"கும்பகோணம். நீங்க?" என்றான் குருசாமி.
"நானும் கும்பகோணம்தான் போறேன். நீங்க எங்கேந்து வரீங்க?"
"நாங்க சென்னையிலேந்து வரோம். ஆனா சிதம்பரம் போயிட்டு, இப்ப அங்கேந்து வரோம்."
குருசாமி 'நாங்க' என்று கூறியது அவர் பக்கத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்த மனிதரையும் சேர்த்து என்று அந்தப் பயணி புரிந்து கொண்டார்.
"நான் பூந்தோட்டம்கற ஊர்லேந்து வரேன். பூந்தோட்டத்திலேந்து அஞ்சு மைல் தள்ளி இருக்கற ஒரு கிராமத்திலேந்து வரேன். அங்கேந்து பூந்தோட்டத்துக்கு சைக்கிள்ள வந்து, பூந்தோட்டம் ஸ்டேஷன் பக்கத்தில எனக்குத் தெரிஞ்சவ கடையில சைக்கிளை வச்சுட்டு, அங்கேந்து ரயிலேறி மாயவரத்துக்கு வந்து, மாயவரத்திலேந்து இந்த ரயிலேறி வரேன்!" என்றார் அந்தப் பயணி, தொடர்ந்து.
"அவ்வளவு கஷ்டப்பட்டு வரணுமா?"
"என்ன செய்யறது? எங்க ஊர்லேந்து கும்பகோணம் 18 மைல்தான். ஆனா, பஸ் வசதி இல்லாததால, ரெண்டு ரயில் ஏறி, அம்பது மைல் சுத்தி வர வேண்டி இருக்கு. "
"இவ்வளவு கஷ்டப்பட்டு வரீங்கன்னா, ஏதாவது முக்கியமான வேலையாத்தான் இருக்கும்!" என்றான் குருசாமி.
"ஆமாம்" என்ற பயணி, "ஆமாம். நீங்க சென்னையிலேந்து வரதால கேட்கறேன். நீங்க புலவர் முருகப்பனோட பேச்சையெல்லாம் கேட்டிருக்கீங்களா?" என்றார்.
குருசாமி சற்று வியப்புடன், "சென்னையில இருந்துக்கிட்டு அவரோட சொற்பொழிவைக் கேக்காம இருக்க முடியுமா? அவரோட கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேக்க வெளியூர்லேந்தெல்லாம் கூட வருவாங்களே! ஏன் கேக்கறீங்க?" என்றார்.
"அவர் சொற்பொழிவு அவ்வளவு நல்லா இருக்குமா என்ன?"
"அவர் கம்பராமாயணம் சொல்றதைக் கேட்டா, நாத்திகர்கள் கூட ராம பக்தர்கள் ஆயிடுவாங்க! அவ்வளவு அழகாப் பேசுவாரு. உங்களுக்கு அவரைப் பத்தி எப்படித் தெரியும்?"
"அவரைப் பத்தித்தான் பேப்பர்ல அடிக்கடி வருதே. நானும் ரேடியோவில அவர் சொற்பொழிவை ஒலிபரப்ப மாட்டாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கேன். இதுவரை அவங்க ஒலிபரப்பல. எங்க ஊர்லேந்து சென்னைக்குப் போய் விட்டு வரவங்க சில பேர் அவர் பேச்சைக் கேட்டுட்டு வந்து, அவர் பேச்சு ரொம்ப நல்லா இருக்குதுன்னு சொல்லுவாங்க. அதனால, எனக்கும் அவர் பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப நாளா ஆவல். சென்னைக்குப் போக எனக்கு இதுவரையிலும் சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனா, அவர் பேச்சைக் கேட்க, இப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு!" என்றார் பயணி, திடீர் உற்சாகத்துடன்.
"எப்படி?" என்றான் குருசாமி.
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்து கண்களை மூடிக் கொண்டிருந்தவரும், விழித்துக் கொண்டு அவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தார்.
"முருகப்பன் கும்பகோணத்துக்கு வராரே! இன்னிக்கு சாயந்திரம் அவர் பேச்சு இருக்கு. அதைக் கேக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன்!" என்றார் பயணி.
"இன்னிக்கு சாயந்திரம் நீங்க அவர் பேச்சைக் கேக்கலாம். ஆனா, இப்பவே அவரை சந்திக்கலாம். இவர்தான் புலவர் முருகப்பன்!" என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவரை அறிமுகப்படுத்தினான் குருசாமி.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 65
சொல்வன்மை
குறள் 643:
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
பொருள்:
சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
No comments:
Post a Comment