கு எங்கள் தேவைகளை விளக்க ஆரம்பித்தேன். அவர் தலையாட்டிய விதத்திலிருந்து நான் விளக்கிக் கூறியவற்றை அவர் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டார் என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை .

சட்டென்று பேராசிரியர் என்னை இடைமறித்து, "நீ சொன்னது அவருக்குச் சரியாகப் புரியலை போல இருக்கு!" என்று என்னிடம் ஆங்கிலத்தில் கூறி விட்டு, விண்ணப்பதாரரிடம் பேச ஆரம்பித்தார். - தமிழில்!

முதல் முறையாக அவர் தமிழில் பேசியதைக் கேட்க எனக்கு வியப்பாக இருந்தது. அதை விட அவர் ஒரு குழந்தைக்கு விளக்குவது போல் மிகவும் எளிதாக விளக்கியது எனக்கு இன்னும் வியப்பாக இருந்தது.

நான் மௌனமாக அவர் பேசியதைக் கேட்டுக் கொடிருந்தேன். எங்கள் தேவைகள் பற்றிப் பேராசிரியர் விளக்கியதும், தான் சேவை வழங்கும் விதம் பற்றி அந்த விண்ணப்பதாரர் கூறினார். அவர் கூறியவற்றைக் குறித்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்தோம்.

அந்த விண்ணப்பதாரர் சென்றதும், "என்னப்பா! என் தமிழ் ஒண்ணும் மோசமா இல்லையே!" என்றார் பேராசிரியர் சிரித்துக் கொண்டே.

"ரொம்பத் தெளிவா, எளிமையா விளக்கினீங்க சார்!" என்றேன் நான் உண்மையான உணர்உடன்.

"நான் வகுப்பில ஆங்கிலத்தில மட்டுமே பேசறதால எனக்கு ஆங்கிலத்தைத் தவிர வேற எந்த மொழியும் தெரியாதுன்னு நிறைய மாணவர்கள் நினைச்சக்கிட்டிருக்கிறது எனக்குத் தெரியும்!" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

பிறகு, "ஒரு விஷயம். நீ அவர்கிட்ட பேசறப்ப, நிறைய ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தின. இது மாதிரி பேசி நமக்குப் பழக்கமாயிடுச்சு. ஆனா அதிகம் படிக்காதவங்களுக்கு நாம பேசற எல்லா வார்த்தைகளும் புரியும்னு சொல்ல உடியாது. உதராணமா, நீ 'பர் ஹெட்'னு சொன்னது அவருக்குப் புரியலைங்கறதை நான் கவனிச்சேன். அதனாலதான் நான் பேசறப்ப 'தலைக்கு'ன்னு சொன்னேன். உன்னைக் குத்தம் சொல்லல. இது மாதிரி வியங்கள்ள கவனமா இருக்கணுங்கறதுக்காகச் சொன்னேன்!" என்றார் என்னிடம்.

ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் விண்ணப்பதாரருக்குப் புரியாத மொழியில் அவர் பேசுவார் என்று நான் அஞ்சிக் கொண்டிருந்தபோது, நானே இன்னும் எளிமையாகவும் இன்னும் புரியும்படியும் பேச வேண்டும் என்று அவர் எனக்குச் சுட்டிக் காட்டிது எனக்குச் சற்று அவமானமாக இருந்தாலும், ஒரு விதத்தில் சற்று விசித்திரமாகவும் இருந்தது. நான் எதிர்பார்த்து பயந்தது என்ன, நடந்தது என்ன!

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 65
சொல்வன்மை

குறள் 644:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

பொருள்:
எவரிடம் பேசகிறோமோ அவருடைய திறனை அறிந்து பேச வேண்டும்.; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...