"குமரேசனா?" என்று புருவத்தை நெரித்த வையாபுரி, "சரி. ஃபோனைக் கொடு" என்று சங்கரிடமிருந்து கைபேசியை வாங்கிக் கொண்டார்.
"எப்படி இருக்கீங்க குமரேசன்?" என்றார் வையாபுரி.
"உங்க ஆசியினால நல்லா இருக்கேன் ஐயா! நீங்க எங்கிட்ட ஃபோன்ல பேசுவீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்லை!" என்றார் குமரேசன்.
"நான் பேசுவேன்னு எதிர்பாக்கலேன்னா, அப்புறம் எதுக்கு ஃபோன் பண்ணினீங்க? ஏதோ நான் ஃபோன் பண்ணி உங்ககிட்ட பேசின மாதிரி பேசறீங்க!"
"என்னையா இவ்வளவு கோபமாப் பேசறீங்க! நீங்க எங்கிட்ட பேசுவீங்களோ பேச மாட்டீங்களோன்னு பயந்துகிட்டேதான் ஃபோன் பண்ணினேன்னு சொல்ல வந்தேன்!"
"சரி. என்ன விஷயம் சொல்லுங்க?" என்றார் வையாபுரி.
"நீங்க என்மேல கோபமாத்தான் இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, கட்சியில உங்களுக்குன்னு ஒரு இடம் அப்படியேதான் இருக்கு. அது தலைமைப் பீடம்! நீங்க எப்ப வந்தாலும், அந்த இடம் உங்களுக்கு இருக்கும்!" என்றார் குமரேசன்.
வையாபுரி பெரிதாகச் சிரித்தார்.
"தலைமைப் பதவிக்கு நான் வரக் கூடாதுன்னுதானே, கட்சியில தீர்மானம் போட்டு என்னை நீக்கினீங்க? இப்ப, தலைமைப் பதவிக்கு நீங்க வந்துட்டீங்க. அப்புறம் தலைமையிடம் எப்படிக் காலியா இருக்கும்?" என்றார் வையாபுரி.
"ஐயா! கட்சியில சில பேர் தீர்மானம் கொண்டு வந்தாங்க. நான் அதை ஆதரிக்கல. ஆனா, தீர்மானம் ஒருமனதா இருக்கணும்னு மூத்த தலைவர்கள் சொன்னதுக்காக, நான் எதிர்த்து ஓட்டுப் போடாம, நடுநிலையா இருந்தேன். அதுக்கப்புறம், கட்சியில எல்லோரும் சேர்ந்து என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கினாங்க. வேற வழியில்லாம, அதை ஏத்துக்கிட்டேன். நான் பொதுச் செயலாளர்தான். நீங்க வந்தா, தலைவர்னு ஒரு பதவியை உருவாக்கி, அதில உங்களை உட்கார வைப்பேன். உங்க கட்டளைப்படி கட்சியை வழிநடத்துவேன்!"
"போதும், குமரேசன். வில்லை ரொம்ப வளைக்காதீங்க. ஒடிஞ்சுடப் போகுது!" என்று சொல்லி ஃபோனை வைத்தார் வையாபுரி.
ஃபோனை வைத்ததும், சங்கரைப் பார்த்துச் சிரித்த வையாபுரி, "கேட்ட இல்ல? உனக்குத் தெரியணும்னுதான் ஃபோனை ஸ்பீக்கர்ல போட்டேன். நீ என்ன நினைக்கற?" என்றார்.
"ஐயா! உங்களுக்கு யோசனை சொல்ற அளவுக்கு எனக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. ஆனா, கட்சியிலேந்து உங்களை நீக்கினப்பறம், நீங்க பலவீனமாகிட்டதா ஊடகங்கள்ள சொல்றாங்க. நாம புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சு, அதை வளர்க்கறது ரொம்ப கஷ்டம். குமரேசன் இவ்வளவு தூரம் இறங்கி வரப்ப, அவரோட யோசனையை நீங்க பரிசீலிக்கலாமே!" என்றார் சங்கர், தயக்கத்துடன்.
"சங்கர்! தான் தலைமையிடத்துக்கு வரணுங்கறதுக்காக, குமரேசன் எப்படி திட்டம் போட்டு என்னைக் கவிழ்த்தார்ங்கறது உனக்குத் தெரியும், ஏன், உலகத்துக்கே தெரியும். ஆனா, என்னை வெளியில தள்ளினதால, கட்சியோட ஓட்டு வங்கி பிரிஞ்சுடுச்சுங்கறது இப்ப அவருக்குத் தெரிஞ்சு போச்சு. அதனாலதான், என்னை மறுபடி கட்சியில சேத்துக்கிட்டு, பெயரளவுக்கு என்னைத் தலைவராக்கிட்டு, கட்சியில தான் அதிகாரம் செலுத்தலாம், ஓட்டு வங்கியையும் மீட்டு எடுத்துடலாம்னு கணக்குப் போட்டு, எங்கிட்ட ரொம்ப மதிப்பும் மரியாதையும் இருக்கற மாதிரி நடிக்கறாரு. அவர் அழைப்பை ஏத்துக்கிட்டு நான் மறுபடியும் கட்சியில சேர்ந்தா, இதுக்கு முன்னாடி நடந்த அவமானத்தை விட மோசமான அவமானம் எனக்கு நடக்கும். எனக்கு அரசியல்ல எதிர்காலம் இல்லாம போனாலும் போகட்டும். ஆனா, குமரேசனோட போலிப் பணிவைப் பாத்து நான் ஏமாறத் தயாராயில்ல!" என்றார் வையாபுரி, உறுதியுடன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 83
கூடா நட்பு
குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
No comments:
Post a Comment