Friday, November 11, 2022

833. திருமண ஆண்டு விழா

"நம்ம இருபத்தைஞ்சாவது திருமண ஆண்டு விழா வருது. அதைக் கொண்டாடறதைப் பத்தி, ரகுவோ, மாலாவோ ஏதாவது சொன்னாங்களா?" என்றான் யோகேஷ்.

'எப்படிச் சொல்லுவாங்க?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கல்யாணி, "இல்லை" என்றாள்.

"நன்றி கெட்ட ஜன்மங்க! இவங்களைப் படிக்க வச்சுக் கல்யாணம் செஞ்சு வச்சதுக்குக் கொஞ்சம் கூட நன்றி இல்லை!"

"ஏங்க, பெத்த பிள்ளைங்களைப் பத்திப் பேசற பேச்சா இது? எல்லாப் பெற்றோர்களும் செஞ்சதைத்தானே நாமும் செஞ்சோம்? இப்ப அவங்க நல்லா இருக்காங்கன்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு..."

"பெற்றோர்கள்னு உன்னையும் ஏன் சேத்து சொல்லிக்கற? நீ என்ன செஞ்சே? சோறு பொங்கிப் போட்ட. அதைத் தவிர வேறு என்ன செஞ்சே? செஞ்சதெல்லாம் நான்தானே!"

யோகேஷின் இது போன்ற பேச்சுக்களைக் கேட்டுப் பழகி விட்டதால், கல்யாணிக்கு இது புதிதாக இல்லை. ஆயினும், காயப்படுவது பழகி விட்டாலும், கசையடி விழும் ஒவ்வொரு முறையும் வலிக்கத்தானே செய்யும்?

மனைவியை சமைத்துப் போடும், வீட்டு வேலைகள் செய்யும் ஒரு இயந்திரமாகவும், தேவைப்படும்போதெல்லாம் உடற்பசியைப் போக்கப் பயன்படுத்தப்படக் கூடிய உணவுச்சாலையாகவுமே நினைத்து இருபத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ன்று இரவு அமெரிக்காவில் இருக்கும் மகள் மாலாவிடமிருந்து ஃபோன் வந்தபோது, "எங்களோட இருபத்தைஞ்சாவது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடறதைப் பத்தி நீயும், சுரேஷும் பேசவே இல்லையேன்னு உங்கப்பா குறைப்பட்டுக்கறாருடி!" என்றாள் கல்யாணி.

"அம்மா! அப்பா உன்னையோ, எங்களையோ நல்லா வச்சுக்கணும்னு எப்பவுமே நினைச்சதில்ல. எங்க எதிர்காலத்துக்காகப் பணம் சேர்க்கணும்னு யோசிக்காம, குடிச்சுக்கிட்டும், கும்மாளம் போட்டுக்கிட்டும், சம்பாதிச்ச பணத்தையெல்லாம் தொலைச்சாரு. 

"நாங்க ரெண்டு பேருமே எஞ்சினியரிங் படிக்கணும்னு ஆசைப்பட்டோம். அதுக்கெல்லாம் எங்கிட்ட பணம் இல்லேன்னுட்டாரு. எஜுகேஷன் லோன் வாங்கிப் படிக்கறோம்னு சொன்னப்ப, அதுக்கெல்லாம் நான் காரன்டி கையெழுத்துப் போட மாட்டேன்னுட்டாரு. 

"மாமாதான் பணம் கொடுத்து ரகுவை எஞ்சினியரிங் படிக்க வச்சாரு. அவன் படிச்சு, மும்பையில ஒரு நல்ல வேலை தேடிக்கிட்டுப் போயிட்டான். நான் பி.எஸ்.சிதான் படிச்சேன். நான் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, என் வீட்டுக்காரரோட அமெரிக்காவில இருக்கேன். 

"இப்ப கூட, நான் உங்கிட்டதான் ஃபோன்ல பேசறேன். எப்பவாவது அப்பாகிட்ட பேசினாக்கூட, 'அமெரிக்காவில இருந்து என்ன பிரயோசனம்? பெத்து வளர்த்த அப்பாவுக்குப் பத்து காசு அனுப்பணும்னு தோணுதா?'ன்னு கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எங்கிட்ட சண்டை போடறாரு. அதனால, நான் அவர்கிட்ட பேசறதையே விட்டுட்டேன். 

"திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடறதில உனக்கு ஆர்வம் இருந்தா சொல்லு. நான் அங்கே வந்து சுரேஷோட சேர்ந்து அதை நல்லா நடத்தி வைக்கறேன். அப்பா குறைப்பட்டுக்கறாருங்கறதுக்காக என்னால எதையும் செய்ய முடியாது'"

பொரிந்து தள்ளி விட்டாள் மாலா.

கல்யாணி மாலாவுடன் ஃபோனில் பேசி முடித்ததும், அங்கே வந்த யோகேஷ், "என்ன சொல்றா உன் பொண்ணு, வெட்டிங் ஆனிவர்ஸரி பத்தி?" என்றான்.

"வந்து நடத்தி வைக்கிறாளாம்!" என்றாள் கல்யாணி, கேலியான குரலில், யோகேஷை முறைத்துப் பார்த்தபடி.

'ஒரு மனுஷன் இப்படியா இருப்பாரு!' என்ற இகழ்ச்சி கல்யாணியின் பார்வையில் இருந்ததை யோகேஷ் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பு இல்லை!

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 84
பேதைமை

குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

பொருள்: 
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேட வேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்பு காட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...