Thursday, November 3, 2022

828. வசந்தாவின் வேண்டுகோள்.

"சார்! செல்வகுமாரோட மனைவி வந்திருக்காங்க!" என்றான் மானேஜிங் டைரக்டர் சந்தானத்தின் உதவியாளர் செந்தில்.

"அவங்க எதுக்கு என்னைப் பார்க்க...." என்று சந்தானம் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவர் அறைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்த செல்வகுமாரின் மனைவி  வசந்தா சந்தானத்தின் காலில் விழுவதுபோல், அவருடைய பெரிய மேஜையின் முன்னால் விழுந்தாள்.

"ஐயா! என் வீட்டுக்காரர் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாது. ஆனாலும் நீங்கதான் பெரிய மனசு பண்ணி அவரை மன்னிக்கணும்!" என்று உரத்த குரலில் கதறினாள் வசந்தா.

பதைபதைப்புடன் தன் இருக்கையிலிருந்து எழுந்த சந்தானம், "என்னம்மா இதெல்லாம்? எழுந்திருங்க!" என்றார்.

செந்திலும் அவள் அருகில் வந்து, "எழுந்திருங்கம்மா! இதென்ன ஆஃபீஸ்ல வந்து இப்படியெல்லாம் செய்யறீங்க?" என்றான் அதட்டலான குரலில்.

வசந்தா எழுந்து கொண்டு மேஜைக்கு முன்னால் நின்று விம்மிக் கொண்டிருந்தாள்.

"இங்க பாருங்க! செல்வகுமாரை சார் எவ்வளவோ நம்பிதான் அக்கவுன்டன்ட்டா வச்சிருந்தாரு. ஆனா அவரு பொய்க்கணக்கு எழுதி பணத்தைக் கையாடி இருக்காரு. ஆடிட்டிங்ல இதைக் கண்டு பிடிச்சப்பறம், முந்தைய வருஷங்களோட கணக்கை எடுத்துப் பார்த்தா, அஞ்சாறு வருஷமா இப்படி செஞ்சுக்கிட்டு வந்திருக்காருன்னு தெரியுது. அதுக்கு முன்னால கூட செஞ்சிருக்கலாம். அந்தக் கணக்கையெல்லாம் தேடி எடுக்கணும்! இந்த அஞ்சு வருஷத்திலேயே அவரு மூணு லட்சம் ரூபா மோசடி பண்ணி இருக்காருன்னு தெரிய வந்திருக்கு. இப்ப நீங்க வந்து அழுது  என்ன பிரயோசனம்?" என்றான் செந்தில்.

வசந்தா செந்திலை முறைத்து விட்டு, சந்தானத்திடம் திரும்பி, "சார்! அவர் உங்களுக்கு செஞ்சது பெரிய துரோகம்தான். அவரை இனிமே வேலையில வச்சுக்க மாட்டீங்க. ஆனா போலீஸ் கேஸ் எல்லாம் வேண்டாம்யா! அவரை போலீஸ்ல கூட்டிக்கிட்டுப் போனா நான் தூக்குல தொங்குவேன். அவர் இவ்வளவு வருஷம் வேலை செஞ்சதை மனசில வச்சுக்கிட்டு அதை மட்டும் செய்யாம இருங்க. அவ்வளவுதான் நான் கேக்கறது" என்று கூறிக் கைகூப்பினாள்.

"போலீஸ்ல புகார் கொடுக்கலேன்னா அவன் எடுத்த பணத்தை எப்படித் திருப்பி வாங்கறது?" என்றார் சந்தானம்.

"சார்! அதுக்கு நான் உத்தரவாதம். அவரு எல்லாப் பணத்தையும் சூதாட்டத்தில இழந்துட்டாரு. ஆனா, நான் பணத்தை எப்படியாவது கொடுத்துடறேன். எங்க பையன் இப்பதான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்கான். அவன் சம்பளத்திலேந்து மாசம் பத்தாயிரம் ரூபா கட்டி மூணு வருஷத்தில மொத்தப் பணத்தையும் கொடுத்திடறேன்!"

"அதெல்லாம் சரியா வராதும்மா!" என்றார் சந்தானம்.

வசந்தா மீண்டும் விம்மி அழ ஆரம்பித்தாள். 

"அவர் மேல போலீஸ் கேஸ் இருக்கறது தெரிஞ்சா, என் பையனோட வேலையும் போயிடும். அப்புறம் நாங்க  எல்லாருமே விஷம் குடிச்சு சாக வேண்டியதுதான். கடவுளே! ஏன் என் புருஷனுக்கு இப்படி ஒரு புத்தியைக் கொடுத்தே!" என்று கூறியபடியே தலையில் வேகமாக அடித்துக் கொண்டு இன்னும் பெரிதாக அழுதாள்.

"நீங்க வீட்டுக்குப் போங்கம்மா! நான் யோசிச்சு சொல்றேன்" என்றார் சந்தானம், வசந்தா அழுது புலம்பியதைச் சகிக்க முடியாமல்.

வசந்தா சென்றதும், "சார்! இவங்க அழறதைப் பார்த்து இரக்கம் காட்டாதீங்க. போலீஸ்ல புகார் கொடுத்தாதான் பணம் திரும்பக் கிடைக்கும்" என்றான் செந்தில்

"இல்லை செந்தில்! எனக்கு அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. அவங்க சொல்றபடி மாசம் பத்தாயிரம் ரூபான்னு கொடுக்கட்டும். செல்வகுமாருக்கு வேலை போன தண்டனை போதும். மாசம் பத்தாயிரம் ரூபாய்னு முப்பது மாசம் கொடுக்க ஒப்புத்துக்கிட்டு செல்வகுமார், வசந்தா ரெண்டு பேரும் கையெழுத்து போட்டு ஒரு அக்ரிமென்ட் வாங்கிக்கங்க. மாசா மாசம் அஞ்சாம் தேதக்குள்ள பத்தாயிரம் ரூபாயை ஆஃபீஸ்ல கொண்டு வந்து கட்டிடணும், ஒரு மாசம் தவறினாலும், அக்ரிமென்ட்படி சட்ட நடவடிக்கை எடுப்போம்னு கண்டிப்பா சொல்லிடுங்க!" என்றார் சந்தானம்.

"என்ன செந்தில், பத்து தேதி ஆச்சு. வசந்தா இன்னும் பத்தாயிரம் ரூபா கட்டலியே! முதல் மாசமே இப்படிப் பண்றாங்களே! ஃபோன் பண்ணிக் கேட்டீங்களா?" என்றார் சந்தானம். 

"நேரிலேயே போய்க் கேட்டுட்டு வந்துட்டேன் சார்! அந்த அம்மா பேசற தோரணையைப் பாத்தா அவங்க பணம் கட்டுவாங்கன்னு எனக்குத் தோணல!" என்றான் செந்தில்.

"அன்னிக்கு அவ்வளவு தூரம் அழுது கெஞ்சினாங்க?"

"எல்லாம் வேஷம் சார்! நான் விசரிச்சதில செல்வகுமார் கையாடின பணத்தில தன் மனைவிக்கு நகைகள் வாங்கிப் போட்டிருக்கான். அவன் சூதாட்டத்தில பணத்தை விட்டுட்டான்னு அவன் மனைவி சொன்னது பொய். மாட்டிக்கிட்டான், வேலை போச்சு. ஆனா ஜெயிலுக்குப் போகக் கூடாதுங்கறதுக்காக அந்த வசந்தா உங்க கிட்ட அழுது கெஞ்சற மாதிரி வேஷம் போட்டிருக்காங்க. கையாடின பணத்தைத் திருப்பிக் கொடுக்கற எண்ணம் அவங்களுக்கு இல்லை!"

"பணம் கட்டலேன்னா அக்ரிமென்ட்படி நடவடிக்கை எடுப்போம்னு சொன்னியா?"

"சொன்னேன். அவங்க அதுக்கெல்லாம் பயப்படற மாதிரி தெரியல. கோர்ட்ல கேஸ் போட்டா அது வருஷக்கணக்கா இழுத்துக்கிட்டுப் போகும்னு அவங்களுக்குத் தெரியும். தன் புருஷன் ஜெயிலுக்குப் போகாம காப்பாத்தணும்னு நினைச்சாங்க. அதுக்காக நல்லா நடிச்சு உங்க அனுதாபத்தைத் தேடிக்கிட்டாங்க. அதோட அவங்க நோக்கம் நிறைவேறிடிச்சு. அவ்வளவுதான்!" என்றான் செந்தில்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு

குறள் 828:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

பொருள்: 
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...